தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருணா பப்ளிகேஷன் வெளியிட்ட, 'காஞ்சி பெரியவரின் ஆன்மிக முத்துக்கள்' நூலிலிருந்து:

மனிதனுக்கு தயை, சாந்தி, அநசுயை, சவுசம், அநாயாசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருகா என, எட்டு குணங்கள் உள்ளன.

தயை - சர்வ உயிர்களிடமும் அன்பு கொள்வது; சாந்தி  - அமைதி. விதியின் காரணமாக நமக்கு ஏற்படும் நோய், விபத்து, பணக் கஷ்டம் போன்ற துன்பங்களை பொறுத்துக் கொள்வதும், துன்பம் செய்வோரை மன்னித்து விடுதலும் அமைதியின் குணம்.

அநசுயை - பொறாமைப்படாமல் இருப்பது. சவுசம் என்பது, 'சுசி' என்பதிலிருந்து வந்தது. சுசி என்றால் சுத்தம்! ஸ்நானம், வஸ்திரம், ஆகார முறை எல்லாம் சவுசம் என்பதில் வரும்.

அநாயாசம் என்பது, 'டேக் இட் ஈஸி' என்பார்களே... அது தான், அநாயாசம். ஆயாசம் இல்லாமல், அதாவது, எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், லேசாக இருப்பது அநாயாசம்.

மங்களம் - ஆனந்தமாக, அதிலேயே ஒரு நிலையாக இருப்பது.

அகார்ப்பண்யணம் - கருமித்தனம் இல்லாமல் இருப்பது. கிருபணன் என்றால் உலோபி; கருமி!

இந்தக் கருமித் தனத்திற்கு, கார்ப்பண்யம் என்று பெயர். அப்படி கருமித் தனம் இல்லாமல் தான, தர்ம சிந்தனையோடு இருப்பது தான் அகார்ப்பண்யம்.

அஸ்ப்ருகா - எட்டு குணத்தில் கடைசி. 'ஸ்ப்ருகா' என்றால் பற்று; ஆசை! எதிலும் பற்றில்லாமல் இருப்பதே, அஸ்ப்ருகா!

பழம் பெரும் நடிகர், டி.வி.என்., என்று அழைக்கப்படும் டி.வி.நாராயணசாமி, நாடக நடிகர் மற்றும் தி.மு.க.,வின் ஆரம்ப காலப் பேச்சாளர்; கட்சி நாடகங்களையும் நடத்தி வந்தவர். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடன் பிறந்த தங்கையை திருமணம் செய்தவர். இவர் எழுதிய, 'நடிகமணி டி.வி.நாராயணசாமி' என்ற நூலிலிருந்து:

கடந்த, 1964ம் ஆண்டு, ஒரு நாள், மாலையில் படப்பிடிப்புக்குச் சென்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை; இந்நிலையில், கார் சத்தம் கேட்டு வெளியே வந்த போது, கருணாநிதியும், அவரது மருமகன் மாறனும் வந்து கொண்டு இருந்தனர். அவர்களை வரவேற்று, 'என்னங்க இந்த நேரத்தில...' என்றேன்.

உடனே, 'ஓ'வென கதறி அழ ஆரம்பித்தார் கருணாநிதி. பதறிப் போன நான், அவரை அமைதிப்படுத்தி, 'விஷயத்தைச் சொல்லுங்க...' என்றேன்.

அவர் மீண்டும் விம்மலுடன், 'அண்ணாதுரை என்னைத் திட்டி விட்டார்...' என்று கூறி, அழத் துவங்கினார். உடனே நான், 'நம்ம அண்ணாதுரை தானே திட்டினார்; அதற்கென்ன, பொறுமையா இருங்க...' என்று சமாதானப்படுத்தி, 'அண்ணாதுரை எதுக்காக திட்டினார்?' என்று கேட்டேன்.

'கட்சிக்கு உன்னால் நன்மை இருப்பது போல், தீமையும் இருக்கிறது...' என்று திட்டி விட்டார். அதனால, பொருளாளர் பதவியை ராஜினாமா செய்யப் போறேன்...' என்றார்.

'பொறுமையாக இருங்க; அண்ணாதுரை நம்மைக் கண்டிக்காமல் வேறு யாரைக் கண்டிப்பார்... எல்லாம் சரியாகிடும். ராஜினாமா என்றெல்லாம் பேசாதீர்கள்...' என்று சாந்தப்படுத்தினேன்.

அதுவரை பேசாதிருந்த மாறன், 'இல்லண்ணே... இனி மேல் சரிப்பட்டு வராது...' என்றார்.

உடனே நான், 'தம்பி... நீங்க சின்னப் பையன்; பேசாம விடுங்க...' என, சற்று அழுத்தமாக கூறவும், மவுனமானார் மாறன்.

உணர்ச்சி வசப்படக்கூடியவர் கருணாநிதி. அவர் உணர்ச்சி வேகத்தில் சொன்னதை நான் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில், படப்பிடிப்புக்குச் சென்றிருந்த எஸ்.எஸ்.ஆர்., வந்து விட்டார். அப்போது நள்ளிரவு, 1:00 மணி. கருணாநிதியைப் பார்த்து, 'என்ன... இந்நேரத்தில...' எனக் கேட்ட எஸ்.எஸ்.ஆரிடம், விவரத்தைக் கூறினேன். அவர் கருணாநிதியை நோக்கி, 'ராஜினாமாவா... அதெல்லாம் நம்மகிட்டே வேண்டாம்...' என்று வேடிக்கையாகப் பேசி, கலகலப்பை ஏற்படுத்தினார். ஆனால், மாறனோ, 'இல்லண்ணே... நாங்க கதை, வசனம் எழுதிப் பிழைச்சுக்குவோம்; எங்கள விட்டுடுங்க...' என்றார்.

'தம்பி... நீங்க சின்னப் பையன்; சொல்றதக் கேளுங்க. எல்லாம் நாளைக்குப் பேசிக்குவோம்...' என்று அவர்களை வழியனுப்பி வைத்தேன்.

மறுநாள் அண்ணாதுரையைச் சந்தித்து, கருணாநிதி வருந்தியதைச் சொன்னேன்.

உடனே அவர் மனம் தணிந்து, அன்று மாலை, 'தம்பிக்கு கடிதம்' பகுதியில், கருணாநிதியைப் பாராட்டி எழுதினார். அன்றோடு பிரச்னை தீர்ந்தது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us