
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீயே என் பஞ்சபூதம்!
வண்ணங்களில் குளித்த
ஓவியமாய் திரியும் பட்டாம்பூச்சியை
அவ்வளவு பிடிக்குமென்றாய்
சிறகுகள் முளைத்தன எனக்கு!
உலகின் உயிர் நனைக்கும்
மழையில் நனைதலில்
விருப்பம் அதிகம் என்றாய்
உன் மழைப்பேச்சில்
வானவில்லாய் வளைந்தேன்!
கோவில் வாசலில்
கம்பீரமான தூணாய் நிற்கும்
யானையை பிடிக்கும் என்றாய்
ஆசிர்வாதம் வாங்கும் பக்தையாய்
தலைகுனிந்து நின்றேன்!
பூக்களில் என்ன பிடிக்கும் என்றேன்...
செம்பருத்தி எனச் சிரித்தாய்
இரு கன்னங்களிலும்
குழைத்து பூசி
சிவந்தேன் அந்நிறத்தை!
எப்போதுதான்
என்னை சொல்வாய்
என்ற எதிர்பார்ப்பில்
பிறகென்ன பிடிக்குமென்றேன்?
நீள்வானம், நீலக்கடல்
நீந்தும் நதி, மலைமுகடு என
அடுக்கிக் கொண்டே சென்றாய்...
தாளமுடியா தவிப்புடன்
இதில் நான் எங்கே இருக்கிறேன்
என்றேன்!
நீயே என் பஞ்சபூதமாகவும்
இருக்கிறாய்
என்று குறுஞ்சிரிப்பை உதிர்த்தாய்!
— இ.எஸ்.லலிதாமதி,
சென்னை.