
வசதி படைத்தோருக்கு வங்கியில் கணக்கு இருக்கும்; அதனால், தேவைப்படும் போதெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்துக் கொள்வர்.
வசதியில்லாதவர்கள் என்ன செய்வர்! வசதி படைத்தோரிடம் காசோலை பெற்று, அதை வங்கியில் கொடுத்து, பணத்தை பெறுவர். அதுபோல, தூய பக்தி உடையோர் இறையருளை முழுமையாக அனுபவிப்பதுடன், தங்கள் அனுபவங்களை பாடல்களாக வெளிப்படுத்துகின்றனர். காசோலைகளை வங்கியில் கொடுத்து பணம் பெறுவதை போல், அந்த உத்தமர்கள் பாடிய பாடல்களை, தெய்வ சன்னிதியில் பாடி, நாமும் தெய்வ அருளை பெற வேண்டும்.
அம்பிகையின் மீது பாடல்கள் பாடி, அவளின் அருளைப் பெற்ற அடியவர் ஒருவர் வாழ்வில் நடந்த வரலாறு இது:
சிவனை இகழ்ந்த தட்சன், வழிபாடு செய்து, பாவங்களை போக்கிய இடம், மயிலாடுதுறை மாயூரநாதர் திருத்தலம். மயில் வடிவம் கொண்டு அன்னை உமையவளும், யமன், அகத்தியர், லட்சுமி மற்றும் கன்வ முனிவர் போன்றோர் சிவனை பூஜித்த இத்திருத்தலத்தில், அன்னை அபயாம்பிகை அருள்பாலிக்கிறாள்.
இவ்வூருக்கு அருகில் உள்ள நல்லத்துக்குடி எனும் கிராமத்தில், 225 ஆண்டுகளுக்கு முன், ஆண் குழந்தை ஒன்று அவதரித்தது. அக்குழந்தை சிறுபாலகனாக இருக்கும் போதே, அதனுடைய தாய் இறைவனடி சேர்ந்தார். தாயை இழந்த குழந்தை, பசியில், 'அம்மா...' என்று அழைத்து அழுதது. அடுத்த வினாடி, அபயாம்பிகை தேவி, ஒரு சாதாரண பெண்ணாக தோன்றி, அக்குழந்தைக்கு உணவூட்டி, அதன் பசியை தீர்த்தாள்.
இதேபோல, மற்றொரு நாளும் குழந்தை பசியால் அழவே, முன்போலவே வந்து உணவளித்த அம்பிகை, குழந்தையின் கையை பற்றி, கோவிலுக்கு அழைத்து வந்தவள், சன்னிதியில் குழந்தையை நிறுத்தி, கருவறைக்குள் மறைந்தாள்.
அன்று முதல், தினமும் ஆலயம் சென்று அம்பிகையை தரிசித்து வந்தான் அச்சிறுவன்.
ஆண்டுகள் கடந்தன; சிறுவன் வளர்ந்து பெரியவர் ஆனார். ஒருநாள், இரவு வழிபாட்டை முடித்து, கோபுர வாயிலை தாண்டியதும், கல் இடறி, கீழே விழுந்தவர், 'அம்மா... ஆ....' என்று வீறிட்டார்.
அவர் அபயக்குரல் கேட்டு, அங்கே காட்சியளித்த அம்பிகை, அவரின் கை பற்றி தூக்கியதுடன், தன் திருக்கரத்தில் விளக்கை ஏந்தியபடி, அவரின் வீடு வரை துணையாக வந்தாள்.
அன்று முதல், அவர் இரவு வழிபாட்டை முடித்து வீடு திரும்பும் போது, அம்பிகையின் அருள் விளக்கு அவருக்கு துணையாக வந்தது.
இதனால், உள்ளம் நெகிழ்ந்தவர், 'அம்மா... தேவாதி தேவர்களும் உன் அருளுக்காக ஏங்கும் போது, விளக்கு ஏந்தி வந்து என்னைக் காக்கும் தேவியே... உனக்கு என்ன கைமாறு செய்வேன்...' என்று கண்ணீர் விட்டார்.
அப்போது, 'மகனே... அமுதத் தமிழால் அன்போடு எம்மை பாடுக...' என்று அசரீரி கேட்டது.
அம்பிகையின் மீது பாடல் களை பாடத் துவங்கினார். அப்பாடல்களே, 'அபயாம்பிகை சதகம்!'
அம்பிகையின் அருள் வடிவை, மனக்கண் முன் நிறுத்தி மனக்கவலையை தீர்க்கும் அப்பாடல்களை எழுதிய அந்த பக்தர், அபயாம்பிகை பட்டர் எனும் கிருஷ்ணசாமி ஐயர்!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே!
கருத்து: உலகத் தொடர்பால், இறையனுபவம் உண்டாகும் என்று சொல்வது, சிறுவர்கள் விளையாடும் போது, மணலால் சோறு சமைத்து உண்டு மகிழ்வது போன்றது. சுட்டியறிய முடியாத சிவனது அகண்ட வியாபகத் தன்மையை உணராதார், தம் ஆன்ம சொரூபத்தை அறியாதவராவர்!

