
பேச்சற்று போனாயே ஜன்னலே!
எனக்கும், உனக்கும் தான்
எத்தனை சிநேகம்...
வெப்ப பொழுதுகள்
என் தேகத்தை
எரிக்கும் போது
ஆசுவாசம் தந்தது நீ தானே!
உன் வலிய
கைகளை பற்றியவாறு
அந்தி வானத்தை
ஆகாச நட்சத்திரங்களை
எத்தனை நாட்கள்
ஆசையுடன் ரசித்திருக்கிறேன்!
காற்றிடம் காதல் கொள்ளவும்
காக்கையிடம் கதைகள் பேசவும்
மழைச்சாரலில் மனம் மயங்கவும்
உன்னிடம் தானே
ஓடி வருவேன்!
அடுப்படிக்குள்
சிறைப்பட்டுப் போன
சீதைகள்
உலகை உள்வாங்கி கொண்டது
உன்னிடம் தானே!
காபி பொடி, சர்க்கரை
பக்கத்து வீட்டு
பண்டமாற்றுக்கு மட்டுமல்ல...
மனம் கனக்கும் வேளைகளிலும்
இரு மனங்களின் பகிர்தலுக்கு
நீ தானே சாட்சி!
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டு கிடந்த
பெண் இனத்திற்கு
ஆசுவாசம் தந்த
ஜன்னலே...
நாகரிக வளர்ச்சியில்
மனங்கள் குறுகி
குடும்பங்கள் சிறுத்து
பேச்சற்று போன
மனிதர்களைப் போல
சுற்றிலும் கட்டடங்களுக்கு
நடுவே சிக்கி
நீயும் பேசும் பொருளற்றுப் போனாயே!
— ப.லட்சுமி, கோட்டூர்.