sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 18, 2015

Google News

PUBLISHED ON : அக் 18, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புத் தோழிக்கு,

நான், 52 வயது பெண்; திருமணம் ஆனதில் இருந்தே, எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காத அபலை நான். எனக்கு ஒரு மகன், இரு மகள்கள்; அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த என்னை, ஆட்டோ டிரைவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர் என் பெற்றோர். மூன்று மாதம் கூட சந்தோஷமாக இல்லை; எந்நேரமும் குடித்து விட்டு வந்து, அடிதடி, சண்டை என இருந்ததால், எப்படியாவது இவரை திருத்த வேண்டும் என்று, பூ விற்றும், வீட்டு புரோக்கர் வேலை செய்தும் பணம் சேர்த்து, வெளியிலும் கடன் வாங்கி, பல முறை மருத்துவமனையில் சேர்த்து, ஒருவழியாக இவரது குடிப்பழக்கத்தை நிறுத்தினேன்.

கல்யாணம் ஆனதில் இருந்தே வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டார். மாமியார் இல்லை; மாமனார் உண்டு. சொந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்ததால், குழந்தைகளை வளர்க்க முடிந்தது. என் மீதோ, குழந்தைகளிடமோ இவருக்கு துளியும் அன்பு கிடையாது.

நான், 10 ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தை கொடுத்ததன் மூலம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து, இன்று பல லட்சங்களுக்கு அதிபதியாக இருக்கிறார். வேலை வெட்டி இல்லாத பையனை, என் இரு மகள்களில் ஒருவள் காதல் திருமணம் செய்து கொண்டதால், அவளுடன் பேச்சு வார்த்தை இல்லை. அவளைப் பற்றி பேச்சு எடுத்தாலே டென்ஷன் ஆகி, வீட்டை இரண்டுபடுத்தி விடுவார் என் கணவர்.

இதனால், அந்தப் பெண்ணை பற்றி வாயே திறப்பதில்லை. பையனுக்கும், பெண்ணுக்கும் நல்லபடியாக திருமணம் முடித்தோம். அவர்கள் வாழ்க்கையும் நன்றாக, இருக்கிறது.

என் கணவரிடம் நிறைய பணம் புழங்கியதால், எனக்கு தெரியாமல், கடந்த ஏழு ஆண்டுகளாக, பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தது இரு மாதத்திற்கு முன் தான் எனக்கு தெரிய வந்தது. சண்டை போட்டேன். முதலில் ஒப்புக் கொள்ளாதவர், பின், ஒப்புக் கொண்டார். இவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் நான் பட்ட கஷ்டங்களை சொல்லிக் காட்டிய பின், தன் தவறுக்கு வருந்தினார். ஏனெனில், இவருக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.

அம்மா... என் கணவர் செய்த நம்பிக்கை துரோகத்தை, என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை நினைத்து, என்னால் தூங்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. என் கடமைகள் முடிந்து விட்டதால், இவரை விட்டு பிரிந்து விடலாம் என மனம் சொல்கிறது. ஆனால், இவரது நடத்தையை, குழந்தைகளிடம் கூட நான் சொன்னதில்லை. அதனால், இவரை பிரிந்து சென்றால், பிள்ளைகள் என்ன நினைப்பரோ என்று சங்கடமாக உள்ளது.

தற்சமயம், என்னிடம் ரொம்ப அன்பாக தான் இருக்கிறார். இனி மேல் தவறு செய்ய மாட்டேன் என்று, பிள்ளைகள் மேல் சத்தியம் செய்வதாக சொல்கிறார். ஆனாலும், என் மனம் இதை நம்ப மறுக்கிறது. என்னிடம் பேசும் போதெல்லாம், இவர் பல பெண்களுடன் இருந்தது நினைவுக்கு வந்து, என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறது. எங்களுக்கு சொந்தமாக மூன்று வீடுகள் இருக்கின்றன. எங்கள் இருவர் பெயரிலும் தான், வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வீட்டு வாடகை பணத்தின் மூலமே குடும்பச் செலவுகளை செய்து வருகிறேன். இவரை விட்டுப் பிரிந்து போனால், செலவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான், 10வது வரை தான் படித்துள்ளேன். என்னால் வீட்டு வேலை கூட செய்ய முடியவில்லை; இவர் தவறையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்கிறது. நீங்கள் தான் எனக்கு நல்வழி கூற வேண்டும். எனக்கு தாய், தந்தை இல்லை.

- இப்படிக்கு,

பெயர் வெளியிட முடியாத

அபலைத் தோழி.


அன்புத் தோழிக்கு —

குடிகார கணவனுடன், 30 ஆண்டுகளுக்கு மேல் குடும்பம் நடத்தி, வாழ்க்கையில் பாதியை கரைத்து விட்டாய்.

உனக்கு, உடன் பிறந்தோர் இருக்கின்றனரா என்பதை நீ கடிதத்தில் தெரிவிக்கவில்லை. அப்படி இருந்தாலும், உன்னை வைத்து பராமரிப்பார்களா என்பது சந்தேகமே!

நிறைய கணவர்கள், உன் கணவரை போல தான் இருக்கின்றனர். மனைவியின் உழைப்பையும், இளமையையும், உறிஞ்சி தான், பொது வாழ்வில் பிரகாசிக்கின்றனர். மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்கும் இவர்கள், மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவதில்லை.

வாலிபத்தில் ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டு, வயோதிகத்தில் மனைவியிடம் அடைக்கலமாகின்றனர். தங்களது வாலிபத் தவறுகளை, இவர்கள் பல விதங்களில் நியாயப்படுத்தவே செய்கின்றனர். கிரிக்கெட்டோ, புட்பாலோ ஆடி முடித்து, ஒரு ஆட்டக்காரன் கூடாரம் திரும்புவது போல, இப்போதாவது கணவன், தன் காலடிக்கு வந்து சேர்ந்தானே என ஆறுதல் கொண்டு, கிழ சிங்கத்தை மீதி ஆயுளுக்கும் வைத்து பராமரிக்கின்றனர் பல பெண்கள்.

கணவனை விவாகரத்து செய்து, கணவனின் துர்நடத்தையை மகன், மகள்களிடம் விளக்கி கூறி, அவர்களுடைய வீடுகளில் மாறி மாறி தங்கலாம். உன்னை, மீதி ஆயுளுக்கும் வைத்து பாதுகாக்கும் அளவுக்கு, உன் குழந்தைகள் தயாரா என யோசி. பெரும்பாலும் மகன், மகள்கள் தங்களின் வாழ்க்கைத் துணை பேச்சை தான் கேட்பர். உன்னை கூடுதல், 'லக்கேஜாக' தான் கருதுவர்.

உன் கணவன் திருந்தி விட்டதாகவும், நீ இல்லாமல் போனால் செத்து விடுவதாகவும் கூறுகிறார். அதனால், பாவமன்னிப்பு கேட்கும் கணவனை மன்னித்து விடு; பக்தியில் ஈடுபடு. பழையதையே அசை போட்டு, வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாதே!

ரயில் பயணத்தில், சக பயணியாக கணவனை பாவி. மாதத்தில் ஒருநாள், மகன், மகள்களிடம் போய் தங்கு. வேலை வெட்டி இல்லாத மருமகனிடம் நைச்சியமாக பேசி வேலைக்கு அனுப்பு. பூ விற்கும் வேலையை மீண்டும் செய்து, கையில் சிறிது பணம் வைத்திருக்க பார். ஒரு நோயாளியை பராமரிக்கும் செவிலியர் மனோநிலையை பெறு. ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளில் ஈடுபடு.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us