
'சிரிக்கத் தெரிந்த மனமே' நூலிலிருந்து: தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம் நடத்தி வந்த, 'ஊழியன்' பத்திரிகை, சுதந்திர போராட்ட காலத்தில், மக்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கியது.
'ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு, புதுமைப்பித்தனை அனுப்பி வைத்தார் எழுத்தாளர் வ.ரா., புதுமைப்பித்தன் அப்பத்திரிகையில் பணியாற்றி வரும் போது, ஆசிரியர் குழுவில் முக்கியமானவராக இருந்த
ஈ. சிவம் என்பவர், புதுமைப்பித்தனுடன் அடிக்கடி சச்சரவு செய்து வந்தார். அதனால், 'ஊழியன்' பத்திரிகையை விட்டு விலகினார் புதுமைப்பித்தன்.
சில நாட்கள் சென்றபின், வ.ரா.,வும், புதுமைப்பித்தனும் சந்தித்துக் கொண்டனர். புதுமைப்பித்தனின் ராஜினாமா விஷயத்தை முன்பே அறிந்திருந்த வ.ரா., 'என்ன புதுமைப்பித்தன்... ஈ.சிவம் எப்படியிருக்கிறார்?' என்று கேட்டார்.
'அவர் ஈ.சிவம் இல்லை; எறும்பு சிவம். என்னைக் அறுத்துத் தள்ளி விட்டார்...' என்றார் புதுமைப்பித்தன்.
'உலக மேதைகள்' என்ற நூலிலிருந்து: பிரபல எழுத்தாளர் மார்க் டுவைன் தன் பக்கத்து வீட்டுக் காரரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரது மேஜை மீது இருந்த புத்தகத்தை பார்த்து, 'இந்தப் புத்தகத்தை இரவல் தருகிறீர்களா... படித்து விட்டு தருகிறேன்...' என்று கேட்டார்.
அதற்கு அந்த நண்பர், 'புத்தகங்களை நான் இரவல் கொடுக்கிறதில்ல; இந்தப் புத்தகத்தை நீங்க அவசியம் படிக்கணும்ன்னு தோன்றினால், என் வீட்டிலேயே உட்கார்ந்து படித்து விட்டுப் போங்கள்...' என்றார்.
மனவருத்தப்பட்டார் டுவைன். ஆனால், வெளிப் படுத்திக் கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பின், டுவைன் வீட்டிற்கு வந்த அந்த நண்பர், 'நண்பரே... உம்முடைய மண்வெட்டியை இரவல் கொடுங்கள்; என் வீட்டுத் தோட்டத்தில் மண்ணை வெட்டிப் பண்படுத்தி விட்டு திருப்பித் தருகிறேன்...' என்று கேட்டார்.
'மண் வெட்டியை நான் பிறருக்கு கடன் கொடுப்பதில்லை; உங்களுக்கு அவசியம் என்று தோன்றினால், என் மண்வெட்டியைக் கொண்டு, என் வீட்டுத் தோட்டத்து மண்ணை வெட்டிப் பண்படுத்துங்கள்...' என்றார் மார்க் டுவைன்.
'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒரு பிரமுகர், விருந்தளித்தார். விருந்து முடிவில், ஒரு தம்ளரில் பால் தரப்பட்டது. பாலை வாங்கிய பண்டிதமணி அதை உற்று கவனித்து, 'திருப்பாற் கடலில், எவ்வளவு அழகாக சீனிவாசன் துயில் கொள்கிறான்!' என்றார்.
விருத்தளித்தவர், பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார். அப்போது தான், பண்டிதமணி சொன்னதன் உண்மை விளங்கிற்று. 'சீனி' (சர்க்கரை)யில் வாசம் செய்யக் கூடியது எறும்பு என்பதால், சீனிவாசன் என்று குறிப்பிட்டு, அது, பாலில் மிதக்கிறது என்பதை, பண்டிதமணி நயமாகக் கூறியதை ரசித்தார் அவர்.
'தெரிந்து கொள் தம்பி' நூலிலிருந்து: ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்த, 'ரைட்' சகோதரர்கள், ஒரு விருந்துக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பல அறிவியல் அறிஞர்கள், பொறியியல் நிபுணர்கள் அங்கு வந்திருந்தனர். விருந்துக்கு தலைமை வகித்தவர், 'அடுத்து, நம் ரைட் சகோதரர்களில் மூத்தவரான, வில்பர் ரைட் தங்கள் சாதனைகள் குறித்துப் பேசுவார்...' என்று அறிவித்தார்.
வில்பர் எழுந்து, 'ஒரு தவறு நேர்ந்து விட்டது; என் தம்பி ஆர்வில் ரைட் தான் நன்றாக சொற்பொழிவாற்றத் தெரிந்தவன். எனக்குப் பேசக் தெரியாது...' என்று கூறி அமர்ந்து விட்டார்.
தலைமை வகித்தவர், ஆர்வில் ரைட்டை அழைத்து, பேசும்படி கூறினார். அவர் ஒலிபெருக்கி முன் வந்து, 'என் அண்ணன் வில்பர் ரைட் அற்புதமாகப் பேசிவிட்ட பின், நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது...' என்று கூறி அமர்ந்து விட்டார்.
நடுத்தெரு நாராயணன்