sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சில நேரங்களில் சில உறவுகள்!

/

சில நேரங்களில் சில உறவுகள்!

சில நேரங்களில் சில உறவுகள்!

சில நேரங்களில் சில உறவுகள்!


PUBLISHED ON : அக் 18, 2015

Google News

PUBLISHED ON : அக் 18, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தில், மொபைல் போன் சிணுங்கியது. என் பெண் மதுவாகத் தான் இருக்கும் என்று நினைத்து, போனை எடுத்துப் பார்த்தபோது. 'ஹரி' என்ற பெயர் மின்னியது.

''ஹலோ... ஹரி...''

''ஹாய் ராதா... எப்படி இருக்க...'' என்றான் உற்சாகமான குரலில்.

அவன் குரலில் இருந்த உற்சாகம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஹரியும், நானும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலர்கள்; ஆனால், எனக்கு, ரவியுடன் திருமணமாகி, தற்போது, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

என் கண நேர மவுனத்தை உணர்ந்து, ''ஹாய் ராதா... லைன்ல தானே இருக்கே...'' என்றான்.

திடுக்கிட்டு, ''ஆமா... சொல்லு, நீ எப்படி இருக்க...''

''ஆபிஸிலிருந்து கிளம்பியாச்சா?'' என்று கேட்டான்.

''கிளம்ப போறேன்; ஏன் என்ன விஷயம்...'' என்றேன்.

''உன்னைப் பார்க்க, உன் வீட்டுக்கு வரப் போறேன்,'' என்றான் உற்சாகத்துடன்!

''ஏய்... நீ பெங்களூரு வந்திருக்கீயா... நான் இப்ப இருக்கிற வீட்டோட முகவரி உனக்கு தெரியுமா...'' என்றேன்.

''ஓ... நீ இப்ப இருக்கிற இடம் வொய்ட் பீல்டு தானே... ஆறு மாசத்திற்கு முன் சொன்னியே...'' என்று கூறியவன், என் புதிய வீட்டு விலாசத்தைச் சொன்னான்.

''சரி... நீ எங்கிருந்து வர்றே?''என்று கேட்டதும், உரக்கச் சிரித்தான் ஹரி. அவன் உற்சாகமாக இருக்கும் போது, இப்படித் தான் சிரிப்பான்.

சிரிப்பின் இடையே, ''நானும் வொய்ட் பீல்டில் தான் இருக்கேன்,'' என்றான்.

''அப்படியா... எங்கே?'' என்றேன் வியப்புடன்!

''போர் பாயின்ட்சில்!''

அவன் கூறியது, ஷெராடன் குரூப்பைச் சேர்ந்த ஒரு ஓட்டல். என் வீட்டிலிருந்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

''அபிஷியல் விசிட்டா...''

''ஆமாம்... எல்லாத்தையும் போனிலேயே பேச வேண்டாமே... இன்னும் ரெண்டு மணி நேரத்தில உன் வீட்டில் இருப்பேன் அப்ப பேசுவோம்,'' என்று கூறி, போனை வைத்து விட்டான்.

மணி, 5:00; நான் வீட்டிற்கு போக, 6:00 மணியாகிவிடும். ஹரி, 7:00 மணிக்குள் வந்து விடுவான்.

நல்லவேளை ரவிக்கு, ஹரியை தெரியும் என்பதால், பிரச்னையில்லை.

வீடு திரும்பிய போது, பள்ளி முடிந்து வந்து விளையாடிக் கொண்டிருந்தாள் மது. சின்னவள் தூங்கிக் கொண்டிருந்தாள். வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆன்ட்டி, நான் வந்ததும், ''சின்னது இன்னும் பால் குடிக்கலம்மா... ராத்திரிக்கு சப்பாத்திக்கு சப்ஜி செய்து வச்சுருக்கேன். மாவு பிசைந்து தயாரா இருக்கு,'' என்று சொல்லி, கிளம்பினாள்.

உடை மாற்றி, வேலையில் ஈடுபட்ட போது, பழைய நினைவுகள் முட்டி, மோதிக் கொண்டு வந்தன.

எனக்கும், ஹரிக்கும் ஒரே வயது தான். சொல்லப் போனால், அவனை விட, நான்கு மாதம் மூத்தவள் நான். நான் வேலைக்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்தே, அவன் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். தொழில் நுட்ப பிரிவில் அவனும், நிதி நிர்வாகத்திலும் நானும் இருந்தேன்.

ஹரி கொடுத்த சில பயணச் செலவினங்களில் இருந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி நான் அனுப்ப, அவன், என்னிடம் நேரில் வந்து தகராறு செய்ய, இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் பழக்கம்.

தந்தை இல்லாமல், தாய் மற்றும் தாய் மாமனின் ஆதரவில் வளர்ந்த பெண் நான் என்பதால், என் பார்வையில் சற்று முதிர்ச்சி இருக்கும். அவன் கல்லூரியில் இருந்து வெளியே வந்த உடனே, வேலையில் சேர்ந்து விட்டதால், அவனுக்கு விடலைத் தனம் அதிகம் இருந்தது. அத்துடன் அவனுக்கு, அப்பா, அம்மா, அண்ணன் என்று அழகான, பிரச்சனையற்ற குடும்பம்.

நாங்கள் நிறைய பேசுவோம். உபயோகமற்ற பேச்சாக இருந்தாலும், புத்திசாலியான அவன், வாழ்க்கையில் முன்னேறி, நிறைய சாதிக்க வேண்டும், அவன் பட்டம் பெற்ற துறையில், சிறப்புப் பெற வேண்டும் என்பதை, அவனுக்கு, அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருந்தேன்.

இந்நிலையில் தான், ஹரியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. நான், என் காதலை சொன்ன போது, அவன் அதிர்ச்சி அடையவில்லை. எங்களிடையே காதல் பேச்சுக்கள் மறைமுகமாக உலவிக் கொண்டிருந்ததால், அவன், அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டான்.

ஆனால், இவ்விஷயம் இருவரின் வீட்டிலும் புயலைக் கிளப்பியது. காரணம், வழக்கமான ஜாதி, பொருளாதாரம்! எங்கள் முயற்சியில் இருவருமே தோற்றுப் போனோம். என் அம்மாவும், மாமாவும் எங்கள் உறவிலேயே ரவியைப் பார்த்து, மூன்றே மாதத்தில் எனக்கு திருமணத்தை நடத்தினர்.

இருவருக்கும் அந்த மூன்று மாதங்கள் நரகமாகத் தான் இருந்தது. என் திருமணம், பெங்களூரில் நடந்தது. திருமணத்திற்கு நான் ஹரியை அழைக்கவில்லை; அவனும் வரவில்லை. திருமணமான, 10 மாதத்திலேயே மது பிறந்து விட்டாள்.

ஒருநாள், எதேச்சையாக தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

எடுத்துப் பேசிய போது அது ஹரி! அப்போது, அவன் இந்தியாவில் இல்லை.

பாங்காக்கில் வேலை கிடைத்து, அங்கு சென்றிருந்தான். சுருக்கமான நல விசாரிப்புடன் எங்கள் பேச்சு முடிந்தது. பின், மற்றொரு முறை போன் செய்தவன், அடுத்த மாதம் இந்தியா வரவிருப்பதாகவும், பெங்களூரில் வந்து என்னை சந்திப்பதாகவும் கூறினான். அதேபோல் வரவும் செய்தான். காயம் பட்ட இடத்தைத் தொடாமல், ஜாக்கிரதையாக மருந்து போடுவது போலவே, இருவரும் பேசிக் கொண்டோம்.

அவனுக்கு திருமணம் ஆகவில்லை. நிறையக் குடிப்பதாக சொன்னான். அதிர்ந்து போனேன்.

'ஏன் ஹரி... உன்னை புத்திசாலின்னு நினைச்சேன்; இப்ப எதுக்காக குடிக்கிற...' என்றேன் வருத்தத்துடன்!

லேசாகச் சிரித்து, 'உன்னை மறப்பதற்காக குடிக்கல; எனக்கு ஏற்பட்ட தோல்வியை மறக்க குடிக்க ஆரம்பிச்சேன். இப்ப, அதுவே பழகிடுச்சு...' என்றான்.

'சே... இது என்ன முட்டாள்தனமான விளக்கம் ...' என்றேன் கோபமாக!

'நீ தானே சொல்வே... நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காரியத்துலயும் ஜெயிக்கணும்ன்னு! இந்த விஷயத்தில நான் தோத்துப் போயிட்டேன். அதை விடு...' என்று பேச்சை மாற்றி, என் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தான்.

எனக்கு மனது வலித்தது.

இது நடந்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. என்றாவது ஒரு போன்... பொதுவான உரையாடல் இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. அவன் என்னிடம் பேசும் போதெல்லாம் அவன் குரலில் சோகம் இருப்பது போல தோன்றும். ஆனால், அது, என் பிரமையாக கூட இருக்கலாம்.

ஆனால், இன்று, அவன் குரலில் இருந்த உற்சாகம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

வாசல் மணி ஒலித்தது.

எனக்கு முன் ஓடிச்சென்று, கதவைத் திறந்தாள் மது.

கையிலிருந்த பரிசுப்பொருள் பையைக் கீழே வைத்து, ''ஹாய் மதுக் குட்டி...'' என்று அவளைத் தூக்கிக் கொண்டவன், என்னைப் பார்த்து, ''ஹாய் ராதா... என்னை நீ எதிர்பாக்கல தானே...'' என்றான்.

பதில் சொல்லாமல் அவனையே ஏற, இறங்கப் பார்த்தேன். பூசினாற் போல் பருத்து, நிறம் கூடியிருந்தான். ரிம்லெஸ் கண்ணாடி, அவனுக்கு பெரிய மனித தோற்றத்தைத் தந்தது.

கறுப்பு டீ ஷர்ட்டும், நீல நிற ஜீன்சும் அவனுக்காகவே தைத்தது போல் பொருந்தி இருந்தது. சந்தேகமில்லாமல், அவன் முகத்திலும், நடையிலும், குரலிலும் மாற்றம் தெரிந்தது.

''என்ன ராதா... எதுவும் பேசாமல் பாத்துக்கிட்டே நிக்கற... ரவி எப்ப வருவார், எப்படி இருக்காரு...'' என்று கேட்டுக் கொண்டே, உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான்.

நிச்சயமாக மாறித்தான் இருக்கிறான்.

''ஹேய் ராதா... உன்னை தான்... என்ன சிலை மாதிரி நிக்கற...''

''ஓ... ஸாரி... உன் தோற்றத்துல ஏதோ ஒரு மாறுதல் தெரியுது,'' என்றேன் என்னையறியாமல்!

புன்னகை செய்தவன், ''மாற்றங்கள் தானே வாழ்க்கை...'' என்றான்.

''அட... தத்துவமெல்லாம் பேசற...'' என்று கூறி சிரித்தேன்.

''நான் இப்ப பாங்காக்கில் இல்ல; சிங்கப்பூர் போயிட்டேன். புது வேலை; வெரி இன்ட்ரஸ்டிங்!'' என்றான்.

''வெரிகுட்! அப்புறம் வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க...'' என்று கேட்டேன்.

''எல்லாரும் நல்லா இருக்காங்க; நீ...'' என்று இழுத்து, ''நன்றாகத்தான் இருக்கே...'' என்று கூறி சிரித்தான்.

நானும் சிரித்துக் கொண்டே, ''காபி ஆர் கூல்ட்ரிங்?''

''காபி...'' என்றவன், ''எனக்கு டின்னர் வேணாம்; ஆபீஸ் விஷயமாக, நைட் ஒரு மீட்டிங் இருக்கு,'' என்றான் தானாகவே!

அவன் எங்கள் வீட்டில் இதுவரை லஞ்ச்சோ, டின்னரோ சாப்பிட்டதில்லை. வழக்கமாக, நான் தான் அதைப் பிரஸ்தாபிப்பேன்; அவன் மறுத்து விடுவான். இன்று அவனாகவே வலியச் சொல்கிறான்.

காபியை வாங்கியவன், ''உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,'' என்றான்.

நான் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்ததும், என் இரண்டாவது குழந்தை, தூக்கத்திலிருந்து விழித்து, அழ ஆரம்பித்தாள்.

''ஒரு நிமிஷம்...'' என்று உள்ளே சென்று, அவளைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். தூக்கம் கலையாத கண்களுடன், ஹரியை மலங்க மலங்க பார்த்தாள் குழந்தை.

''அட! இவ ரவியைப் போலவே இருக்காளே...'' என்று குழந்தையை வாங்க கை நீட்டினான்; வேற்று முகமாக இருந்ததால், என்னை இறுகப் பிடித்து, முகத்தை தோளில் புதைத்துக் கொண்டது.

''இரு ஹரி... இவளுக்கு பசி எடுத்துருச்சு; பாலை காய்ச்சி எடுத்துட்டு வந்துடறேன்,'' என்று கூறி, குழந்தையுடன் சமையலறைக்குள் சென்றேன்.

சிறிது நேரத்தில், குழந்தையுடன் வந்தபோது, அவன் மதுவிடம், ''நீ அம்மா செல்லமா, அப்பா செல்லமா...'' என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

''நான் ரெண்டு பேருக்குமே செல்லம்,'' என்றாள் மது.

''வெரி ஸ்மார்ட், உங்க அம்மா மாதிரி,'' என்று சிரித்தபடி, மதுவின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான்.

நான் எதிரே வந்து உட்கார்ந்தபோது, அவன் என்னிடம் ஏதோ சொல்ல வந்ததை மறந்து போயிருந்தேன். அதனால், அவன்,''என்னன்னு கேட்க மாட்டியா...'' என்றதும், ''எதை?'' என்று கேட்டு விழித்தேன்.

''பாத்தியா... அதுக்குள்ள மறந்துட்ட... நீ உள்ள போகும் போது சொன்னேனே...'' என்றான்.

அப்போது தான் சட்டென்று நினைவுக்கு வந்தது.

''ஓ... ஆமாம்... ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு சொன்னேயில்ல... சொல்லு,'' என்றேன்.

''அது, என்ன விஷயம்ன்னு யூகி...'' என்றான் புன்னகையுடன்!

''ஏதாவது புரமோஷனா...''

''இல்ல... வேலையில சேர்ந்து ஒரு வருஷம் தானே ஆச்சு!''

''வீடு வாங்கிருக்கியா...''

''இல்ல...''

''உங்க அண்ணனுக்கு கல்யாணமா...''

''தப்பு.''

''எனக்கு தெரியல; நீயே சொல்லு,'' என்றேன்.

''நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்,'' என்றான் புன்னகையுடன்!

'என்னது!' என்று என் வாய் சொல்லாவிட்டாலும், மனது சொன்னது.

எங்களின் காதல் முறிந்த போது, என்னைவிட அதிகம் பாதிக்கப்பட்டவன் அவன் தான். அவன் முகமும், போக்கும் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.

ஒருமுறை பேசுகையில் கூட, 'கல்யாணங்கிறதை என்னால, நினைச்சுக் கூட பாக்க முடியல...' என்று சொன்னான். அவனா இன்று, தனக்கு கல்யாணம் என்று சொல்கிறான்... யோசனையுடன் அவனையே பார்த்தேன்.

என் மனதில் ஓடியதை, படித்தவன் போல்,''கல்யாணம்ங்கிறத நினைச்சுக் கூட பாக்க முடியலன்னு சொன்னவனா இப்படி பேசுறான்னு தானே நினைக்கிற...'' என்றான்.

நான் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து, ஏதோ புரிந்தவன் போல், என்னை நேராகப் பார்த்து, ''நான் நினைச்சது நடக்காத போது, என்னவெல்லாமோ தோணுச்சு. சிலசமயம் செத்துப் போயிடலாமான்னு கூட நினைச்சிருக்கேன். அப்பெல்லாம் இன்னும் ரெண்டு, 'பெக்' அதிகமாகக் குடிப்பேன்.

''ஆனா, சமீபத்தில், ஒரு புத்தகம் படிச்சேன். அதில, 'சில சந்தர்ப்பங்களில் சில உறவுகளோ, நட்போ தேவைப்படுகிறது. அதன் காரியம் முடிந்த பின், அந்த உறவுகளோ, நட்போ பெரும்பாலும் தொடர்வதில்லை. தொடர்ந்தாலும், அதில் ஈரம் இன்றி உலர்ந்து போனாற்போல் இருக்கிறது...' என்ற வரிகளை படித்த போது, எனக்கென்னமோ, அதுதான் யதார்த்தம் என்றே தோன்றியது...''

அவன் பேசுவதை கேட்டபடி மவுனமாக அமர்ந்திருந்தேன்.

''இதப் பாரு...'' என்று, தன் வலது முழங்கையைத் திருப்பி என்னிடம் காட்டினான். ஒரு நீளமான தழும்பு இருந்தது.

''சின்ன வயசுல பைக் ஓட்டக் கத்துக்கிட்ட போது, கீழே விழுந்து, எலும்பு முறிவுக்கு செய்த ஆப்ரேஷனில் ஏற்பட்ட தழும்பு இது!''

இதை எதற்கு இப்போ கூறுகிறான் என்று நினைத்தவாறு, ''இந்த தழும்ப பற்றி முன்பே சொல்லிருக்க...''என்றேன்.

''வாழ்க்கையிலும் இப்படிதான், பல விஷயங்கள நாம் கற்றுக் கொள்ளும் போது, பலவிதமான காயங்களும், அடிகளும் ஏற்படுகின்றன. சில, காலப்போக்கில் மறந்தும், மறைந்தும் போகிறது. சில தழும்பாக, அடையாளமாக நின்னுடுது. அதுக்காக, நம் வாழ்க்கையப் பணயம் வைப்பது எந்த வகையில் நியாயம்...''என்றான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது எனக்கு புரியாததால்,''ஹரி... நீ என்ன சொல்ல வரேன்னு சத்தியமா புரியல,''என்றேன்.

'' காதல்ன்னா என்னாங்கிறத எனக்கு புரிய வைச்சது நீ தான். அதுவரை, வாழ்க்கையில அதோட முக்கியத்துவம் எனக்கு புரிஞ்சது இல்ல; புரிஞ்சுக்கவும் முயற்சித்ததில்ல. காதலோட தொடர்ச்சி கல்யாணம்ன்னு தான் எல்லாருமே நினைக்கிறோம். ஆனா, அதுவும் படிப்பு, கஷ்டம், சோகம், வெற்றி, தோல்விங்கிறதப் போல் ஒரு அனுபவம் தான்னு நினைக்கிறதில்ல.

''ஒருவரை ஒருவர் நேசித்து, அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்பது உயர்வான உணர்வுகளாக இருக்கலாம். ஆனா, அந்த ஒன்றுக்காக, அதில் ஏற்படும் தோல்விக்காக, நம்மை வாழ்க்கையையே நாசமாக்கி, வேதனையிலும், சோகத்திலும் மூழ்கி, நம்மையும், நம்மைச் சுற்றி இருப்போரையும், நம் எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?

''நியாயம் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். குடித்துக் குடித்து உயிரை விட்ட தேவதாசும், காதலுக்காக உயிரை விட்ட ரோமியோ, ஜூலியட்டும் மட்டுமே சரித்திரமாகப் பேசப்படுகின்றனர். மற்றவர்கள்... வெறும் பைத்தியக்காரர்கள் தானே!''

ஹரி புத்திசாலி, சிந்தனைவாதி என்று தெரியும். அவனுடைய இந்த பேச்சு அதன் பிரதிபலிப்பு என்பதை உணர்ந்தேன்.

''ஏன்... உன்னையே எடுத்துக்க... உனக்கு அமைந்த வாழ்க்கைய ஏத்துக்கிட்டு, சந்தோஷமாகத் தானே இருக்குறே... வாழ்க்கை, எந்த ஒருவருடனோ, எந்த ஒரு நிகழ்வுடனோ நின்று போறதில்ல. அது ஒரு பயணம்; அந்தப் பயணத்தை மகிழ்ச்சியாகவோ, துன்பமாகவோ மாற்றிக்கொள்வது நம் கையில் தான் இருக்கு. என்ன நான் சொல்றது சரிதானே...'' என்றான்.

பதில் பேசாமல், வெறுமனே தலையாட்டினேன்.

''உன்னைப் போலவே, என்னைப் புரிந்துகொண்டு வாழ தயாராக இருக்கும் ஒரு பெண், எனக்கு கிடைச்சுட்டா. இது, காதல் கல்யாணம் இல்ல; பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் கல்யாணம். என் அண்ணனுக்கும், எனக்கும் ஒரே நாளில் திருமணம். இக்கல்யாணம், எனக்கும், என்னைச் சுற்றியுள்ளோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை தரப்போகிறது. ஏன்... உனக்கும் கூட சந்தோஷம் தான் இல்லயா...'' என்று கேட்டபடி என்னைப் பார்த்தான்.

வாசல் மணி ஒலித்தது; வேகமாக சென்று கதவைத் திறந்தேன். என் கணவர் ரவி!

ஹாலில் ஹரியைப் பார்த்ததும், உற்சாகமாக, ''ஹாய் ஹரி... எப்போ வந்தீங்க, எப்படி இருக்கீங்க...'' என்றான் ரவி.

''ஹரிக்குக் கல்யாணமாம்,'' என்றேன்.

''அப்படியா... ரொம்ப சந்தோஷம்! அட்வான்ஸ் வாழ்த்துகள்... பொண்ணு யாரு... ஸ்வீட் எங்கே...'' என்று ஆர்ப்பரித்தான் ரவி.

ஆனால், நான் மட்டும், 'எனக்கு சந்தோஷமில்ல; பெண் யார்ன்னு எனக்கு தெரிய வேணாம்...' என, மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

நானும், ஹரியைப் போல் மாற வேண்டும்!

தேவவிரதன்






      Dinamalar
      Follow us