PUBLISHED ON : நவ 29, 2015

எந்தப் பாதை நமது?
வாழ்க்கை
நம்முன்
வைக்கும் பாதைகளில்
எது நம் பாதை!
பல்வேறு பாதைகள்
பாய் விரித்தாலும்
உள்ள பாதைகளில்
ஒன்றைத் தானே
உபயோகிக்க முடியும்!
ஆரம்பமே அசத்தலாய்
அகண்டு கிடக்கும்
ஆயிரம் பாதைகள்
நாலே எட்டு
நடப்பதற்குள்
சுருண்டு
சுருங்கிக் கிடக்கின்றன!
எல்லாருமே ஏன்
பலர் நடந்த பாதையிலேயே
பயணிக்க விரும்புகின்றனர்...
ஒன்றே ஒன்று
ஒத்தையடிப் பாதையாய்
உபயோகமில்லாமல்
ஒதுங்கிக் கிடந்தது!
நடக்க நடக்க
அதுமட்டுமே
நல்லோர் மனம்போல்
விரிந்து கொண்டே வந்தது!
இலக்கை எட்ட
நம்முன் தான்
எத்தனை எத்தனை பாதைகள்!
அதர்ம பாதைகள்
விரிவாய் துவங்கி
சுருங்கிக் கொள்ளும்!
உத்தம பாதை
ஒன்று மட்டுமே
நடக்க நடக்க
விரிந்து
வெற்றி கொடுக்கும்!
இன்பத்தில் துவங்கி
துன்பத்தில் முடிவதை விட
துன்பத்தில் துவங்கினாலும்
வெற்றிக்கு துணை வந்து
இறுதியில்
இன்பம் கொடுக்கும்
ஒற்றை பாதையே உயர்வானது!
— வே.சுந்தரராஜன், கோவை.
