PUBLISHED ON : நவ 29, 2015

தினமலர் - வாரமலர் இதழ் சார்பில், கடந்த ஜூலை மாதம், குற்றால சீசன் டூரில் கலந்து கொண்டவர்களுள், டாக்டர் சங்கீதா திலீப்குமாரும் ஒருவர்!
அரக்கோணம் அரசு மருத்துவமனையில், டாக்டராக பணியாற்றும் இவர், தன் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட போது, தன் தொழிலில் ஒருவர் இவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடு இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது.
இதோ அவரே கூறுகிறார்:
டாக்டருக்கு படித்து முடித்ததும், அரக்கோணம், அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அப்போது, என் முன் இரு பொறுப்புகள் காத்திருந்தன. ஒன்று, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவது, மற்றொன்று, மருத்துவமனைக்கு வரத் தயங்கும் ஏழை எளிய நோயாளிகளை தேடிச் சென்று சிகிச்சை அளிப்பது!
இது, இல்லம் தேடிச் சென்று, சேவை தரும் அரசு திட்டத்தின் அடிப்படை தான். எனவே, நான் ஒவ்வொரு கிராமமாக சென்று பணியாற்றினேன். அப்போது தான், அல்லியப்பன் தாங்கல் என்ற கிராமத்தை மட்டும் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதை அறிந்தேன். இதுகுறித்து கேட்ட போது, 'அக்கிராமம் முழுக்கவே நரிக்குறவர் இனத்தவர்கள் மட்டுமே இருக்கின்றனர்; நாம் என்ன சொன்னாலும், அவர்கள் மாற மாட்டார்கள்...' என்று சலிப்புடன் கூறினர்.
இவர்களை நாம் ஏன் மாற்றக் கூடாது என்று முடிவு செய்து, அக்கிராமத்திற்கு டூட்டி கேட்டு வாங்கிக் கொண்டேன்.
அவர்களிடம் பேசிப் பழகிய பின்தான், அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், பாசமானவர்கள் என்பது புரிந்தது.
ஆண்கள் காடை, கவுதாரியை பிடித்து சந்தையில் விற்று வருவர்; ஆனால், அது நிரந்தரமில்லை. பெண்கள் தான், ஊசி, பாசி மணி மாலைகளை, ஊர் ஊராக போய் விற்று, ஒரு நாளைக்கு, 50, 100 ரூபாய் என்று சம்பாதித்து வந்து, குடும்பத்தை காப்பாற்றுவர்.
உடல் நலமில்லாமல் போனால், மருத்துவமனைக்கு செல்லாமல், தங்களுக்கு தெரிந்த வைத்தியத்தை தாங்களே பார்த்துக் கொள்கின்றனர். இதனால், பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். உடல்நல குறைவுக்கு, சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எடுத்து கூறினேன். தற்சமயம், மருந்து மாத்திரை எடுத்துக்கொள்கின்றனர்.
குழந்தை பிறந்தால் அரசு கொடுக்கும், 12 ஆயிரம் ரூபாயை பற்றியோ, அதை வாங்கும் முறை குறித்தோ இவர்களுக்கு தெரியவில்லை.
அதனால், முதல் கட்டமாக கர்ப்பிணி நரிக்குறவ பெண்களுக்கு வங்கியில் கணக்கு துவங்கச் செய்து, அடையாள அட்டை மற்றும் அரசு அளிக்கும், 12 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொடுத்ததும், அவர்களுக்கு என் மீது நம்பிக்கை அதிகரித்தது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில், இரு குழந்தைக்கு மேல் பெற்றால், அரசு பணம் கிடையாது என்ற விதியை எடுத்துச் சொல்லி, குடும்ப கட்டுப்பாட்டை மேற்கொள்ள வைத்தேன்.
அத்துடன், 'நாங்க எல்லாம் மருத்துவம் படிக்க, 100 மார்க் எடுக்கணும்; ஆனா, உங்க பிள்ளைக, 60 மார்க் எடுத்தாலே மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளை படிக்கலாம்...' என்று எடுத்துக் கூறியதால், தற்போது, பல பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கின்றனர்.
ஒருவரை பிடித்துப் போனால் உயிரையே கொடுக்கும் அளவிற்கு பாசம் கொண்டவர்கள் இம்மக்கள். கொஞ்ச நாட்கள் நம்மை பார்க்கவில்லை என்றால் தேடி வந்து விடுவர். இவர்களுக்கு தேவையான கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தந்து விட்டால், இவர்களது வாழ்க்கை தரம் நிச்சயம் உயர்ந்து விடும்.
அவர்களது முன்னேற்றத்திற்கு மேலதிகாரிகளின் துணையோடும், ஆதரவோடும் சிறு அணிலாக நானும் என்னால் முடிந்த முயற்சியை செய்து வருகிறேன். இது என் கடமை மட்டுமல்ல, என் சந்தோஷமும் கூட!
- எல்.முருகராஜ்