sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 29, 2015

Google News

PUBLISHED ON : நவ 29, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு,

நான், 47 வயது ஆண்; என் தங்கை வயது, 40. அவளது, 18வது வயதில், சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்தோம்; ஒரு மகன் உள்ளான். கல்லூரியில் கடைசி ஆண்டு, விடுதியில் தங்கி படிக்கிறான். 'கேம்பஸ்' இன்டர்வியூவில் பெரிய கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்து விடுவான்.

தங்கையின் கணவர், குடிப்பழக்கம் உள்ளவர். டாக்டரிடம் காண்பித்து, ஓரளவு குடியை குறைத்தார். ஆனாலும், திடீர் உடல் நலக் குறைவால், ஒரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவளது மாமனார், மாமியார் முன்பே இறந்து விட்டதால், கணவர் இறந்த பின், தற்போது எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள். ஆனால், மிகவும் மன அழுத்தத்தில் உள்ளாள். மனநல மருத்துவரிடம் காண்பித்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறாள்.

இச்சூழ்நிலையில், தங்கையின் தோழிகள், 'இனிமேல், நீ தனியாக இருப்பது, நன்றாக இருக்காது; மறுமணம் செய்து கொள்...' என்று ஆலோசனை கூறியிருக்கின்றனர். அதனால், 'மறுமணம் செய்தால் நன்றாக இருக்குமா...' என்று குழம்புகிறாள்.

அவளது திருமண வாழ்வு, சிறப்பாக அமையவில்லை என்ற வருத்தம், எனக்கும், என் பெற்றோருக்கும் ரொம்பவே உள்ளது. ஆனால், திருமண வயதில் மகன் இருக்கும் போது, இவள் மறுமணம் என்பது, எங்களுக்கு, மிகுந்த மன உளைச்சலாக உள்ளது.

இவள் மறுமணத்தை, தங்கையின் மகன் எப்படி ஏற்றுக் கொள்வான் என்ற குழப்பமும், இரண்டாவது திருமணமும், சரியாக அமையாமல் போய், மகனும் இவளை கைவிட்டால், இவள் நிலை மிகவும் மோசமாகி விடுமே என்று எண்ணுகிறோம்.

பொருளாதார ரீதியில், அவளுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. தேவைக்கு பணம் உள்ளது. மறுமணம் இவளுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா என்ற சந்தேகம் தான் எங்களை வாட்டுகிறது. தயவு செய்து, நீங்கள் தான் இதற்கு ஒரு நல்ல தீர்வை கூற வேண்டும்.

அன்புள்ள மகனுக்கு,

வாழ்க்கை, ரம்மி போன்றது; எப்ப ஜோக்கர் வந்து, 'டிக்' அடிப்போம்; எப்ப ரம்மி ஆகாமல், 'புல்' ஆவோம் என்பது விளையாடும் யாருக்கும் தெரியாது.

உலகில் உள்ள எல்லா ஆண்களும் கெட்டவர்களோ, குடிகாரர்களோ அல்ல. நல்ல புரிதல் உள்ள ஆண், உன் தங்கைக்கு இரண்டாவது கணவராக அமையலாம். அதேசமயம், தற்கால சூழலில், குடிக்காத ஆண்கள் அபூர்வம். உன் தங்கையின், இரண்டாவது கணவரும் குடிநோயாளியாய் இருந்து விட்டால், அது இன்னும் சிக்கலில் முடிந்து விடும்.

அத்துடன், ஏற்கனவே, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட உன் தங்கை, மறு மணத்திற்கு மனதளவில் தயாரில்லை. அவரால் இரண்டாவது கணவரை சமாளிப்பது, மிகவும் சிரமம். மேலும், வளர்ந்த எந்த மகனும் தன் தாயாரின் மறுமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான். உன் தங்கை மகனும் இதற்கு நிச்சயம் உடன்பட மாட்டான்.

மறுமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான ஆண்களும், திருமணமாகி மனைவியை இழந்திருப்பர்; குழந்தைகளும் இருப்பர். அவர்கள், உன் தங்கையை தாய் என்றும், உன் தங்கை மகன், இரண்டாவது கணவரை தந்தை என்றும், ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; உறவு சிக்கல்கள் அதிகரிக்கும்.

ஆனாலும், உன் தங்கையின் மகனுக்கு, அவன் தாயின் மறுமணத்தை பற்றி, முதலில் தகவல் தெரிவி. அத்துடன் உன் தங்கை மறுமணத்திற்கு மனதளவில் தயாராக இருக்கிறாளா என்பதுக் குறித்து, மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நலம்.

பணத்தாசை பிடித்த தரகர்கள் மூலம் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம். உங்கள் சமூகம் சார்ந்த திருமண மைய வலைதளத்தை அணுகி வரன் தேடலாம். இரண்டாவது திருமணத்தில், உன் தங்கையின் தேவை என்ன, கணவனாய் வரப் போறவனின் தேவை என்ன என, இருபக்கமும் விவாதித்து தெளிவு பெறு.

உன் தங்கையின், இரண்டாவது திருமணம் வெற்றி பெற இதயப்பூர்வமான வேண்டுதல்கள்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us