
என்ன நடந்தது?
வந்தது ஓரிடம்
வாழ்ந்ததும் ஒரேயிடம்
எல்லாமும் எங்கள் ஏழு பேர் தான்
என எண்ணியிருந்தேன்...
இருபது வயது வரை!
அண்ணன் என்றும்
தங்கை என்றும் அறியாமல்
ஒருவர் மீது மற்றொருவர்
உருண்டு, புரண்டு, அடித்து, பிடித்து...
வாயில் உள்ளதை பிடுங்கி உண்டு
வந்ததை எல்லாம் வாங்கித் தின்று
எப்படி எல்லாம் வாழ்ந்தோம் அன்று...
இப்போது இல்லையே அப்போது போல்!
அண்ணன் எங்கோ ஒரு ஊரில்
தம்பி எங்கோ தனியாக
சண்டையோ, சச்சரவோ இல்லை
எனினும் இல்லையே அப்போதைய அன்பு!
நண்பர்களிடம் பல மணி நேரம் பேச்சு
குழந்தைகளுடன் நாள் முழுக்க கூத்து
பேசிப் பேசியே போரடிக்கிறோம்
அண்ணன், தம்பியிடம் அப்படியில்லையே...
இப்படி இருந்ததில்லையே அப்போது!
கும்பலாக குளியல்; ஒன்றாகத் தூக்கம்
தலை வார ஒரே அழுக்கு சீப்பு...
ஒரே தலையணையில் ஐந்து தலைகள்!
விழித்து பார்த்தால்...
தம்பியின் காலோ என் தலையில்
தங்கையின் கையோ என் வயிற்றில்
ஒன்றாக அமர்ந்து களேபர சாப்பாடு...
வீட்டில் ஒரே கூப்பாடு
மறந்து போனதே எவ்வாறு...
அன்பை விதைத்த
ஆசை தங்கையையும்
அடித்தாலும் ஓடி வந்து
அணைக்கும் தம்பியையும்
கதை சொல்லி தூங்க
வைத்த அக்காவையும்
பார்த்து பல வாரங்களாயிற்று...
தூக்கி வளர்த்த அவளின் குழந்தைகளையோ
பார்க்கவும் நேரமில்லை இப்போது!
அம்மா, அப்பா இருந்தும்
நாங்கள் ஏன் தனித்தனி மரங்களாய்...
பணம் இருந்திருந்தால்
ஒன்றாய் இருந்திருப்போமோ...
இப்போது அது இருக்கத் தானே செய்கிறது
ஆனாலும் எண்ணம் இல்லையே ஏன்...
இதுதான் வாழ்க்கை பயணமா...
அப்படியானால் ஒன்றாக ஏன் பிறந்தோம்
வெவ்வேறு தாய்க்கு பிறந்திருக்கலாமே!
அம்மா சொல்லியிருக்கிறாள்...
அவளுடையது கூட்டுக்குடும்பமாம்
நாங்கள் மட்டும் எப்படி தனித் தனியானோம்...
என்னுடன் என் மகன்
அண்ணனுடன் அவன் மகள்
தங்கையோ தன் மகனுடன்
அடுத்த மாநிலத்தில் அக்கா!
அனைவரும் முன் போல்
ஒன்றாய் வாழ வாய்ப்பில்லையா...
அதற்கு எங்களுக்கு மனமில்லையா?
அது பற்றி யோசிக்கவில்லையா...
தனிமரம் தோப்பாகாது என தெரிந்தும்
தோப்புகளை உருவாக்க முயற்சித்து
தோற்கிறோம் தினம்தோறும்
செடிகளை தோப்பாக எண்ணி!
மீண்டும் ஒன்றாக பிறக்கத் தான் முடியுமா?
மனமிருந்தால் இப்போது
ஒன்றாக வாழ முடியும்
இதன் பிறகாவது முயற்சிப்போமே!
— அ.சுருளியப்பன், நெல்லை.