PUBLISHED ON : டிச 13, 2015

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலியை நெருங்கிக் கொண்டிருந்தது. ரயில், தாழையூத் அருகில் வந்தபோது, இருபுறமும் உள்ள வீடுகள் மற்றும் செடிகள் மீது, சாம்பல் படர்ந்து, வெண்மையாக காட்சி அளித்தது. அது, சிமென்ட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவென்று, அகல்யாவிற்கு தெரியும்.
சிறிது நேரத்திலேயே, இரு புறமும் பச்சைப் பசேல் என்று வயல் வெளிகள் தெரிந்தன. அதைப் பார்த்ததும், 'இறைவன், நெல்லுக்கே வேலியாய் மாறிக் காத்தவன் அல்லவா... அதனால் தானே திருநெல்வேலி என்ற பெயரே வந்தது...' என்று நினைத்துக் கொண்டவள், சட்டென்று, வேந்தனை திரும்பிப் பார்த்தாள். அவன் புட்டுக் கருப்பட்டியை மென்றபடி, ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். ஒருவேளை, நாளை கிராமத்தில் நடக்கவிருக்கும், 'கேட்பு' நிகழ்ச்சி பற்றி யோசித்துக் கொண்டிருக்கலாம்.
இன்றைய தேதியில் அகல்யாவும், வேந்தனும் குற்றவாளிகள்; அதனால், அவர்களுக்கு, 'கேட்பு' எனப்படும் பஞ்சாயத்து வைக்கப்பட்டிருந்தது. வீரன்புதூர் கிராமத்து வழக்கப்படி, அந்த ஊர் மக்கள், எந்த ஊருக்கு போனாலும், கிராமத்து விதிமுறைகளை மீறக்கூடாது. அப்படி மீறியது, யார் மூலமாவது தெரிய வந்தால், அவர்களுக்கு, சம்மன் அனுப்பப்படும்; அவர்கள் பஞ்சாயத்து முன் நிற்கவேண்டும். அந்த வகையில் அகல்யாவுக்கும், வேந்தனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
திருநெல்வேலி ஜங்ஷனுக்குள், 'தடதட' வென்று நுழைந்தது ரயில். அகல்யாவை கைத்தாங்கலாக இறக்கிய வேந்தன், அவள் கையில் ஊன்றுகோலை கொடுத்தான். ரயில் நிலையத்திலிருந்து மெல்ல வெளியே வந்தவர்கள், 'ஆர்ய நிவாசி'ல் டிபனை முடித்தனர். மல்லிப்பூ இட்லியும், மணக்கும் சாம்பார் - சட்னியும், குண்டு குண்டான பூரியும், 'தளதள' வென்ற கிழங்கும், அவளுக்கு எப்பவுமே பிடிக்கும். தாமிரபரணித் தண்ணீரில் தயாராகும் உணவல்லவா?
டாக்சி பிடித்து வீரன்புதூர் கிளம்பினர். வழியில், வேந்தன் படித்த, சேப்டர் உயர் நிலைப் பள்ளியும், சிறிது தூரத்தில், அகல்யா படித்த, மேரி சார்ஜண்ட் ஸ்கூலும் வந்தது.
உடனே வேந்தனுக்கு தன் பள்ளிக் காலங்கள் நினைவுக்கு வந்து, அகல்யாவிடம், ''நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கலர் யூனிபார்ம் தானே... ஞாபகம் இருக்கா?'' என்றான். அவள் மெல்ல தலையசைத்தாள்.
இப்போது போல், இலவச சைக்கிள், பஸ் பாஸ் இல்லாத காலம் அது. கூட்டம் கூட்டமாக பள்ளிக்கு நடந்து வருவர். அப்போதெல்லாம் அவர்கள் நட்பில், பேச்சில் மென்மை இருக்கும்; 'மச்சி, குச்சி, புறம்போக்கு நாயே, ஏ கஸ்மாலம், இந்தா பெருசு...' போன்ற வார்த்தைகள் எல்லாம் அறவே கிடையாது.
''அகல்யா... வீரன்புதூர் வந்திருச்சு...'' என்றான் வேந்தன். ஊருக்குள் போகாமல் எல்லையிலேயே டாக்சியை நிறுத்தி, பணத்தைக் கொடுத்து அனுப்பினான். சற்று பெரியதாக இருந்த ஆவுடையம்மாளின் குடிசை வீட்டிற்குச் சென்றனர்.
இவர்களைப் பார்த்தும் ஆவுடையம்மாளின் முகம் மலர்ந்து, அப்படியே அகல்யாவை கட்டிக் கொண்டாள்.
''அத்தே... உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு?'' என்று அன்பாய் விசாரித்தாள் அகல்யா.
''கடவுள் தான் உங்க ரெண்டு பேர் ரூபத்திலும் வந்து என்னைக் காப்பாற்றி இருக்காரு,'' என்று கூறி கண்ணீர் விட்டவள், ''உங்க மருத்துவ உதவியினாலே, நல்லா குணமாயிட்டேன்னு டாக்டர் சொல்லிட்டாரும்மா. மருந்து மட்டும் சாப்பிட்டா போதுமாம்... ஆனா, உங்க மாமா தான் இன்னும்...'' என்று சோகமாய் இழுத்தவள், ''அதுதான் பாப்பாபட்டிக்காரி கிட்ட கிறங்கி கெடக்காரே... நான், இனி அவருக்குத் தேவையில்ல,'' என்றாள் விரக்தியுடன்!
''அத்தே... இத நான் விடப்போறதில்ல,'' என்றாள் ஆவேசமாக அகல்யா. அவளைச் சமாதானப்படுத்தினான் வேந்தன்.
சற்று நேரத்தில் சுடச்சுட கருப்பட்டி காபி தந்தாள் ஆவுடையம்மாள். வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவாறே, அதை ரசித்துப் பருகினர் இருவரும். தூரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை, அழகாகப் படுத்துக் கிடந்தது. அதைப் பார்த்ததும், ''கடவுள் கல்லால் போட்ட கையெழுத்து,'' என்றாள் அகல்யா.
''ஆகா... நீ எப்ப புதுக் கவிதை எழுத ஆரம்பிச்சே...'' என்று வியந்தான் வேந்தன். அப்போது தூரத்தில், பறைச்சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள் ஆவுடையம்மாள்.
''இதனால், சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், நாளைக் காலை, 10௦:00 மணிக்கு, அம்மன் கோவில் ஆலமரத்தடியில், முல்லைப்பட்டி கோவிந்தன் மகன் வேந்தனுக்கும், வீரன்புதூர் தணிகாசலம் மக அகல்யாவுக்கும், 'கேட்பு' வைச்சிருக்கு; எல்லாரும் தவறாம வந்திருங்கோ... வர்றவங்களுக்கெல்லாம் சீனிக்காப்பி உண்டு... டும்... டும்... டும்...''
வேந்தனும், அகல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''அட நீங்க ஏன் கலங்குறீங்க... மனசாட்சிய விட பெரிய சாட்சி உலகத்துல இருக்கா என்ன...'' என்ற ஆவுடையம்மாள், மதிய உணவு தயாரிக்க வீட்டிற்குள் போனாள். சிறிது நேரத்தில், நாட்டுக்கோழி குழம்பும், ஆட்டு ஈரல் வருவலும், மண்பானைச் சோறும் தயாராகி கமகமத்தது. ''அகல்யா... சமையல் ரெடியாயிருக்கு... தம்பிய தோப்புல நாலு வாழ எல அறுத்துட்டு வரச்சொல்லேன்,'' என்றாள் ஆவுடையம்மாள்.
''அவரு... நல்லா தூங்கிட்டு இருக்காரு... நான் போறேன்,'' என்றவள், ஊன்றுகோலை எடுத்துக் கொண்டாள். ஆவுடையம்மாள் தடுத்தும் கேட்கவில்லை.
வழியில், அவள் யாரைப் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்திருந்தாளோ அவன் வந்து கொண்டிருந்தான்; அவளுடைய முறைப் பையன். ஒத்தையடிப் பாதை; ஒதுங்கக் கூட வழியில்லை. அவனும், அவளைப் பார்த்துவிட்டான்.
''அகல்யா...'' என்றான், குற்ற உணர்வுடன்!
பின், அடங்கிய குரலில், ''எப்படி இருக்கே?'' என்றான்.
''நல்லா இருக்கேன் மாமா...'' என்றவளுக்கு அடுத்து, என்ன பேசுவது என்று தெரியவில்லை.
''என்னை மன்னிச்சிரு அகல்யா,'' என்றவன், கண்கள் கலங்க அழுதுவிட்டான்.
''என்னாச்சு மாமா...'' என்றாள், ஒரு கணம் தடுமாறி!
''உனக்கு செய்த துரோகத்துக்கு, ஆண்டவன் எனக்கு தண்டனை கொடுத்துட்டான்,'' என்று கூறி, வேகமாக கடந்து போய்விட்டான்.
அகல்யாவுக்கு படபடப்பாய் இருந்தது. அவசரமாக இலைகளை அறுத்துக் கொண்டு குடிசைக்கு விரைந்தவள், அத்தையிடம் விவரம் கேட்டாள். அவள் மிக சாதாரணமாக, ''அவன் பொண்டாட்டி, இவன விட பணக்காரி; ராங்கி பிடிச்சவ; கல்யாணமான ரெண்டே மாசத்துல சண்டை போட்டு, அறுத்துகிட்டு போய்ட்டா. உன்ன வேணாம்ன்னு சொன்ன பயதானே... படட்டும் விடு... நீங்க வாங்க சாப்பிட,'' என்று இலையை போட்டாள்.
ஆலமரத்தடியில், 'ஆறுக்கு மூணு' என்ற அளவில் மரப்பெஞ்ச் போடப்பட்டிருந்தது. அதில், விரிக்கப்பட்டிருந்த பவானி ஜமுக்காளத்தில், நாட்டாண்மை மற்றும் பண்ணையார் அமர்ந்திருந்தனர்; இவர்கள் தான், 'கேட்பு' நீதிபதிகள். பெஞ்சின் அருகே ஒரு மூட்டை நெல்லும், அதன் மேல், 100 ரூபாய் அடங்கிய கவரும் வைக்கப் பட்டிருந்தது.
வேந்தனையும், அகல்யாவையும் இளக்காரமாக பார்த்தவாறு, ''ஆரம்பிக்கலாமா...'' என்று கேட்டார் நாட்டாண்மை.
'ஆகட்டும்' என்பது போல், பண்ணையார் தலையசைக்கவும், அருகில் நின்றிருந்தவனை அழைத்து, ''கேச சொல்லுல...'' என்றார் நாட்டாண்மை.
அவன் தாளில் எழுதி வைத்திருந்ததை படித்தான்... ''இந்த வேந்தனும், அகல்யாவும் நம்ம குலதெய்வ கோவிலுக்கு வரி கட்றவங்க; பட்டணத்துக்கு போனவங்க கல்யாணம் செய்துக்காம, ஒரே வீட்ல தங்கி குடித்தனம் செய்துக்கிட்டு இருக்காங்க,'' என்றான் சத்தமாக!
இதைக் கேட்டு, கூட்டம் சலசலத்தது; 'சீ' என்றும், 'த்தூ' என்றும் குரல் எழுப்பியது; 'கலிகாலம் கலிகாலம்...' என்று தலையில் அடித்து கொண்டது; 'சே... இப்படியும் இருப்பார்களா...' என்று இருவரையும் துவேஷமாக பார்த்தது; சில போக்கிரிகள் அகல்யாவை பார்த்து ரகசியமாய் கண்ணடித்தனர். அவள் மனம் வெம்பி, கோபமாய் முறைக்க, அவர்கள் நக்கலாய் சிரித்தனர்.
''அமைதி... அமைதி...'' என்ற நாட்டாண்மை, ''விசாரிச்சது யார்ல...'' என்றார்.
''நம்ம மேல தெரு கோவிந்தன்.''
திடுக்கிட்டான் வேந்தன். இந்த கோவிந்தன் ஒருநாள், எக்மோரில் பர்சை பறி கொடுத்து முழி பிதுங்கி நின்றிருந்த போது, தற்செயலாய் தன் நண்பனை வழி அனுப்ப வந்திருந்த வேந்தன், 'அட நம்ம ஊர்க்காரன்...' என்று பரவசப்பட்டு வீட்டிற்கு கூட்டிவந்து, தங்க வைத்து, அவனுக்கு வேண்டியதை செய்து கொடுத்து, ஊருக்கு அனுப்பி வைத்தான். அவனும் கிளம்பும் போது, வேந்தன் காலில் விழுந்து நன்றி கூறி விட்டு போனான்.
''எலேய்... நீ பாத்தது உண்மையாலே?'' என்றார் பண்ணையார்.
''சத்தியமுங்க...'' என்றான், கோவிந்தன் கை கட்டியவாறு!
''அப்ப இவனுக்கு ஒரு மூட்டை நெல்லையும், 100 ரூபாயும் கொடுத்து அனுப்புங்க,'' என்றதும், 'கேட்பு' அறிவித்தவன், நெல் மூட்டை மற்றும் ரூபாயை கொடுக்க, அதை வாங்கி கொண்டு ஓடிப் போனான் கோவிந்தன்.
அகல்யாவை வெறுப்புடன் பார்த்தவாறு, ''இதல்லாம் உண்மையா?'' என்றார் பண்ணையார்.
''ஆமா,'' என்றாள் அகல்யா.
இந்த பதிலை கேட்டதும், மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. ''ரொம்பத்தான் அராத்து இதுகளுக்கு... கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏத்தணும்,'' என்று கூட்டத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
''கொஞ்சம் அமைதியா இருங்கல,'' என்ற நாட்டாண்மை, ''அப்புறமென்ன... குத்தம் நடந்திருக்கு; அதுக்கு சாட்சியும் இருக்கு; சம்பந்தபட்டவங்களும் குத்தத்த ஒத்துக்கிட்டாங்க. அதனால, வேந்தன், 50,000 ரூபாய் அபராதம் கட்டுறதுடன், அம்மன் கோவிலுக்கு ஒரு மாசம் உழவார பணி செய்யணும்,'' என்றவர், ''யோவ்... பண்ணையாரே... அந்த பொண்ணுக்கு நீர் சொல்லும்,'' என்றார்.
தொண்டையை செருமிக்கொண்டு, ''இதுவே உள்ளூர்ல நடந்திருந்தா தண்டனையே வேற; சரி போவட்டும்... பொண்ணும், பையனும் பிரிஞ்சே இருக்கணும். பொண்ணுக்கு, 25,000 ரூபாய் அபராதம்; அம்மன் கோவிலுக்கு, 1001 மாவிளக்கு போடணும்; இதோட கேட்பு முடியுது...'' என்றவர், துண்டை உதறி தோளில் போட்டார்.
கூட்டம் சலசலப்புடன் கலைய ஆரம்பித்த போது, ''எல்லாரும் கொஞ்சம் நில்லுங்க,'' என்றாள், உரத்த குரலில் அகல்யா.
அனைவரும் ஆச்சரியத்துடன் அப்படியே நின்றனர்.
''பெரியவங்களே... உங்ககிட்ட ஒரு நீதி கேட்கணும்...'' என்றதும், அவளையே அதிர்ச்சியுடன் பார்த்தனர் நாட்டாண்மையும், பண்ணையாரும்!
'கேட்பு' முடிந்த பின், அதுகுறித்து, பேசுவது அவ்வூர் வழக்கம் அல்ல; அதனால், கூட்டம் அசைவற்று அவளையே பார்த்தது.
''அய்யா பெரியவங்களே... இந்த கிராமத்துல இருக்கிற எல்லாரும் எங்களுக்கு ஏதாவது ஒரு முறையில உறவுக்காரங்க தான்; அதனால, புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறோம். நாங்க கல்யாணம் செய்துக்காம, பட்டணத்துல ஒண்ணா இருக்கிறது உண்மை தான். ஆனா, அவர் நகம் கூட என் மீது பட்டதில்ல.
''ஏன் தெரியுமா... உடல் ஊனமுற்றிருக்கும் நான், நிறைய படிச்சு, நல்ல வேலையில் அமரணும்ங்கிறது அவரோட எண்ணம். அதோட, திருமணம் செய்தால், அது நம்ம கிராமத்து பெரியவங்க முன்னாடி தான் நடக்கணும்ங்கிறதுல நாங்க உறுதியா இருக்கோம்.
''உங்க எல்லாருக்கும் தெரியும்... பல வருஷங்களுக்கு முன் நடந்த விபத்துல, எங்க ரெண்டு பேரோட பெத்தவங்களும் இறந்து போனதுடன், அந்த விபத்துல எனக்கு வலது கால் போயிருச்சு. அந்த நிலையில, என்னைப் பத்தி யாரும் கவலைப்படாத போது, எனக்காக இவர் தான் கவலைப்பட்டாரு. பட்டணத்துக்கு போயி வேலையை தேடிகிட்டு, என்னையும் அழைச்சுகிட்டு போய் எனக்கு அடைக்கலம் கொடுத்து, இப்ப படிக்கவும் வைக்கிறாரு.
''ஆனா, நீங்க எங்களுக்கு இப்படி ஒரு தீர்ப்ப கூறியிருக்கீங்க. பரவாயில்ல... ஆனா, இந்த தீர்ப்பு சொன்ன இவங்களை பத்தி உங்களுக்கு தெரிய வேணாமா...'' என்றதும், அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்பது போல், எல்லாரும் அவளையே பார்த்தனர்.
''தன் பொண்டாட்டி ஆவுடையம்மாளுக்கு காசநோய்ன்னு தெரிஞ்சதும், அவளை விரட்டியடிச்சு, ஊர் எல்லையில குடிவச்சு, கை கழுவி விட்டாரு இந்த நாட்டாமை. அப்ப, இந்த வேந்தன் தான் மகனா நின்னு, இன்னைக்கு வரைக்கும் அந்தம்மாவ கவனிச்சுக்கிட்டாரு. இப்ப அவங்க குணமாகிட்டாலும், அவங்கள திருப்பி கூப்பிட நாட்டாமைக்கு மனசில்ல. பாப்பாபட்டிக்காரியோட ஐக்கியமாகி கிடக்கிறார். இது, எவ்வளவு பெரிய துரோகம்...
''இந்த பண்ணையார், என் சொந்த மாமா. 'என் மகனுக்கு அகல்யா தான் பெண்டாட்டி'ன்னு என்னைப் பெத்தவங்க கிட்ட சத்தியம் செய்து கொடுத்திருந்தாரு. ஆனா, விபத்துல என் கால் போனதும், 'ஊனமுற்றவளா என் பையனுக்கு பொண்டாட்டி'ன்னு எங்கிட்டயே சொல்லி, என் மனதை குத்திக் கிழித்தவர். இப்படிப்பட்டவங்களா இந்த பெஞ்சில் அமர்ந்து எங்களுக்கு, 'கேட்பு' வைக்கணும்... சொல்லுங்க,'' என்றவளின் ஆவேசக் குரலால், ஆடிப்போனது மொத்த ஜனமும்.
'இந்த பொண்ணு கேட்கிறது சரிதான்... தீர்ப்ப நிச்சயம் மாத்தணும்...' என்று கூட்டத்தினர் முணுமுணுக்கத் துவங்கினர்.
அதேசமயம், நாட்டாண்மையும், பண்ணையாரும் தலைகுனிந்தவாறு அங்கிருந்து நடையை கட்டினர்.
கே.ஜி.ஜவஹர்