PUBLISHED ON : மே 08, 2016

அ நிறம் | அளவு
நினைவு!
பண்டிகை நாட்களில்
யாரோ வந்து
உணவு தருகின்றனர்!
தலை வாழை இலையில்
வித விதமான
உணவு வகைகள்!
லட்டைப் பார்த்ததும்
பெரிய மகனுக்கு
பிடிக்குமே என்கிறது மனது!
மெல்லிய சப்பாத்தியை கண்டு
மகளுக்கு பிடிக்குமே
என்ற நினைவு வருகிறது!
நெய் ஊற்றிய பருப்பு சாதம்
இளைய மகன் நன்றாக
சாப்பிடுவான் என்று ஞாபகம்!
அப்பளம் இளைய மகளுக்கு
ரொம்ப பிடிக்கும் என்பதை
மறக்க முடியவில்லை!
பால் பாயசம்...
மறைந்த கணவருக்கு
மிகவும் பிடிக்குமே
என்கிறது உள்ளுணர்வு!
இப்படியே எல்லாவற்றையும்
பார்த்து பார்த்து
எதையும் சாப்பிடப் பிடிக்காமல்
நினைவலைகளில்
நீந்திக் கொண்டிருக்கிறாள்
முதியோர் இல்லத்தில் ஒரு தாய்!
— 'சொல் கேளான்' ஏ.வி. கிரி,
சென்னை.
