
இவைகளும் குருவாகலாம்!
பசிய இலைகள் பழுத்துப் போவதும்
முதிர்ந்த இலைகள் உதிர்ந்து போவதும்
புதிய தளிர்கள் முளைத்து வருவதும்
இயற்கையின் நியதி என்பதைக் காட்டுவதால்
மரம் கூட குருவாகலாம்!
அழுக்கு துணிகளைச் சுமந்து
ஆற்றுக்கு போவதில் வருத்தமுமில்லை
வெளுத்த துணிகளைச் சுமந்து
வீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சியுமில்லை
கடமையைச் செய்வதில் மட்டும்
கவனம் காட்டுவதால்
கழுதை கூட குருவாகலாம்!
வேண்டுதல் வேண்டாமை இல்லாமல்
வெறுப்பு, விருப்பு காட்டாமல்
ஆளுக்கு ஏற்றார்போல் ஆட்டம் போடாமல்
தன்முன் நிற்பவரின் தன்மையை
அப்படியே காட்டும் நேர்மையால்
கண்ணாடி கூட குருவாகலாம்!
எரியும் ஒளி விளக்கை
எப்படி சாய்த்தாலும்
கவிழ்த்தாலும்
ஒளிச்சுடர் மட்டும்
உயரப் பார்த்தே எரியும்
உன்னத லட்சியத்தை சொல்வதால்
விளக்கு கூட குருவாகலாம்!
தன்னைக் கரைத்து
சுற்றி இருப்பவர்களுக்கு
உன்னத ஒளி தந்து
ஒப்பற்ற தியாகம் செய்வதால்
மெழுகுவர்த்தி கூட குருவாகலாம்!
காற்றின் அலைக்கழிப்பில்
கலைந்து போனாலும்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து
வலை பின்னும் கலையினால்
சிலந்தி கூட குருவாகலாம்!
உற்றுக் கவனிக்கிற
உயர்ந்த குணம் இருந்தால்
கற்றுக் கொள்ள நிறைய உண்டு
பெற்றுக் கொள்ள உங்களுக்கு
பிரியமுண்டா சொல்லுங்கள்!
— இளசை சுந்தரம், மதுரை.

