
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 36; திருமணமாகி, 13 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். கணவர் வயது, 43; அரசுத் துறையில் பணிபுரிகிறார். ஆரவாரமில்லாத அமைதியான நடுத்தரக் குடும்பம். நான், முதுகலைப் பட்டம் பெற்றவள்; ஆரம்பத்தில், அரசுத் தேர்வுகளுக்கு முயற்சித்தேன். பின், குடும்பம், குழந்தைகள் என்றான பின் ஆர்வம் குறைய, முழு நேர இல்லத்தரசியாகி, குடும்பம் தான் உலகம் என்றாகி விட்டது.
அம்மா... இயல்பிலேயே சக பெண் ஊழியர்களுடன் நன்றாக பழகக் கூடியவர், என் கணவர். அவ்வாறு பழகிய பெண்களில் ஒருவள், இவருக்கு ஏதோ ஒரு விஷயத்தில் உதவி செய்தாள் என்பதற்காக, கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்தார். அந்த பழக்கம், இன்று அதிகமாகி விட்டதாக உணர்கிறேன். சமீபத்தில், அவர்களுடைய பேச்சில் நெருக்கமும், உரிமையும் கலந்திருப்பதை கண்டேன். இது, என் மனதை மிகவும் உறுத்துகிறது. மற்றபடி, குடும்பத்தின் மீது அக்கறை உடையவர்; பிரச்னை வேண்டாம் என்று நிறைய விஷயங்களை மறைப்பார்; சில சமயம், பொய் கூறுவார். ஆனால், பல விஷயங்களை, சில ஆண்டுகள் கழித்த பின்பே என்னிடம் சொல்வார்.
பொதுவாகவே, ஆண் நண்பர்களை விட, பெண்களே இவரிடம் அதிக தொடர்பில் உள்ளனர். நிறைய பெண்கள் அலுவலகம் மற்றும் குடும்ப விஷயங்களை இவரிடம் கூறுவர். அதில் சில பெரியவர்களும் அடக்கம். இப்படி விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் போது, சக வயது மற்றும் இளையவர்களிடம் ஏதாவது விபரீதமாகி விடுமோ என்று பயம் ஏற்படுகிறது. ஏனென்றால், முன்பு அது மாதிரி நிறைய சம்பவங்கள், அவர் அலுவலகத்தில் நடந்துள்ளது. அதிலும், ஒரு சிலரிடம் காட்டும் நெருக்கம், அச்சத்தை உண்டாக்குகிறது. இதை நான் கேட்டு வாதம் செய்தால், 'நான் எந்த தப்பும் செய்யல; அவனவன் எவ்வளவோ தவறுகளை செய்துட்டு சுதந்திரமாக இருக்கிறான். நீ இதற்கு போய் என்னை படுத்துகிறாயே...' என்கிறார்.
நல்ல புத்தகங்கள் படிப்பது, 'பேஸ்புக்' மற்றும் 'வாட்ஸ் - ஆப்' என்று உற்சாகமாக திரிந்தவள், இப்போது, இந்த பிரச்னையை நினைத்து, கலங்கி, மனதில் உழன்று கொண்டிருக்கிறேன்.
அம்மா... என் பயம் இயல்பானதா அல்லது குறுகிய வட்டத்திற்குள் இருந்து யோசிக்கிறேனா? எனக்கு தெளிவான ஆலோசனை கூறுங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் ஆறுதலுக்காக
காத்திருக்கும் மகள்.
அன்பு மகளுக்கு —
ஆண்களை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று, பெண்களுடன் விழுந்து விழுந்து பழகுபவர்கள்; இரண்டு, 'பெண்களுடன் பழக வாய்ப்புகள் அமையவில்லையே...' என குமைபவர்கள்.
'பிலுக்கு நடை, விளையாட்டு நடை பேச்சு' என, தூய தமிழில் கூறுவர். உடலுறவை நோக்கமாக கொள்ளாது, மனைவியை ஒதுக்கி, தான் பழகுபவளில் ஒருத்தியை, மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாது, எதிர்பாலினத்திடம் அரட்டை அடிப்பது, 'விளையாட்டு நடை பேச்சு' எனப்படும். இப்படிப்பட்ட அரட்டைக்காரன்களில் ஒருவன் தான் உன் கணவன்.
'உன் இஷ்டம் போல பெண்களிடம் வழி...' என, கணவனை தண்ணி தெளித்து விட்டு விடக் கூடாது. அதேநேரத்தில், 'இவளுடன் என்ன பேச்சு, அவளுடன் என்ன பேச்சு...' என நட்டுவாக்கலி போல கொட்டிக் கொண்டேயும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடையே, மத்திமமாய் நடப்பது நல்லது.
உன் பயம் நியாயமானது தான்; முதுகலை பட்டப்படிப்பு படித்த நீ, கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அரசு பணி ஆசையை, தலை முழுகி இருக்கிறாய். நாளை, உன் கணவன் உன்னையும், உன் குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு, எவளுடனாவது போய் விட்டால், என்ன செய்வது என பயப்படுகிறாய்.
நீங்கள் இருவரும் தனித்திருக்கும் போது, உன் கணவனிடம் மனம் விட்டுப் பேசு. 'விபரீத விளையாட்டுகள் வேண்டாம்; வரம்பு மீறி எந்த பெண்ணுடனும் பழகாதே; பழகினால், உன் மனமும், அவள் மனமும் சலனப்படும். கடைசியில் இரு குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும். அன்னியப் பெண்களுடன் பழகும் போது, உனக்காக, உன் வீட்டில் உன் மனைவியும், இரு குழந்தைகளும் காத்திருக்கின்றனர் என்பதை நினைவில் வை. உன்னுடன் பழகும் சில பெண்கள், உன்னிடம் பணம் எதிர்பார்ப்பர்; அவர்களுக்கு நீ உயரதிகாரி என்றால், பணி இடத்து சலுகைகள் எதிர்பார்ப்பர்; கொடுக்க கொடுக்க திருப்தி அடைய மாட்டார்கள். பணி இடத்தில் கெட்ட பெயர் ஆகும்...' என எச்சரிக்கை செய்.
எரிச்சல் மூட்டும், புகார் செய்யும் தொனியில் பேசாதே... அன்பும், அக்கறையும், காதலும் வழியும் தொனியில் பேசு.
ஒரு திறமையான விவசாயி, தன் பயிர்களுக்கு இடையே களையைக் கண்டால், அதை மட்டும் எப்படி நுட்பமாய் களைவானோ, அந்த சாமர்த்தியம் உனக்கு வேண்டும்.
கணவன் பணி முடிந்து வரும் போது அழுக்காய், அயர்வாய் இல்லாமல், குளித்து, புத்தம் புதிய ஆடை அணிந்து, வரவேற்க பழகு. கணவன் விரும்பும் விளையாட்டு நடை பேச்சுகளை, அந்தரங்கமாய் கணவனுடன் பேசு. கணவனின் நடவடிக்கைகளை உளவறியும் பணியில் மட்டும் ஈடுபடாமல், புத்தகங்கள் வாசி, முகநூல் மற்றும் 'வாட்ஸ் - ஆப்'களில் ஆக்டிவ்வாக செயல்படு.
நீ குறுகிய வட்டத்தில் நின்று யோசிக்கவில்லை; உலக நடப்பு, உன்னை எச்சரிக்கிறது.
கணவனுடனான தாம்பத்யத்தையும், தகவல் தொடர்பையும் மேம்படுத்திக் கொண்டே, எதிர்காலத்தை இறைவனிடம் ஒப்படை; எல்லாம் நல்லதே நடக்கும்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

