தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெளியேறிய வெளிச்சம்!

நன்றாய் நினைவிருக்கிறது

நல்லவர்கள் தாம் நாம்!

வைத்திருந்தது தொலைந்து விட்ட

வருத்தத்தில் வாடுகிறோம்!

எங்கே தொலைத்தோம்

எப்போது தொலைத்தோம்

இப்போது நினைத்தாலும்

இதயம் கனக்கிறது!

எறும்பின் இரைப்பைமேல்

இரக்கம் இருந்ததால் தான்

மண்ணில் மாக்கோலம்

மலர்ந்தது அந்நாளில்...

அணுவளவே அதன்வயிறு

அதற்கும் பசிக்குமென்றுதானே

அன்னமிட்டு ஆனந்தித்தோம்!

கரையும் காகத்தின் மேல்

கருணை பிறந்ததால் தான்

சனிக்கிழமைகளில்

சாப்பாடு வைக்கிறோம்!

பசுவின் மீது உள்ள பாசமே

அகத்திக்கீரையும், கழுநீரும்

ஆகாரமாகியது!

கொட்டும் குளவியதன்

கூட்டைக் கலைப்பது

பாவமென்றே

இருக்கும் வீட்டிலது

கூடு கட்ட அனுமதித்தோம்!

ஈசல் புற்றுக்குள்

இருக்கும் பாம்பின்மேல்

எழுந்த நம்பிக்கையே

பாலாய் சொரிந்தது!

தூது போன புறாவை

தோதான பறவையாக்கி

அமைதியின் சின்னமாக

அடையாளப்படுத்தி வைத்தோம்!

எல்லா உயிர்மீதும்

இரங்கிய நாமேதான்

இன்றோ

இரங்குவார் இல்லையென

இறைவனிடம் இறைஞ்சுகி றோம்!

எல்லா வாசலையும்

இறுக அடைத்துப் பூட்டி

வெளிச்சம் இல்லையென

வெதும்புகிறோம் உள்ளத்துள்!

கருணை பிறக்குமிடம்

கடவுள் இருக்குமிடம்

தூசுதட்டி மீட்டெடுப்போம்

தொலைத்துவிட்ட இரக்கத்தை!

மீட்டெடுத்தால்...

வெளியேறிய வெளிச்சம்

வீட்டுக்குள் பிரவேசிக்கும்!

வளர்கவி ராதாகிருஷ்ணன்,

கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us