
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாடமாய்த் திகழ்வாய்!
எப்போதும்
இயல்பாய் இருக்க
இயற்கையிடம்
கற்றுக்கொள்!
உனக்காக
அழுவதைக் காட்டிலும்
உனக்காக
உலகம் அழும்படியாய்
வாழ்ந்து விட்டுப் போ!
காலம் மாறினாலும்
திசைகள் தடுமாறினாலும்
வாழ்க்கை மாறாமல்
அறவழியை நோக்கி
பயணமாகு!
தோல்வி இல்லாத
வாழ்க்கை இல்லை...
தோல்வியை கண்டு
துவண்டு விடாமல்
காலையில் எழும்
கதிரவனாய் நித்தம் எழு...
உறுதியாகும்
உன் வெற்றி!
மனதை
ஒவ்வொரு நாளும்
சலவை செய்...
வந்து அமர்வார் கடவுள்!
இதயத்தை
தாமரையாய் மலர்த்து
வந்து படுத்துறங்கும்
விரிந்த வானமே!
வெயிலென்று
காய்ந்திட மறுக்காதே
மழையென்று
நனையாமல் ஒதுங்கி விடாதே
பனியென்று
குளிர்போக்கத்
தீயில் குதிக்காதே
குடையாய் மாற்று
வானத்தையே!
படிகளை வெறும்
படிகளாக பார்க்காமல்
படி படியென
படித்துப்பார்
நீயே நாளை
பிறர் படிக்கும்
பாடமாய்த் திகழ்வாய்!
- ராம.இளங்கோவன்,
பெங்களூரு.

