
மறைந்த வேலூர் நாராயணனின், 'ஒரு மேயரின் நினைவுகள்' நூலிலிருந்து: எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப் பட்டார். நான் நடத்தி வந்த, 'அலை ஓசை' நாளேடு, அ.தி.மு.க.,வை பலமாக ஆதரித்தது.
இந்தச் சூழ்நிலையில், 'அலை ஓசை'யில் வேலை பார்த்த பத்திரிகையாளர்களிடம், 'நீங்கள் ஒரு நாளேடு துவங்குங்கள்; நான் பணம் தருகிறேன்...' என்று கூறியிருக்கிறார், எம்.ஜி.ஆர்., பத்திரிகை நண்பர்களும், நாளேடு துவங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
'மக்கள் குரல்' என்ற தலைப்பு, என்னிடம் இருந்தது; அதையும் கேட்டு, வாங்கிக் கொண்டனர். ஆனால், வழக்கம் போல தான் கூறியபடி பணம் கொடுக்கவில்லை எம்.ஜி.ஆர்., என்ன செய்யலாம் என்று யோசித்த பத்திரிகையாளர்கள், 'உங்கள் செய்திகளை, 'அலை ஓசை'யில் வெளியிடக் கூடாது என்று வேலூர் நாராயணன் சொல்கிறார்...' என்று என்னைப் பற்றி, எம்.ஜி.ஆரிடம் குறை கூறி, அவரை உசுப்பி விட்டனர்.
இதனால், கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்., சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், 'நாம், 'அலை ஓசை'யை மட்டும் நம்பி இருக்கக் கூடாது; நமக்கு என்று ஒரு பத்திரிகை வேண்டும்...' என்று கூறினார்.
இதில், எனக்குக் கொஞ்சம் வருத்தம். தொடர்ந்து, 'அலை ஓசை'க்கு விரோதமாக, எம்.ஜி.ஆரிடம் தூபம் போட்டனர். இதனால், அவரும், 'அலை ஓசை'க்கு விரோதமாகச் செயல்படத் துவங்கினார்.
பூவிருந்தவல்லி சின்னச்சாமி என்பவர், தி.மு.க.,வில் இருந்து விலகி, பழைய காங்கிரசில் சேர முடிவு செய்து, காமராஜரை சந்தித்துப் பேசினார். பின், சின்னச்சாமி ஒரு அறிக்கை தயாரித்து, 'நவசக்தி'க்கு கொடுத்தார்; அந்த அறிக்கையை, 'அலை ஓசை'யும் வெளியிட்டது.
அன்றிரவு, என்ன மந்திர ஜாலம் நடந்ததோ தெரியவில்லை. மறுநாள், அ.தி.மு.க.,வில் சேர்ந்து விட்டார் சின்னசாமி.
இதையும், 'நேற்று பழைய காங்கிரசில் சேர்ந்த சின்னச்சாமி, இன்று அ.தி.மு.க.,வில் சேர்ந்து விட்டார்...' என்று, 'அலை ஓசை' செய்தி வெளியிட்டது.
அ.தி.மு.க., வில் சின்னச்சாமி இணைந்ததைப் பாராட்டி, பூவிருந்தவல்லியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதிலும், 'அலை ஓசை'க்கு எதிராக பேசிய எம்.ஜி.ஆர்., 'இப்போதெல்லாம் அ.தி.மு.க.,வுக்கு விரோதமாய் பொய் செய்திகளை, 'அலை ஓசை' வெளியிடுகிறது. சின்னசாமி அ.தி.மு.க.,வில் இணையும் செய்தியை, நானே, 'அலைஓசை'க்குப் போன் செய்து தெரிவித்தேன். ஆனால், அவர் பழைய காங்கிரசில் சேர்ந்து விட்டதாகப் பொய் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள், இனிமேல், 'அலை ஓசை'யை வாங்கக் கூடாது; 'மக்கள் குரல்' பத்திரிகை தான், அ.தி.மு.க., செய்திகளை உள்ளது உள்ளபடியே வெளியிடுகிறது; எனவே, இனிமேல் அ.தி.மு.க., தொண்டர்கள், 'மக்கள் குரலை' தான் வாங்க வேண்டும்...' என்றார்.
எம்.ஜி.ஆரின் குற்றச்சாட்டுக்கு, 'அலை ஓசை'யில் பதில் எழுதினேன்.
அதன்பின், 'சமநீதி' பத்திரிகை வெளியீட்டு விழாவில், 'நமக்கு விரோதமாகச் செயல்படும், 'அலை ஓசை'யை அ.தி.மு.க., தொண்டர்கள், மூன்று மாதங்களுக்கு வாங்காதீர்கள். அதன்பின், 'அலை ஓசை' எப்படி வெளிவருகிறது என்று பார்ப்போம்...' என்று சவால் விட்டுப் பேசினார் எம்.ஜி.ஆர்., இந்தப் பேச்சையும், 'அலை ஓசை' முழுமையாக வெளியிட்டது.
மூன்று மாதங்கள் கடந்தன. 'அலை ஓசை'க்கு, 'எம்.ஜி.ஆர்., விதித்த மூன்று மாத கெடு முடிந்து விட்டது; ஆனால், 'அலை ஓசை'யின் விற்பனை குறையவில்லை. காரணம், அதன் நடுநிலையை அ.தி.மு.க., தொண்டர்கள் புரிந்து வைத்துள்ளனர்...' என்று எழுதினேன்.
இதன்பின், 'அலை ஓசை'யையும், அதன் கட்டடத்தையும் சேர்த்து, எம்.ஜி.ஆரிடமே, வேலூர் நாராயணன் விற்க வேண்டியதாயிற்று. எம்.ஜி.ஆர்., அந்த அலுவலகத்தில் இருந்து தான், 'அண்ணா' நாளிதழைத் துவங்கி, நடத்தினார்.
'படித்ததில் ரசித்தது' நூலிலிருந்து: எலிசபெத் ராணியின் நிச்சயதார்த்தத்திற்கு, தன் கையால் தானே நெய்த மேஜை விரிப்பு ஒன்றை, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுத்து, ராணியிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார் காந்திஜி. அதை அனுப்பும் போது, ஒரு காகிதத்தில், 'இந்த மேஜை விரிப்பை, அரண்மனை நகைப்பெட்டியில் வைத்து பாதுகாக்கவும்...' என்று எழுதி, அனுப்பினார், மவுண்ட்பேட்டன் பிரபு.
நடுத்தெரு நாராயணன்

