
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
சாவித்திரிக்கு தங்கக் கொலுசு மீது ரொம்ப ஆசை. தனக்குத் தெரிந்த நகை செய்யும் ஆசாரியிடம் சொல்லி, இதுவரை யாரும் அணியாத மாடலில், தங்கக் கொலுசு செய்து தருமாறு கேட்டார்.
நகை ஆசாரியும், சாவித்திரியின் மனதுக்குப் பிடித்தபடி, அதி நவீன மாடலில், கொலுசு ஒன்றைச் செய்து கொடுத்தார். அதை, ஆசை ஆசையாக காலில் அணிந்து கொண்டார், சாவித்திரி. அந்தக் கொலுசுகள் அவருக்கு மிகவும் எடுப்பாகவும், அழகாகவும் இருந்தன.
சாவித்திரி காலில் தங்கக் கொலுசு அணிந்திருப்பது, அன்றைய காலக்கட்டத்தில் ஆச்சரியமான செய்தியானது.
சாவித்திரியின் நல விரும்பிகள், 'பெண்கள், காலில் தங்கக் கொலுசு அணிந்தால், அது குடும்பத்திற்கு ஆகாது; கழற்றி விடு...' என அவரை பயமுறுத்தினர்.
ஆனால், சாவித்திரியோ, 'பார்ப்போம்...' என்ற ஒற்றைச் சொல்லில் அவர்கள் வாயை அடைத்து விட்டார். இச்சூழலில், சாவித்திரியின் வீட்டில், சில பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பித்தன. சாவித்திரியின் பாட்டி, திடீர் என உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். சாவித்திரி மிகவும் நேசித்தவர்களில் இந்தப் பாட்டியும் ஒருவர். தன் பாட்டியின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானது, சாவித்திரியைக் கவலை கொள்ளச் செய்தது.
ஆந்திராவில் ஜோசியர் ஒருவர் இருப்பதாகவும், அவரைப் போய் பார்த்தால், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் எல்லாம் விலகும் என்று தோழி ஒருத்தி கூறிய ஆலோசனையை ஏற்று, அந்த ஜோசியரைப் பார்க்க முடிவெடுத்தார்.
ஜோசியரோ, சாவித்திரி காலில் அணிந்திருக்கும் தங்கக் கொலுசுகள் தான் பாட்டியின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் என்றார்.
இதனால், தன் பாட்டியை விட, தன் ஆசை பெரிதல்ல என நினைத்து, காலில் இருந்த கொலுசுகளை அகற்றினார் சாவித்திரி.
காகம் உட்கார பனம் பழம் விழுந்த கதையாய், சாவித்திரி கொலுசுகளை கழற்றிய சில நாட்களில், உடல் நிலை தேறி, பழைய நிலைமைக்கு வந்தார் பாட்டி.
ஆண் குழந்தை வரம் வேண்டி, கோவில் கோவிலாகச் சென்ற சாவித்திரி, ராமேஸ்வரத்தில் உள்ள காசிலிங்கக் கோவிலுக்கு சென்றால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக் கேள்விப்பட்டு, தன் கணவர் ஜெமினியுடன், ராமேஸ்வரம் செல்ல முடிவு செய்தார்.
புயலால் அழிந்து போனதாக இன்று அடையாளம் காட்டப்படும் தனுஷ்கோடி, அன்று துறைமுகம் அமைந்த அழகான பேரூராக இருந்தது. கடைகளும், வீடுகளுமாக மக்கள் வாழும் பகுதியாகத் திகழ்ந்தது.
தன் குடும்பத்துடன் தனுஷ்கோடி சென்றார், சாவித்திரி. அமைதியாக ஆடிக் கொண்டிருந்த கடல், அன்று வெறித்தனமாகச் சீறத் துவங்கியது.
'காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, தனுஷ்கோடி பகுதியில் நிலை கொண்டுள்ளது...' என, வானொலியில் செய்தி அறிவித்தனர்.
புயல், தனுஷ்கோடிப் பகுதியைச் சுருட்டத் துவங்கியது. போக்குவரத்தும், மின்சாரமும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, உருத்தெரியாமல் அழிந்தது தனுஷ்கோடி. சாவித்திரியின் குடும்பமும் புயலில் சிக்கிக் கொண்டது.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தை ஆட்சி செய்த காலம் அது. முதல்வர் பதவியில் பக்தவத்சலம் இருந்தார். புயலால் தனுஷ்கோடி பாதிக்கப்பட்டதை அறிந்து, அமைச்சர் கக்கனை, உடனடியாக ராமேஸ்வரம் அனுப்பி வைத்தார் பக்தவத்சலம்.
ராமேஸ்வரம் வந்த கக்கனிடம், சாவித்திரியின் குடும்பம் புயலில் சிக்கிய விவரம் சொல்லப் பட்டது; அவர்களை மீட்க உடனடியாக ஏற்பாடு செய்தார் கக்கன்.
உயிர் போய் உயிர் வந்த நிலையில், கக்கன் உதவியால், சென்னை வந்து சேர்ந்தது, சாவித்திரியின் குடும்பம்.
ராமேஸ்வரம் கோவிலுக்குப் போய் வந்த சில நாட்களில், கர்ப்பம் ஆனார், சாவித்திரி. அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என அசைக்க முடியாத நம்பிக்கையோடு, கடவுளிடம் வேண்டி நின்றார்.
தாய்மை அடைந்த சாவித்திரி, அந்த நேரத்தில், ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான, சரஸ்வதி சபதம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
சரஸ்வதியாக மேக் - அப் போட்டு, படப்பிடிப்பிற்கு வரும் நாள் எல்லாம், கற்பூர வழிபாடு செய்த பின்தான், அவர் தொடர்பான காட்சிகளை படமாக்க துவங்குவார், ஏ.பி.என்., ஆக.,18, 1965ல் அழகான ஆண் குழந்தைக்குத் தாயானார் சாவித்திரி. அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியை, அன்று தான் அடைந்தார். இதை, பின்னாளில் ஒரு பத்திரிகையிலும் குறிப்பிட்டார் ஜெமினி.
ஆண் வாரிசு கிடைத்ததில், ஜெமினிக்கு அளவில்லா ஆனந்தம். முதல் குழந்தை பிறந்து, ஆறு ஆண்டுகள் கழித்து தான், இரண்டாவது குழந்தைக்கு தாயானார் சாவித்திரி.
ஏ.பி.நாகராஜன், முதன் முதலாக, தன் சொந்தப் பட நிறுவனமான, ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் சார்பில், 1964ல் தயாரித்த படம், நவராத்திரி.
நவரசங்கள் என்று கருதப்படும், ஒன்பது பாவங்களையும் ஒரே நடிகரை வைத்து, ஒன்பது வேடமாகக் காட்டி, அந்த ஒன்பது பேரிடமும், ஒரு பெண் மாட்டிக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற சிறிய கதைக்கருவை, சிவாஜியை நம்பி படமெடுத்தார், ஏ.பி.நாகராஜன்.
'சிவாஜியின் முன், போட்டி போட்டு நடிக்க எந்த நடிகையைத் தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும்...' என, நினைத்தவரின் மனதில் தோன்றிய பெயர் தான் சாவித்திரி!
வீரம், வெறுப்பு, வியப்பு, கோபம், சோகம், கருணை, சிரிப்பு, அன்பு மற்றும் அமைதி எனும் நவரசத்தை, சிவாஜியை போன்றே கதாநாயகியும் காட்ட வேண்டும். அதற்குப் பொருத்தமான நடிகை சாவித்திரியே என்று, ஏ.பி.என்., தேர்தெடுத்தது சரியான தேர்வாகவே இருந்தது.
சிவாஜி என்ற சிங்கத்தை எதிர்த்து நின்று, நடிப்பில் தான் ஒரு புலி என்பதை மெய்ப்பித்தார் சாவித்திரி.
நவராத்திரி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், மனநலம் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள, மனநல மருத்துவமனைக்கு போயிருந்தார் சாவித்திரி.
பொதுவாக தான் நடிக்கயிருக்கும் காட்சிகளை, முதலிலேயே, தன் வீட்டில் ஒத்திகை பார்த்து விட்டுதான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவார் சாவித்திரி.
நடிப்பை மெருகேற்ற மனநல மருத்துவமனைக்கு சென்ற சாவித்திரி, அங்கே மனநலம் பாதிக்கப்படுவோர் அடையும் சித்ரவதையை கண்டு, துடித்து விட்டார்.
நாயை விடக் கேவலமாக அவர்கள் நடத்தப்படும் முறையும், கேள்வி கேட்க நாதியின்றி அவர்களை அடித்துத் துன்புறுத்தும் கொடுமையைக் கண்டு அழுது விட்டார்.
உள்ளம் உடைந்து, மனநலம் குன்றியவர் படும் சித்ரவதைகளை நினைத்து, மூன்று நாட்கள் உணவருந்தாமல் தன்னை வருத்திக் கொண்டார்.
படப்பிடிப்பில் அக்காட்சியை எடுக்கும் போதெல்லாம், மன இறுக்கத்துடனே காணப்பட்டார், சாவித்திரி. அவர் உள்ளத்தில் மனநலம் குன்றியவர்களின் வேதனைகள் வந்து போய்க் கொண்டேயிருந்தது.
இக்காட்சியில், சாவித்திரியுடன் அன்றைய பிரபல இரண்டாம் கட்ட நடிகைகள் பலபேர் நடித்திருந்தனர். அவர்கள் சாவித்திரியின் வேண்டுகோளை ஏற்று நடிக்க வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், தன் சொந்த செலவில், பட்டுப் புடவையும், வைர மோதிரமும் அன்பளிப்பாக வழங்கினார்.
மருத்துவராக நடித்த சிவாஜியிடம், பைத்தியமாக நடிக்கும் சாவித்திரி மாட்டிக் கொள்ளும் காட்சியில், சாவித்திரியின் விழிகள் காட்டிய அபிநயம், நடிப்பின் பாய்ச்சலாகத் தென்பட்டது.
நவராத்திரி படத்தின் வெற்றியில், சாவித்திரியின் பங்கும் அழுத்தமாகப் பதிவானது. அப்படத்தின் வெற்றி விழாவில், சிவாஜி அதைக் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த, 1965ல், தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் அரங்கேறிய சிவ லீலை என்ற நாடகத்தை படமாக்க, திட்டமிட்டார், ஏ.பி.நாகராஜன்.
சிவபெருமானின் லீலைகளைக் கூறும் இக்கதையை, திருவிளையாடல் என்ற பெயரில், திரைப்படமாகத் தயாரிக்கத் துவங்கினார்.
குடும்பப் படங்கள், சமூகம் மற்றும் அதிரடிப் படங்கள் கொடிகட்டிப் பறந்த அந்நேரத்தில், புராணப் படங்கள் மக்கள் மனதை விட்டு, ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திருவிளையாடல் என்ற புராணக் கதையை, ஏ.பி.என்., படமாக எடுக்கிறார் என்றதும், எல்லாரும் அவரைக் கேலியாகத்தான் பார்த்தனர்.
சிவனாக நடிக்க சிவாஜியை முடிவு செய்த, ஏ.பி.என்., சக்தியாக, சாவித்திரியை ஒப்பந்தம் செய்தார்.
தமிழ் திரையுலகில் கோலோச்சிய ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒரு சில நடிப்புகள் தான் பிரமாதமாக வரும். ஆனால், நவரசத்தையும் ஒரே காட்சியில் காட்ட முடியும் என்பதை மெய்ப்பித்த நடிகைகளில் சாவித்திரிக்கே முதலிடம் உண்டு.
சக்தியாக, திருவிளையாடலில் சாவித்திரி நிமிர்ந்து நின்ற போது, பல வீடுகளில், படத்தில் சக்தியாக சாவித்திரி தோன்றிய படங்கள் மாட்டப்பட்டன. சாவித்திரிக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே பெரிய பாராட்டாக இது அமைந்தது.
— தொடரும்.
ஞா.செ.இன்பா

