sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 05, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரிக்கு,

வணக்கம்; நான் புகைப்பிடித்தல் உட்பட, எவ்விதமான கெட்ட பழக்கமும் இல்லாத, நேர்மையான அரசு அதிகாரி. என் வயது, 55; என் மனைவிக்கு, 50 வயது. எங்களுக்கு திருமணமாகி, 28 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரை, உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால், தாம்பத்ய உறவிலும் குறை இல்லை. 25 மற்றும் 22 வயதில் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவருமே, கம்ப்யூட்டர் இன்ஜினியர்களாக சென்னை மற்றும் பெங்களூரில் பணி புரிகின்றனர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவருமே பெரியோரை மதிக்கிற, ஒழுக்கமான, புத்திசாலியான பிள்ளைகள். என் மனைவியும் அதிர்ந்து பேசாத, சொன்ன சொல் தட்டாத குணமுள்ளவள். 90 வயதான என் தாயை நன்கு பராமரித்து வருகிறார். என் மனைவியின் பராமரிப்பால் தான், என் தாய் இன்று வரை ஆரோக்கியமாக இருக்கிறார்.

எங்களது இத்தனை ஆண்டு கால இல்லற வாழ்வில், இரண்டு முறை மட்டுமே எங்களுக்குள் சண்டை வந்துள்ளது. என் மனைவி எங்கள் மீது எந்தளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறாளோ, அதற்கு மேல் என் மனைவி மீது நானும், குழந்தைகளும் அன்பு செலுத்துகிறோம். எங்களது குடும்பத்திற்கென சொந்த வீடும், காரும், பெண் குழந்தைகளுக்கும், மனைவிக்கும் போதுமான நகைகளும் உள்ளன.

இவ்வளவு சிறப்பும், குதூகலமும், கேலியும், கிண்டலுமாக வாழ்ந்து வந்த என் குடும்பம், இன்று சீரழிந்து நிற்கிறது. கடந்த, மூன்று ஆண்டுகளாக, இன்னொருவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்திருக்கிறாள், என் மனைவி. எனக்கு தெரிந்து விசாரித்த போது, எதையும் மறைக்காமல் ஒத்துக் கொண்டாள். அவளுடைய வயது மற்றும் எங்கள் மீது காட்டிய அன்பினால், அவள் மீது எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. விஷயம் தெரிந்து, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன், வீட்டை விட்டு வெளியேறினேன். பின், குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, ஒரு வாரம் கழித்து திரும்பி விட்டேன்.

தவறை உணர்ந்து விட்டதாக அவள் என்னிடம் கெஞ்சியதால், மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் வராமல், வேலைக்காரி போல இருக்கச் சொல்லி விட்டேன். அவளை ஏறிட்டும் பார்ப்பதில்லை. சமைத்த உணவுகளை, என் தாய் தான் பரிமாறுகிறார்.

கடந்த ஓராண்டாக, குழப்பமான மனதோடு வாழ்ந்து வருகிறேன். நீங்கள் தான், எனக்கு பதில் வழங்க வேண்டும்.

இப்படிக்கு,

சகோதரன்.



அன்பு சகோதரருக்கு,

கள்ள உறவில் ஈடுபட வேண்டும் என்கிற திட்டமிடல் இல்லாமலேயே உங்கள் மனைவிக்கும், கள்ள உறவு கொண்ட நபருக்கும் நட்பு துவங்கியிருக்கலாம். அந்த நபரின் பேச்சு, கரிசனம், அக்கறை, நகைச்சுவை மற்றும் பெண்களின் இருப்பை அங்கீகரிக்கும் தன்மை போன்றவை, உங்கள் மனைவியை மயக்கியிருக்கலாம். ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவருக்கு இந்த நட்பை, அடுத்தபடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உருவாகி, செக்சில் ஈடுபட்டிருக்கலாம்.

உங்கள் மனைவி, உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் மீதும் பாசத்தை கொட்டி இருப்பது நடிப்பல்ல; யதார்த்தமான செயல்பாடு. அதே பாசத்தை தான் கள்ள நபர் மீதும் கொட்டியிருக்கிறாள்.

உங்கள் மனைவி மீது வெறுமனே குற்றம் சாட்டாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்களோ, உங்களது மகள்களோ, ஏதாவது ஒரு விதத்தில், உங்கள் மனைவியை விட்டு விலகியிருந்தீர்களா, யாராவது அன்னிய ஆணை, தினசரி வீட்டுக்குள் அனாவசியமாக நுழைய விட்டோமா, பேச விட்டோமா என, யோசியுங்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஏதாவது ஒரு மோசமான வார்த்தையை கூறி, மனைவியின் மனதை காயப்படுத்தினீர்களா? உல்லாசத்தில் நாட்டம் கொண்ட தோழி யாராவது, உங்கள் மனைவிக்கு அறிமுகமாயினரா என்று பட்டியல் எடுங்கள். அனைத்துக்குமோ, சிலவற்றுக்கோ நீங்கள், 'ஆம்...' என்று கூறினால், அதுவே, உங்கள் மனைவியின் கள்ளத் தொடர்புக்கு அடிப்படை காரணமாக இருக்கக் கூடும்.

நீங்கள் தற்கொலை செய்து கொண்டால், உங்கள் மனைவி, கள்ள உறவை தொடர, 100 சதவீத வாய்ப்பிருக்கிறது. தான் செய்த தவறை பொய் பேசி, பூசி மொழுகாமல், ஒத்துக் கொண்டது, அவளது நேர்மையை காட்டுகிறது. தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்கும் அவளை வேலைக்காரி போன்று உதாசீனப்படுத்தாமல், அவளின் இந்த மனத் தடுமாற்றத்திற்கு எது காரணமாய் இருந்தனவோ, அதை நீக்குங்கள். குற்றவாளியை பார்ப்பது போல பார்க்காமல், மூன்று ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டிருந்த மனைவி, பூரண குணமடைந்து விட்டதாக நினைத்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். சுற்றுலா செல்லுங்கள்; மகளுக்கு வரன் பார்த்து, திருமணம் செய்து வையுங்கள். 'மனைவி பற்றிய மனக்குழப்பம் இனி எனக்கு இல்லை...' எனக்கூறி, சுயவசியம் செய்து கொள்ளுங்கள். தண்டிப்பது மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம். தெய்வ நிலைக்கு உயருங்கள்.

எப்போதும் போல மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ளுங்கள். அவள் சமைத்த உணவை, அவள் கையால் சாப்பிடுங்கள். புனர் ஜென்மம் எடுத்ததாக, வாழ்க்கையை பாவியுங்கள்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us