sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

செய்வது எதற்கு?

/

செய்வது எதற்கு?

செய்வது எதற்கு?

செய்வது எதற்கு?


PUBLISHED ON : ஜூன் 05, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடை, அணிகலன்கள் மற்றும் நடவடிக்கைகள் என, மற்றவரின் செயல்களை நாம், நம் நன்மையின் பொருட்டு பின்பற்றுகிறோம். ஆனால், அதுவே அடுத்தவருக்கு நன்மை கிடைக்கும் என்றால் நம்மில் எத்தனை பேர் அதை பின்பற்ற துணிவோம்... ஆனால், ஆஞ்சநேயர் தன் அன்பிற்குரிய ஸ்ரீராமருக்காக உடம்பெங்கும் செந்தூரத்தை பூசிக் கொண்ட கதை இது:

அசோகவனத்தில் அழுத கண்களும், கலங்கிய மனதுடனும் அமர்ந்திருந்தாள், சீதை. சுற்றிலும் அரக்கியர் கூட்டம் அவளை மிரட்டியவாறு இருந்தது. ராவணன் எச்சரிக்கை செய்து விட்டு போனான். ஸ்ரீராமரின் உத்தரவுப்படி, சீதையைத் தேடிப் போன ஆஞ்சநேயர், மரத்தின் மேல் அமர்ந்து இதையெல்லாம் பார்த்தவாறு இருந்தார்.

பின், சீதையை தரிசித்த ஆஞ்சநேயர், அவளின் தோற்றம் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

காரணம், விலை மதிப்பில்லா ஆபரணங்களை எல்லாம் நீக்கி, அலங்காரத்தில் ஆர்வம் இல்லாதிருந்த சீதையின் நெற்றி உச்சி வகிட்டில், செந்தூரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அதனால், 'தாயே... ஆபரணங்கள் அனைத்தையும் நீக்கிய உங்கள் திருமுகம் சோகத்தில் வாடியிருப்பதாலேயே அந்தப் பாவி ராவணன், உங்களை நெருங்காமல் இருக்கிறான். அப்படியிருக்கும் போது செக்கச் செவேலென்று ஏதோ ஒரு அலங்காரத்தை செய்து, உங்கள் முக லட்சணத்தை, ஏன் பிரகாசிக்கும்படியாக வைத்துள்ளீர்கள்?' எனக் கேட்டார்.

புன்முறுவலுடன், 'அருமை மகனே ஆஞ்சநேயா... இது, என் அழகை வெளிப்படுத்துவதற்காக செய்து கொண்ட அலங்காரம் அல்ல; ஸ்ரீராமரின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும் காப்பு ரக் ஷை. திருமணமான பெண்ணின் திருமாங்கல்யத்தை காத்தருளும் மங்கல ரக் ஷை இது!

'இதை, இரண்டு இமைகளுக்கிடையில் இடுவர்; சாந்து, மை இட்டுக் கொள்ளும் வழக்கமும் உண்டு. ஆனால், கணவரின் நலனுக்காக, குங்குமம் எனும் இந்த செந்தூரத்தை தான், மகாலட்சுமியின் இருப்பிடமான நெற்றியின் உச்சி வகிட்டில் இட்டுக் கொள்ள வேண்டும்.

'என் கெட்ட காலத்திலும், நல்ல காலமாக, இங்குள்ள திரிகூட மலையில், செந்தூரப் தாதுப் பாறைகள் உள்ளன. அதை தினமும் குழைத்து, என் கணவரின் ஆரோக்கிய, ஆயுள் விருத்திக்காக, இவ்வாறு இட்டுக் கொள்கிறேன்...' என்றாள்.

இதைக் கேட்டதும் ஆஞ்சநேயருக்கு மெய் சிலிர்த்தது.

'செந்தூரம் இடுவது ஸ்ரீராமருக்கு நல்லது என்றால், அதை சீதை மட்டும் ஏன் செய்ய வேண்டும். சீதை வகிட்டில் இட்டு கொண்டால் நாம் உடல் முழுவதும் பூசிக் கொள்வோம்...' என எண்ணியவர், வால், தலை மற்றும் கால் என, உடல் முழுவதும் செந்தூரத்தை பூசினார். இதன் காரணமாகவே, ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசும் வழக்கம் உண்டானது. இவரை, செந்தூர ஆஞ்சநேயர் எனவும் அழைக்கிறோம்.

ஸ்ரீராமரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சீதையை பார்த்து, தானும் செந்தூரம் பூசிக் கொண்ட செந்தூர ஆஞ்சநேயர், நமக்கும் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டுவோம்!

- பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

வான் பாவிய உலகத்தவர் தவமே செய் அவமே

ஊன் பாவிய உடலைச் சுமந்து அடவி மரமானேன்

தேன் பாய் மலர்க்கொன்றை மன்னு

திருப்பெருந்துறை உறைவாய்

நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனலாமே!

விளக்கம்:
தேன் பெருகிப் பாயும் கொன்றை மலர்கள் நிலை பெற்ற, திருப்பெருந்துறை சிவபெருமானே... உலகில் உள்ள உயர்ந்தோர் எல்லாம் உன்னைக் குறித்து தவம் செய்கின்றனர். நானோ, சதை நிறைந்த இந்த உடம்பை வீணாக சுமந்தவனாக, உடல் சுகத்தையே பெரிதென நினைத்து, காட்டு மரத்தை போல பயனற்றவனாக இருக்கிறேன். நான் பாவியாக இருந்தாலும், எனக்கும் இரங்கி, நின்னைத் தந்தருள்வாயாக!

கருத்து: உடல் சுகத்தையே பெரிதென மதித்து, பயனற்று கிடக்கும் எனக்கும் இரக்கம் காட்டி, அருள் செய்!






      Dinamalar
      Follow us