PUBLISHED ON : ஜூலை 24, 2016

அ நிறம் | அளவு
கண்கூடாத காண்போம்!
ஒவ்வொரு
வளையத்தின் பலத்தில்
ஒட்டுமொத்த
சங்கிலியின் பலம்
உறுதிப்படுத்தப்படுகிறது!
தேனீக்கள்
சுமந்து செல்லும்
ஒவ்வொரு துளி
தேனின் தித்திப்பு
மொத்த தேனின்
தித்திப்பாகிறது!
ஒவ்வொரு மணியையும்
தேர்ந்தெடுத்து
பொருத்துவதால் தான்
ஒட்டுமொத்த ஆபரணமும்
ஒளிர்கிறது!
ஒவ்வொரு சொல்லும்
தேர்ந்தெடுத்து
எழுதப்படுமானால்
ஒட்டுமொத்த காவியமும்
தேர்ச்சிபெற்று விடுகிறது!
ஒவ்வொரு துகளிலும்
ஒட்டுமொத்தத்தின் பலம்
ஒளிந்திருக்கும் போது...
நிகழ் காலத்தின்
ஒவ்வொரு நொடிக்குள்ளும்
எதிர்காலம் அனைத்தும்
இருக்கத்தானே செய்யும்!
நிகழ்காலத்தின்
ஒவ்வொரு வினாடியிலும்
நம் உண்மையான
உழைப்பைக் கொடுத்து
நியாயம் செய்வோம்!
பிறகென்ன...
நம் ஒட்டுமொத்த எதிர்காலமும்
நிச்சயம் நமக்கு
நியாயம் செய்வதை
கண்கூடாகக் காண்போம்!
— என்.ரமேஷ்,
சென்னை
