PUBLISHED ON : ஜூலை 24, 2016

ஜூலை 28 ஆடி கிருத்திகை
நட்சத்திரங்களின் முதல் வரிசையில், அசுவினி நட்சத்திரம் இருந்தாலும், வேத காலத்தில், கார்த்திகை தான் முதல் நட்சத்திரமாக இருந்துள்ளது.
யாக குண்டத்தில் சில பொருட்களை இடுகின்றனர், மனிதர்கள். அவற்றை, தேவர்களுக்குரிய அவிர்பாகமாக (உணவு) கொண்டு சேர்ப்பது அக்னி. இதனால், நம் வாழ்வில் அக்னிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. நெருப்பில்லாமல் சமையல் மட்டுமல்ல, தெய்வ வழிபாடும் கூட நிறைவு பெறாது. தினமும், வீட்டில் விளக்கேற்றி, பத்தி, கற்பூரம், சாம்பிராணி ஏற்றி வைக்கிறோம். வாழ்வு முடிந்த பின், நம் உடல் கூட, நெருப்பிற்கே இரையாக்கப்படுகிறது. வாழ்வின் துவக்கம் முதல், முடிவு வரை, அனைத்துக்கும் தேவை நெருப்பு!
திருமணங்கள் நடைபெறுவது கூட, அக்னி சாட்சியாகத்தான். சீதாதேவி அக்னியில் குளித்தே, தன் கற்புத் திறனை நிரூபித்தாள். திரவுபதி, அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியதால் தான், ஐவருக்கு மனைவியாக முடிந்தது. அவள் ஒவ்வொரு ஆண்டும் அக்னியில் குளித்து, தன்னை பரிசுத்தப்படுத்திய பின்பே, ஒவ்வொரு கணவனையும் அடைவாள்.
அக்னி குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாத்திரத்தில் இருந்த பாயசத்தை குடித்த தசரதரின் மனைவியர், ராம - லட்சுமணர், பரத - சத்ருக்கனரைப்
பெற்றெடுத்தனர். இப்படி, புராணங்களில் அக்னிக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு.
சிவபெருமானின் நெற்றியில் உள்ள நெற்றிக் கண், அக்னியை வெளிப்படுத்தும். சூரபத்மனை அழிக்க இந்தக் கண்களில் இருந்து வெளிப்பட்ட அக்னி பொறிகளே, கார்த்திகேயன் எனும் கருணை தெய்வமாக வடிவெடுத்தது. இதனால் தான், கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அதில், தட்சிணாயன காலத்தின், முதல் மாதமான ஆடி கார்த்திகையும், உத்ராயண காலத்தின் முதல் மாதமான தை கார்த்திகையும், முருகனுக்கு முக்கியத்துவமாக உள்ளது.
தேவதைகளை வரிசைப்படி எண்ணும் போது, அக்னியில் இருந்து தான் துவங்க வேண்டும். நரசிம்மரின் மூல மந்திரத்தைச் சொல்லும் போது, 'ஸர்வதோ முகம்' என்ற வார்த்தை வரும். இதற்கு, எல்லாத் திசைகளிலும் முகம் உடையவர் என்பது பொருள். அக்னிக்கும் எல்லா திசைகளிலும் முகம் உண்டு.
அக்னி இரட்டை முகத்துடன் இருக்கும் சிலைகளை, சில கோவில்களில் பார்த்திருக்கலாம். அக்னியே கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதி தேவதையாக உள்ளார். அக்னியே முதல் தேவதை என்பதால், வேத வழக்கப்படி கார்த்திகையே முதல் நட்சத்திரமாக இருந்தது. கார்த்திகையில் துவங்கி, பரணியில் முடித்தனர்.
கார்த்திகையை, 'கிருத்திகை' என்றும் சொல்வதுண்டு. ஆடி கிருத்திகை நன்னாளில், முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து, அவரது நல்லருளைப் பெறுவோம்!
தி.செல்லப்பா
