PUBLISHED ON : டிச 25, 2016

நாங்கள் நாகரிகமானவர்கள்!
ஈட்டிகளை எல்லாம்
ஏவுகணைகளாய் மாற்றி விட்டோம்!
எறியும் கற்களை எல்லாம்
வெடிகுண்டுகளாய் ஆக்கி விட்டோம்!
அம்புபோட்டு
மனிதர்களை கொல்வதை விட
அணுகுண்டு போட்டு
மொத்தமாகக் கொல்லும்
மார்க்கம் தெரிந்து விட்டோம்!
நதிக்கரைகளில் படை கூட்டி
எதிரிகளை வீழ்த்தும் நிலை மாற்றி
நதி நீரில் விஷம் கலக்கும்
நயவஞ்சகம் கற்றோம்!
நேருக்கு நேர் நின்று
போர் செய்யும் நிலை மாறி
மறைந்திருந்து போர் செய்யும்
கொரில்லா முறையும் அறிந்தோம்!
நிராயுதபாணிகளை தாக்காத
நியாயமான நிலையை மாற்றி
சமாதானக் கொடி காட்டுவோரையும்
சாகடிக்கும் சாமர்த்தியம் கற்றோம்!
புறமுதுகு காட்டி ஓடுவோரை
புண்படுத்தாத நிலையை மாற்றி
முதுகுகளை காட்டி நிற்க வைத்து
முறையின்றி சுடும் முறையையும்
தெரிந்து கொண்டோம்!
வெளிப்படையாகவே போர் செய்யும்
விவேகத்தை மாற்றி
கண்ணி வெடி புதைக்கும்
கலையையும் கற்றோம்
ஆம்...
நாங்கள் நாகரிகமானவர்கள்!
— இளசை சுந்தரம்,
மதுரை.
