PUBLISHED ON : டிச 25, 2016

யாருக்கு, என்ன விபத்து ஏற்பட்டாலும், அதைப் பற்றி, நான் விலாவரியாக விசாரிப்பது உண்டு. அவர்களும், 'இந்தாள், சொல்லாமல் விட மாட்டார் போலிருக்கிறது...' என்கிற மனநிலைக்கு மாறி, நான் கேட்கிற நுணுக்கமான கேள்விகளுக்கெல்லாம், மனம் சலிக்காமல், பதில் சொல்வர்.
அதேபோல், நோயில் சிக்கி, பாயில் படுத்தவர்களும், நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்களும், என்னிடம் சிக்கினால், 'ஏண்டா நமக்கு நோய் வந்தது...' என்று, எண்ணும் அளவிற்கு என் கேள்விகள் இருக்கும்.
விபத்துகள், வியாதிகள் என்றில்லை; எதிராளி பேசும் எல்லா விஷயங்களும், நாம் பயணிக்கும் வாழ்க்கைப் பாதைகளில், எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு பலகைகளே!
நோயாளிகளையோ, விபத்தில் சிக்கி, சிகிச்சை பெறுவோரையோ பார்க்கச் செல்பவர்கள், பெயருக்கு நான்கு கேள்விகளை கேட்டு, சாத்துக்குடி பழத்தை கொடுத்து வந்தால், இரு தவறுகளை செய்கின்றனர் என்று பொருள்.
முதலாவது, பாதிப்பின் தன்மைகள் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பதால், 'இத்தகைய தவறுகளை, நாம் செய்யாதிருக்க வேண்டும்...' என்கிற பாடத்தை, இவர்களால் மனதில் பதித்து கொள்ள முடியாமல் போகிறது.
இரண்டாவது, 'நம் மீது, இவருக்கு அக்கறையில்லை; பெயருக்கு கேள்வி கேட்டு, வந்தேன் என்று பெயர் செய்து விட்டு போகவே வந்திருக்கிறார்...' என்கிற முடிவிற்கு வருகின்றனர், பாதிக்கப்பட்டோர்.
நம் அனுபவத்திலிருந்து, பாடங்களை பெறுவது புத்திசாலித்தனம் என்றால், பிறருடைய அனுபவங்களில் இருந்து, பாடம் படிப்பது, அதிபுத்திசாலித்தனம்.
நஷ்டப்படாமலேயே, அனுபவ பாடங்களை கற்பது, உதவித் தொகையில், படிக்கிற மாணவனின் அனுபவத்திற்கு சமம்.
எந்த ஒரு விஷயத்திலும், பிறர் பேசுவதை, காது கொடுத்து கேட்க வேண்டும். 'இவன் கதையை கேட்டு, எனக்கென்ன ஆகப் போகிறது...' என்று எண்ணுகிற மனோபாவத்தால், பிறர் வாய்களையும், நம் காதுகளையும், நாமே அடைத்து விடுகிற தவறுகள், நிகழ்ந்து விடுகின்றன.
ரயிலில், ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன். பிளாட்பாரத்தில் இரண்டு, 'போர்ட்டர்'கள் பேசி கொண்டு நிற்கின்றனர்...
'இந்த காலத்து பிள்ளைங்க, எங்க நம்ம பேச்சை கேக்குது...' முதலாமவர்.
'கேக்கும் கேக்கும்... முதல்ல நீ, பிள்ளைங்ககிட்டே தோழனா இரு; அப்புறம் அப்பனா நடந்துக்கோ...' என்கிறார் இரண்டாமவர்.
ஒரு அமெரிக்க நூலாசிரியர் எழுதிய, 'தி ஆர்ட் ஆப் பேரண்டிங்' (பெற்றோராக நடந்து கொள்ளும் கலை) என்கிற இக்கருத்து, நம், போர்ட்டருக்கு எப்படி தெரிந்தது என, வியந்து போனேன். ஒவ்வொரு மனிதனும், வாழ்ந்து அனுபவித்து, அவற்றின் அடிப்படையில், சில வாழ்க்கை தத்துவங்களை உதிர்க்கிறான். இவற்றை காதில் வாங்கி, உள்ளத்தில் பதித்தால், நஷ்டப்படாமலும், கஷ்டப்படாமலும், வாழ்க்கையை சேதாரம் இன்றியும், சுவையாகவும் கொண்டு செல்ல முடியும்.
'அறுத்து தள்ளிட்டான்; பேசிப் பேசியே கொல்றான்; செம ராவு ராவிட்டான்; இப்படியா, 'லெக்சர்' அடிக்கிறது...' என்றெல்லாம், சலிப்பு வாசகங்களை உதிர்த்து, மற்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் தவிர்க்கிறோம்.
என்னை பொறுத்தவரை, 'ரிசர்வ்ட் டைப்' அல்லது 'இன்ட்ராவேர்ட் கேரக்டர்ஸ்' எனப்படும், உள்ளுக்குள் சிந்திப்பவர்களோடு உரையாடுவது தான் ரொம்ப கஷ்டம்.
பல் பிடுங்குகிற மருத்துவர் போல், இவர்களிடம், சொல் பிடுங்குகிற மனிதர்களாய், நம்மை ஆக்கி விடும் போது, இவர்களை கண்டாலே, எரிச்சல் வருகிறது. 'ஆமா... இல்லை... ஹி ஹி...' என்று மிகக் குறுகிய வெளிப்பாடுகளால், நம்மை இம்சிக்கின்றனர். 'இவர்களது மனதில், என்ன ரேகைகள் ஓடுகின்றன...' என்று, பிடிபடுவதே இல்லை.
நேரமும், அவகாசமும் இருந்தால், பிறரை பேச விட்டு கேளுங்கள்; தூண்டுதல் கேள்விகளை, தூண்டிலாய் போட்டு, பதில்களை வரவழையுங்கள். அந்தந்த துறை மனிதர்களின், அறிவாற்றலை கறந்து விடுங்கள். 'பிளாட்டிங் பேப்பராய்' மாறி, அவர்களது அறிவை, ஒற்றி எடுங்கள். 'ஐயோ... அறுவை வருது...' என, தலைதெறிக்க ஓடாதீர்.
எதிராளி, சுவாரசியமற்ற விஷயங் களை பேசினால், அவர்களை திசை திருப்புங்கள்.
குடும்ப உறுப்பினர்களுக்கு, இன்னும் கூடுதல் சலுகை காட்டுங்கள். ஆனால், இப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே ஒருவர் கதையை மற்றொருவர் கேட்க தயாராக இல்லை.
சிறு வயதில், உணவுகளை பகிர்ந்து கொள்ள முன் வராதது போலவே, பெரியவர்களானதும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.
'சொல்ல விரும்புகின்றனரா...' என்று நாடி பிடித்து பாருங்கள். 'ஆம்...' என்றால், துணை கேள்வி போடுங்கள். பகிர்ந்து கொள்ளாத குறையால் தான், இன்று, பல குடும்ப உறவுகள், சீக்கு பிடித்து கிடக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களை, நன்கு பேச விட்டு, கேளுங்கள்; நேசமும், நல்லுறவும் வளரும்!
லேனா தமிழ்வாணன்
