PUBLISHED ON : டிச 25, 2016

அன்புள்ள அம்மாவிற்கு —
என் வயது, 27; என் கணவரின் வயது, 33. நான், 'பிரவுசிங்' சென்டரில் வேலை செய்கிறேன்; என் கணவர், 'டிவி' மெக்கானிக்காக வெளியூரில் பணிபுரிகிறார். எங்களுக்கு மூன்று வயதில், ஆண் குழந்தை உள்ளது. நான், என் கணவரை, உயிரை விட மேலாக நேசிக்கிறேன். ஆனால், அவர் என்னை கேட்காமல், வெளியூரில் கடை வைத்தார்; நானும், பரவாயில்லை என்று விட்டு விட்டேன்.
ஆனால், பலசமயங்களில், இரவு வீட்டிற்கு வருவதில்லை. கேட்டால், 'கடையில், இரவு வேலை செய்தேன்...' என்றோ, 'என் அம்மாவை, பார்க்க சென்றேன்...' என்றோ கூறுவார். நானும், அவர் சொல்வதை எல்லாம் நம்பினேன்; ஆனால், அவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அவருக்கு, அடிக்கடி ஒரு பெண் போன் செய்வாள். அவள் யார் என்று கேட்ட போது, தன் அண்ணனோட, நண்பரின் மனைவி என்றும், 'டிவி' பழுது பார்க்க அழைப்பதாகவும் பொய் கூறினார். அதன்பின், வீட்டில் இருக்கும் போது, போன் வந்தால், நான் இருப்பதாக சொல்லி விடுவார் அல்லது என்னை பேச சொல்வார்.
என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது, குழந்தையை பார்ப்பதற்காக ஒருநாள் என் வீட்டிற்கு வந்தாள். நானும், அப்பெண்ணுக்கு, மதிய சாப்பாடு செய்து கொடுத்தேன். பின், அவளை, பேருந்தில் அனுப்பி விட்டு வருவதாக கூறி சென்றவர், நள்ளிரவு தான் வீட்டிற்கு வந்தார். இதுபற்றி கேட்டதற்கு, 'நண்பரின் வீட்டில், வேலை செய்து விட்டு வருகிறேன்...' என்று கூறினார்.
ஒருநாள், என் வீட்டிற்கு வந்த முதியவர் ஒருவர், 'உன் கணவரை கண்டித்து வை; அவன், என் மருமகளுடன் சுத்துறான். என் மகன் வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் நிலையில், அவன் ஏன் என் வீட்டிற்கு வர வேண்டும்... என் மகன் அனுப்பிய பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வரச் சொன்னேன். இருவரும் பணத்தை எடுத்துக் கொண்டு, எங்கோ சென்று விட்டனர்...' என்று கூறினார். அதை கேட்டதும், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் கணவரும், நான்கு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. பின், வந்தவுடன், சண்டையிட்டேன்.
அதன்பின், ஒரு மாதம் கழித்து, வெளியூர் செல்வதாகவும், உடனே வந்து விடுவதாகவும் கூறி சென்ற என் கணவர், இரண்டு நாட்களாகியும் வரவில்லை. இந்நிலையில், தன் மருமகளை இரண்டு நாட்களாக காணவில்லை; உன் கணவனுடன் தான் சென்றுள்ளாள்...' என்று, அவளது மாமியார் போன் செய்து கூறினாள். உடனே, கடைக்கு சென்று, கடை உரிமையாளரை சந்தித்த போது, தினமும் ஒரு பெண் கடைக்கு வருவதாகவும், மாலை, 6:00 மணிக்கு என் கணவருடன் வண்டியில் கிளம்பி செல்வதாகவும் கூறினார்.
என் கணவர் வந்தவுடன் இதைப் பற்றி கேட்டேன். 'அப்படியெல்லாம் இல்ல...' என்று கூறியவர், அவளுக்கு போன் செய்து வர சொன்னார். அவள் வந்ததும், இதுபற்றி கேட்ட போது, அவள் திருப்பூர் சென்றதாகவும், சற்று முன் வந்ததாகவும் கூறினாள். நான், அவளிடம், 'என் கணவர் கடைக்கு ஏன் போறே... அவர் கூட எதுக்கு வண்டியில செல்றே...' என்று கேட்டேன். அதற்கு அப்பெண், 'கடையில் உன் பெயர் எழுதி ஒட்டி உள்ளதா...' என்று கேட்கிறாள்.
'இனி இப்படி செய்தால், உன் மீது போலீசில் புகார் கொடுப்பேன்...' என்று கூறினேன். அவளது மாமியாரிடம், 'உன் மருமகளை கண்டிச்சு வை; மீறி என் கணவர், உன் மருமகள் வீட்டிற்கு சென்றால், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்...' என்று கூறினேன்.
நான், என் கணவரிடம், 'இதுவரை, நீங்க செய்த தவறையெல்லாம் மன்னித்து, ஏற்றுக் கொள்கிறேன்; மறுபடியும் தவறு செய்தால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று கூறினேன். இப்போதும், என் கணவர், எனக்கு தெரியாமல் வெளியில் சென்று போன் பேசுகிறார்; ஆனால், யாருக்கு என்று தெரியவில்லை. அவர், யார் சொல்லியும் கேட்பதில்லை.
நான் எப்படி அவளிடமிருந்து, என் கணவரை மீட்பது?
என் வாழ்க்கைக்கு நீங்கள் தான், நல்வழி காட்ட வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கணவர், திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடுவதை, வழக்கமாக செய்பவர். வெளியூரில் கடை வைத்திருப்பது, தான் செய்யும் திருவிளையாடல்கள் உனக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தான்!
கணவன் வெளிநாடு சென்று விட்ட நிலையில் தனிமையை போக்க, கள்ளக்காதலில் ஈடுபடுகிறாள், உன் கணவனின் கள்ளக்காதலி. அவளது கணவன் நாடு திரும்பி விட்டால், மீண்டும், தன் கணவனிடம் குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவாள். அப்படி அந்த பெண் போனால், அவளுக்கு, 'டாட்டா' காண்பித்து, இன்னொரு பெண் கிடைக்க காத்திருப்பார் உன் கணவர். உன் கணவருக்கு நீயும் முக்கியம்; அவர் வேட்டையாடும் பெண்களும் முக்கியம்.
உன்னை விவாகரத்து செய்து, ஒருநாளும் இன்னொரு பெண்ணை மறுமணம் செய்ய மாட்டார். அவருக்கு நீ அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும். உன் அம்மா வீட்டிற்கு அருகிலேயே, ஏதாவது பிரவுசிங் சென்டரில் வேலை பார்த்து, அவர்களுடன் தங்கு. 'கள்ளத்தொடர்பை கத்திரித்து விட்டு வா; உன், 'டிவி' மெக்கானிக் கடையை இங்கு வை. இதற்கு சம்மதம் என்றால், நாம் குடும்பம் நடத்தலாம்; இல்லையென்றால், நம் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளலாம்...' என, திட்டவட்டமாக கூறு.
உன் கணவர், உன்னை இழந்து, அவர் தொடர்பு வைத்திருக்கும் பெண், அவளது கணவரை இழந்து, புதிய வாழ்க்கை வாழ தயாராய் இருக்கின்றனரா என வினவு. கள்ளக்காதலியின் கணவரின் தொடர்பு எண்ணை கண்டுபிடித்து, அவருடன் பேசி, அவரை உஷார் படுத்து. 'எனக்கு வயது, 27 தான் ஆகிறது; இளமை குறையவில்லை. நான் எந்த ஆணுடனாவது தொடர்பு வைத்துக் கொண்டால் சகிப்பாயா...' என கணவரை கேள்.
'கடளலவு நீர் இருந்தாலும், கையளவு தான் குடிக்க முடியும்; காமத்தை முறைமைபடுத்த தான், திருமணம். ஒருவனுக்கு ஒருத்தி தான் இயற்கையின் நியதி. திருமண பந்தம் மீறிய உறவுகள், தன் விரலை வெட்டி, தானே புசிக்கும் காட்டுமிராண்டித்தனம்...' என்றெல்லாம், மனநல ஆலோசனை கொடு.
'ஆன்மாவுக்கு பேரானந்தம் தரும் காதல் முக்கியமா... கேவலம் உடற்பசியை தீர்க்கும் கள்ளக்காதல் முக்கியமா...' என, கேள்.
கள்ளக்காதலை முறித்துக் கொள்ளாவிட்டால், உன் கணவருக்கு நீயும், உன் மகனும் கிடைக்கமாட்டீர்கள் என்பதை ஆணித்தரமாக கூறு. திருட்டுப் போன கணவர், உனக்கு நிச்சயம் கிடைப்பார்; வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
