PUBLISHED ON : ஜூலை 30, 2017

அ நிறம் | அளவு
விட்டில் பூச்சி மனிதர்கள்!
கூனி வளைந்த உடம்பு
சுருங்கிய வதனம்
தளர்ந்த நடை
புரியாத பேச்சு
நினைத்துப் பார்க்கிறேன்...
இளமையில் எத்தனை
கர்வம் கொண்டாயோ
உன் அழகை நினைத்து!
சிதிலமடைந்த கோவில்
புதர் மண்டிய வளாகம்
பூஜைகளற்ற மூலவர்
நினைத்துப் பார்க்கிறேன்...
எத்தனை மனிதர்களின்
ஆசை, அபிலாஷை
கோரிக்கைகளை
தாங்கிக் கொண்டிருந்ததோ!
கவலை தோய்ந்த முகம்
கள்ளம் நிறை மனம்
பணம், பதவி, மயக்கம்
நினைத்துப் பார்க்கிறேன்...
கள்ளமற்ற பிஞ்சு
வயது தோற்றத்தை!
நினைத்துப் பார்க்கிறேன்...
சென்றது திரும்புவதும்
திரும்பியது செல்வதுமான
உயிர் சுழற்சியில்
அவ்வப்போது வந்து செல்லும்
விட்டில் பூச்சி மனிதர்களும்
அவர்களின் குணங்களும்
மாறாமல் தொடரும் அதிசயத்தை!
ப.அங்கயற்கண்ணி, சென்னை.
