
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீழ்வதற்கல்ல!
நினைப்பது போல்
வாய்ப்பதில்லை வாழ்க்கை
வாய்ப்பதுவும் மனம்
தூய்ப்பது போல் இருப்பதில்லை!
முயற்சியில்
முட்டுக்கட்டைகள்
தட்டுப்படவே செய்யும்
காலம் நமக்கு
பசுவைத்தான் தந்திருக்கிறது
நெய் பெறும் முயற்சியை
நாம் தான் துவங்க வேண்டும்!
பால பருவத்தில்
எத்தனையோ முறை
வீழ்ந்து எழுகிறோம்
அப்போதெல்லாம்
அச்சமும் அவநம்பிக்கையும்
சோர்வும் விரக்தியும்
ஆட்கொண்டதில்லை நம்மை!
விவேகத்துடன்
அழுத்தமாக நாம்
வைக்கும் அடியில்
சறுக்கல்கள் நிகழ்வதில்லை!
துணிவுடன் நம்பிக்கையாய்
சவால்களை சந்திக்கையில்
தோல்விகள் கூடத் துவண்டுவிடும்!
வாழ்க்கையில் வீழ்வது
நாம் அடையப்போகும்
வெற்றியை
விளக்கிச் சொல்லவே!
விழுவோம் - இனி
எழுச்சியின் சூத்திரம் கற்க
எழுவோம் - இனி
விழும் காரணிகளை
வெற்றியின் படிகளாக்க!
— செல்லம் ரகு, திருப்பூர்.

