
புகழ் பெற்ற வழக்கறிஞரான, ஏ.ஆர்.முதலியார் என்று அழைக்கப்படும், ஆற்காடு ராமசாமி முதலியார், சென்னை மாநகர மேயராக இருந்தவர். அவர், 'கலைமகள்' இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது:
நாடு விடுதலை பெற்றவுடன், சுதேச சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைக்கும் பணியில், மிகத் திறமையாக செயல்பட்டார், சர்தார் வல்லபாய் பட்டேல். தன் சமஸ்தானத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்தார், ஐதராபாத் நிஜாம். அப்பகுதியைச் சேர்ந்த, 'ரஜாக்கர்'களின் வெறியாட்டம் அளவு மீறியது. இறுதியில், போலீஸ் நடவடிக்கை எடுத்து, ஐதராபாத் சமஸ்தானத்தை, பாரதத்துடன் இணைத்தார், பட்டேல்.
இதற்கு எதிராக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இந்த விஷயத்தை கொண்டு சென்றார் நிஜாம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவின் சார்பாக வாதாட, சர். என்.கோபாலசாமி அய்யங்காரை அனுப்பி வைக்க விரும்பினார், நேரு. காஷ்மீர் விவகாரத்தில், முன்பே அவர் வாதிட்டிருந்தார். அதில், பட்டேலுக்கு அவ்வளவாகத் திருப்தி இல்லை. அதனால், என்னை இந்தப் பணிக்கு அனுப்பி வைக்க விரும்பினார். உள்நாட்டு விவகாரம், பட்டேல் பொறுப்பிலும், அயல்நாட்டு இலாகா, நேருவின் பொறுப்பிலும் இருந்தன.
'ஐதராபாத் இணைப்பு விஷயம் அயல்நாட்டு விவகாரம் அல்ல; உள்நாட்டு விவகாரம். இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்ற வகையில் இந்தப் பிரச்னை குறித்து பேச, ராமசாமி முதலியாரை, ஐ.நா.,வுக்கு அனுப்ப விரும்புகிறேன்...' என்று, பிடிவாதமாகக் கூறிவிட்டார், பட்டேல்.
அச்சமயம், நான், மைசூர் திவானாக இருந்தேன். கவர்னர் ஜெனரலாக இருந்தார், ராஜாஜி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை அதிபருமான, கோயங்காவுக்கு என்னை, ஐ.நா.,வுக்கு அனுப்புவதில் விருப்பமில்லை. 'லிபரேட்டர்' பத்திரிகையில், என் மகன் கிருஷ்ணசாமி எழுதிய கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளை சுட்டிக் காட்டி, 'ராமசாமி முதலியாரின் மகனே, ஐதராபாத் நிஜாமின் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால், அவரை இப்பிரச்னை குறித்து வாதிட, ஐ.நா.,வுக்கு அனுப்பக் கூடாது...' என்று, நேருவுக்கு தந்தி கொடுத்தார்.
அந்தத் தந்தியை, நேருவே என்னிடம் காட்டினார். அன்று, கவர்னர் ஜெனரல் மாளிகையில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட, நேரு, பட்டேல் மற்றும் ராஜாஜி ஆகியோரிடையே இந்தப் பிரச்னை எழுந்தது.
ஐ.நா., சபைக்குச் செல்ல வேண்டும் என்பதில் எனக்கு பெரிய ஆசையில்லை என்பதை, நேருவிடம் தெரிவித்தேன். 'இந்தத் தந்தியை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்...' என்று ராஜாஜி கூறியதும், பாரிசில் நிகழவிருந்த ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலுக்கு, என்னை அனுப்ப இறுதியில் இணங்கி விட்டார், நேரு. எதிர்தரப்பில் வாதாடினார், ஐவார் ஜென்னிங்ஸ். முடிவில், ஐதராபாத் இணைப்பு நேர்மையானதே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஓவியர் கோபுலு, 'அமுதசுரபி' இதழில் ஒரு பேட்டியில் கூறியது: நம்மூரில், பெரிய கோவில்களின் உட்பிரகாரத் தூண்களில், 'யாளி' என்றொரு மிருகத்தின் உருவத்தை கல்லில் செதுக்கி வைத்திருப்பர். வாயைப் பிளந்தபடி ஒரு சிங்க முகம், அதற்கு தும்பிக்கை; முன் கால்களைத் தூக்கி, பாயும் நிலையில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இப்படி ஒரு மிருகம் இருந்ததா என்றால், இல்லை.
சிங்கத்தின் கற்பனை வடிவம் தான், யாளி; பல ஆண்டுகளுக்கு முன், மத்திய கிழக்கு ஐரோப்பாவில் மிகவும் கம்பீரமான, தத்ரூபமான சிங்கத்தை செதுக்கி வைத்திருந்திருக்கின்றனர். அந்தக் கலை, பின், எகிப்து நாட்டுக்குப் பரவியது. அந்த நாட்டில், அதற்கு மனித வடிவம் கொடுத்தனர். நாம் காமதேனுவுக்கு முகம் அமைத்திருக்கிறோமே... அதேபோல், சிங்க உடலையும், மனித முகத்தையும் சேர்த்து வடிவம் அமைத்தனர். அதன் பின், இந்தியாவுக்கு அது வந்த போது, சற்று மாறுதல் அடைந்து, யாளியாக உருவெடுத்தது.
நாம் கொஞ்சம் அலங்காரப் பிரியர்கள்; தென் இந்தியாவுக்கு வரும் போது, யானைத் தும்பிக்கையையும் சேர்த்துக் கொண்டோம். இங்கிருந்து, இந்தோனேஷியா, இந்தோ சீனாவுக்குப் போன போது, அவர்கள், அதற்கு இறக்கை ஒன்றை அமைத்துக் கொண்டனர். சிங்கத்திற்கேற்ற யாளி முகம், இறக்கை, இதையே, சீனாவில், 'டிராகன்' மாதிரி செய்து விட்டனர். யாளி முகம், பாம்பின் உருவம் மற்றும் கால்கள் அமைந்தது அது!
நடுத்தெரு நாராயணன்

