
கேட்டுவிட்டுப்போகட்டும்!
சிறு விதை
துளிர்த்ததற்குத்தானா
குதுாகலிக்கிறாய் என்று
கேட்டு விட்டுப் போகட்டும்...
இதுநாள் வரை
பாலைவனமாய் கிடந்ததை
அறியாதவர்கள்!
சிறு புன்னகையை
உருவாக்கத்தானா
பிரயத்தனப்படுகிறாய் என்று
கேட்டு விட்டுப் போகட்டும்...
இதுநாள் வரை
இறுகிக் கிடந்த உதடுகளை
அறியாதவர்கள்!
சிறு விளக்கின் சுடரை
ஏற்றி வைத்ததற்குத்தானா
ஆர்ப்பாட்டம் செய்கிறாய் என்று
கேட்டு விட்டுப் போகட்டும்...
இதுநாள் வரை
கண் மறைந்த இருளை
அறியாதவர்கள்!
எழுத்துக் கூட்டி
படிக்க வைத்ததற்குத்தானா
பரவசம் கொள்கிறாய் என்று
கேட்டு விட்டுப் போகட்டும்...
இதுநாள் வரை
எழுத்தறிவின்றி
எதையெதையோ
இழந்ததை அறியாதவர்கள்!
சிறு துணியை
உடுக்க வைத்ததற்குத்தானா
உவகை கொள்கிறாய் என்று
கேட்டு விட்டுப் போகட்டும்...
இதுநாள் வரை
நிர்வாணமாய் இருந்ததை
அறியாதவர்கள்!
எவரையும்
சிகரத்தில் ஏற்றி வைப்பது
சிறந்ததே...
அதைவிட சிறந்தது
படுகுழியில் விழுந்தவரை
கைகொடுத்து துாக்கி விடுவது!
— கீர்த்தி, கொளத்துார்

