PUBLISHED ON : நவ 26, 2017

மெர்சல் திரைப்படத்தில், ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்கி, வைத்தியம் பார்க்கும் டாக்டராக நடித்திருப்பார், நடிகர் விஜய். அதனால், அவரது கேரக்டர், 'ஐந்து ரூபாய் டாக்டர்' என்றே அழைக்கப்படும்.
இக்காலத்தில், உண்மையில் அப்படி ஒரு டாக்டர் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு, பதிலாக விளங்குகிறார், டாக்டர் ஜெயச்சந்திரன்.
வடசென்னை, பழைய வண்ணாரப் பேட்டை, வெங்கடாசலம் தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் வீட்டின் முன், கைக் குழந்தைகளுடன் தாய்மார்கள், தெருவில் காய்கறி, பழம் விற்கும் மூதாட்டிகள், குப்பை அள்ளுவோர், செருப்பு தைப்பவர் என, ஏழை எளிய மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அனைவரையும் தாண்டிச் சென்றால், வீட்டின் முன் அறையில், நோயாளிகளுக்கு நடுவே ஜன்னலோரத்தில், ஒரு சின்ன ஸ்டூலில் தன்னை குறுக்கி உட்கார்ந்து, 'என்ன குட்டி... எவ்வளவு நாளா காய்ச்சல்... கவலைப்படாதே... நான் இருக்கேன்ல, மருந்து, மாத்திரை தர்றேன்; சரியாயிடும்...' என்று அன்பும், அக்கறையுமாக கூறுகிறார், ஜெயச்சந்திரன். அவ்வார்த்தைகளிலேயே பாதி குணமானது போல, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சேயும், தாயும் மகிழ்கின்றனர்.
மருத்துவம் பார்த்ததற்கு பிரதிபலனாக, சுருக்கு பையிலிருந்து துழாவி எடுத்து, ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டுகிறார், அந்த தாய்.
'வீட்டுக்கு எப்படிம்மா போவே... கைக் குழந்தைய வச்சுகிட்டு நடக்காத தாயி...' என்று கூறி, அப்பெண்மணி கொடுத்த ஐந்து ரூபாயுடன், தன் பையிலிருந்து எடுத்த, 30 ரூபாயையும் சேர்த்து, 35 ரூபாயாக திருப்பி கொடுக்கிறார்.
பின், 'கொஞ்சம் இரும்மா...' என்று சொல்லி, வீட்டிற்குள் போய் இரண்டு டானிக் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்து, 'இந்த சத்து டானிக்கை, குழந்தைக்கு கொடு; தெம்பா இருப்பான்...' என்று சொல்லி இலவசமாக டானிக் பாட்டிலையும் கொடுக்கிறார்.
இதுதான் டாக்டர் ஜெயச்சந்திரன்!
தற்போது, 68 வயதை நெருங்கும் ஜெயச்சந்திரன், இன்றும் பலரால், 'இரண்டு ரூபாய் டாக்டர்' என்றே அடையாளப்படுத்தப்படுகிறார். காரணம், நீண்டகாலமாக, மக்களிடம் அவர் வாங்கிய மருத்துவ கட்டணம், இரண்டு ரூபாய்!
ஏழை எளியவர்களிடம் இவ்வளவு இரக்கத்துடன் அவர் நடந்து கொள்ளக் காரணம், ஏழ்மை நிலையை அனுபவித்தவர் என்பதாலேயே!
சென்னை - புதுச்சேரி சாலையில் கல்பாக்கம் பக்கம் உள்ள கொடைப்பட்டினம் கிராமம் தான் இவரது சொந்த ஊர். படிப்பு வாசனையே இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்தவர். சின்ன வைத்தியம் பார்த்தால் கூட பிழைத்துக் கொள்ளக்கூடிய நிலையில், அந்த வாய்ப்பு கிடைக்காமல் பலர், இறந்ததை பார்த்து வருந்தியவரின் அடிமனதில் விழுந்ததுதான் டாக்டர் கனவு.
கிராமத்தில் படிக்க வசதி இல்லாததால், சென்னை வந்து அத்தை - மாமா வீட்டில் தங்கியிருந்து படித்தார். கல்லுாரியில் படிக்கும்போது தான் இவருக்கு செருப்பே அறிமுகமானது. நல்ல உணவு, உடை என்பதெல்லாம் பிறகு தான்.
மருத்துவக் கல்லுாரியில் படிக்கும்போது கூட, முதல் இரண்டு ஆண்டுகள் நடந்து தான் போயிருக்கிறார். பிறகுதான் நண்பர் ஒருவர் தயவில் சைக்கிள் சாத்தியப்பட்டுள்ளது.
இப்படியாக மருத்துவரான இவர், படிப்பை முடித்ததும் எடுத்துக்கொண்ட முதல் உறுதி, 'யாரிடமும் வேலை பார்க்கக் கூடாது; எளிய மக்களின் இருப்பிடத்திற்கே சென்று இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்...' என்பது தான்.
இதற்காகவே, ஏழை எளிய மக்கள் நிறைந்த வடசென்னைக்கு சென்றார். அங்கு கிளினிக் வைக்க கையில் காசில்லை. தன்னுடன் படித்த நண்பரின் தந்தை, தன் மகனுக்கும் இவருக்கும் சேர்த்தே கிளினிக் வைத்துக் கொடுத்து, கூடவே, 'இலவசமாக வைத்தியம் பார்த்தால் மரியாதை இருக்காது; இரண்டு ரூபாயாவது வாங்குங்க...' என்று கூற, அதன்படி, இரண்டு ரூபாய் வாங்கி, வைத்தியம் பார்க்கத் துவங்கினார். கொஞ்ச நாளில் இவரிடமே கிளினிக்கை ஒப்படைத்து, வெளிநாடு போய் விட்டார், நண்பர். இரண்டு ரூபாய் வைத்தியர் என்ற பெயரில் பிரபலமானார், ஜெயசந்திரன்.
கடந்த சில ஆண்டுகளாகத்தான், ஐந்து ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி, ஐந்து ரூபாய் கொடுத்து வருகின்றனர், சிகிச்சைக்கு வருவோர். மருந்து கம்பெனி பிரதிநிதிகள் தரும் மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, இவரே மருந்து கம்பெனியிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுக்கிறார்.
ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது, எலும்பு முறிவு மற்றும் இதய நோய் போன்ற பெரிய பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவரிடம் பேசி, குணமாகும் வரை பார்த்துக் கொள்கிறார்.
இவரது கைராசி காரணமாக, ஏழை - எளியவர்கள் மட்டுமின்றி, வசதி படைத்த பலரும் இவரிடம் சிகிச்சை பெறுகின்றனர். அப்படி சிகிச்சை பெற்று குணமாகும் பலர், 'எங்களால் நிறைய பணம் கொடுக்க முடியும்; வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று கூறும் போது, 'நீங்கள் கொடுக்க விரும்பும் பணத்திற்கு, மருந்து மாத்திரைகளாக வாங்கிக் கொடுத்து விடுங்கள்; அது, ஏழை நோயாளிகளுக்கு பயன்படும்...' என்கிறார். அப்படி அவர்கள் வாங்கிக் கொடுத்த மருந்து, மாத்திரைகள் வீடு முழுவதும் நிறைந்து இருக்கிறது.
இப்படியே கிட்டத்தட்ட, 45 ஆண்டுகளை கடந்து விட்டார். ஆனாலும், ஆரம்பத்தில் இருந்த அதே அன்பு, அக்கறை, சுறுசுறுப்பு கொஞ்சமும் குறையவில்லை.
தாத்தாவிற்கு வைத்தியம் பார்த்து, அப்பாவிற்கு பார்த்து, இப்போது பேத்திக்கு என்று மூன்று தலைமுறையாக இவரிடம் சிகிச்சை பெறுபவர்கள் நிறைய பேர்.
'மருத்துவம் பார்த்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. மருத்துவ கல்லுாரி டீனாக இருந்தவரும், தற்போது மகளிர் மகப்பேறு மருத்துவர் சங்க தலைவராக இருப்பவருமான என் மனைவி, சி.வேணி, 'நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் உங்கள் விருப்பப்படி எளியவர்களுக்காக சேவை செய்யுங்கள்...' என்று சொல்லி விட்டார்.
'உலகத்திலேயே நான் அதிகம் நேசிப்பது, என் மருத்துவ தொழிலை தான். ஒரு உயிரை காப்பாற்றும் போது, அதில் கிடைக்கும் ஆனந்தமும், மனத் திருப்தியும் கோடி கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காது...' என்று சொல்லும்போதே அவரது கண்களும், முகமும் மலர்கிறது.
காலை, 6:00 மணிக்கு, வந்து எழுப்பி விடுவர், அவசர நோயாளிகள். லுங்கி, பனியனுடன் சிகிச்சையை துவங்கும் இவர், பின் சாப்பாட்டை கூட மறந்து, வருவோருக்கு சிகிச்சை அளித்தவாறு இருப்பார் என்று பெருமையாக குறிப்பிடுகின்றனர், அவரிடம் சிகிச்சை பெறுவோர்.
இதுபோக, இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார். ரத்த தானம் செய்ய ஒரு பெரிய தொண்டர் படையே வைத்துள்ளார்.
தமிழ் ஆர்வலர், மகப்பேறும், மாறாத இளமையும், குழந்தை நலம் உங்கள் கையில், தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம் மற்றும் உடல் பருமன் தீமைகளும், தீர்வுகளும் போன்ற நுால்களை தமிழில் எழுதியுள்ளார்.
தன்னை நம்பி வந்த நோயாளியை எப்படி தேற்றுவது என்பதற்கு பதிலாக, தன்னிடம் வந்துவிட்ட நோயாளியிடம் இருந்து எவ்வளவு தேற்றுவது எனும் அளவிற்கு மலினப்பட்டுவிட்ட மருத்துவர்கள் நிறைந்த உலகில், மக்களுக்கு தொண்டு செய்யக் கிடைத்த மகத்தான பணியே மருத்துவம் என்று கருதி செயல்படும் மாமனிதரான டாக்டர் ஜெயச்சந்திரன், சந்தேகமில்லாமல் மக்கள் மருத்துவர் என்பதில் சந்தேகமில்லை.
அவரது தொடர்பு எண்: 94441 17247, 91767 85795. (இரண்டு மொபைல் எண்கள் இருந்தும், போன் செய்தவுடன் எடுக்கவில்லை என்றால், மக்களோடும் - மருத்துவத்தோடும் ஐக்கியமாகி இருக்கிறார் என்று அர்த்தம்.)
- எல்.முருகராஜ்

