sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உயர்ந்த உள்ளம்

/

உயர்ந்த உள்ளம்

உயர்ந்த உள்ளம்

உயர்ந்த உள்ளம்


PUBLISHED ON : நவ 26, 2017

Google News

PUBLISHED ON : நவ 26, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்யாணம் செய்து கொடுத்திருந்த மகள் வாணியை, ஆடிக்கு அழைத்து வந்திருந்தாள், ஜெயா.

மகளை, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததில், ஜெயாவுக்கு பெரிய நிம்மதி.

சம்பந்தி, திருச்சியில் இருக்க, இளைய மகன், பெங்களூரில், சாப்ட்வேர் இன்ஜினியராகவும், பெரியவன், சென்னையில், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்ய, நல்ல வசதியான குடும்பம்.

அந்த வீட்டில், தன் மகள் வாணியை, இரண்டாவது மருமகளாக, மணமுடித்துக் கொடுத்திருந்தாள் ஜெயா.

''வாணி... உன் மாமியார் நல்ல குணம்; 'ஆடிக்கு அழைக்கணும்; திருச்சிக்கு வந்து சீர் வைக்கிறேன்'னு சொன்னதுக்கு, 'தேவையில்லை சம்பந்தி... எதுக்கு அலையுறீங்க. நீங்க, பெங்களூரு போய், வாணிய கூட்டிட்டு வாங்க; அந்த சம்பிரதாயமெல்லாம், வேணாம்'ன்னு சொல்லிட்டாங்க,'' என்றாள், ஜெயா.

''ஆமாம்மா... அத்தை என்கிட்ட ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க. அவரும், 'வாணி... ஆடி மாசம் முழுக்க, அம்மா வீட்டில் இருந்துடாதே... அத்தனை நாள், உன்னை பிரிஞ்சிருக்க முடியாது; பத்து நாள்ல வந்துடு'ன்னு சொன்னாரு,'' என்று மகள் சொன்னதும், ஜெயாவுக்கு மகிழ்ச்சியில் மனம் பூரித்தது. பெண்ணை பெற்றவர்களுக்கு, இதைவிட வேறென்ன வேண்டும்!

''அம்மா... உன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு... கத்திரிக்காய் காரக் குழம்பும், உருளைக்கிழங்கு பொடிமாசும் செய்யும்மா,'' என்றாள், வாணி.

''சரிம்மா... தோட்டத்தில் நீ வச்ச ரோஜா செடி பூத்திருக்கு; போய் பாரு.''

வாணி பின்பக்கம் செல்ல, கணவனிடம், ''ரொம்ப அன்பான குடும்பங்க... பெரிய மருமகள் சுபத்ராவும் நல்ல குணம்; கொழுந்தனை விருந்துக்கு அழைச்சு, வாணிக்கு பட்டுப் புடவையும், ஐந்து சவரன்ல செயினும் வாங்கி கொடுத்திருக்கா... என்கிட்டேயும் பிரியமா போனில் பேசறா. இரண்டு மருமகள்களும், இதே ஒற்றுமையோடு, கடைசி வரை இருக்கணும்,'' என்று சொல்லி, திருப்திப்பட்டாள், ஜெயா.

''வாணி... சென்னைக்கு போயிருந்தியே... உன் ஓர்ப்படி சுபத்ரா என்கிட்ட பேசினாம்மா. உன்னைப் பத்தி அவ புகழ்ந்தா. நீ கட்டிட்டு போன, 'எம்பிராய்டரி' புடவை, நீ தான், 'ஒர்க்' செய்ததுன்னு சொன்னப்ப, அவளால் நம்ப முடியல. 'ரொம்ப தத்ரூபமா, சின்னச் சின்னப் பூக்கள் போட்டு, ரொம்ப அழகா இருந்துச்சும்மா. வாணிகிட்ட ஒரு புடவை வாங்கி தந்து, எனக்கும், அதுமாதிரி போட்டு தரச் சொல்லணும்'ன்னு சொன்னா.''

''சரி விடும்மா... வா, கோவிலுக்கு போயிட்டு வருவோம்.''

சுபத்ராவை பத்தி பேச்செடுத்தாலே, மகள் ஏன் காதில் வாங்காமல் தவிர்க்கிறாள் என்று, ஜெயாவுக்கு புரியவில்லை.

'குடும்பத்தில் வாழ வந்த இரண்டு மருமகள்களும் ஒற்றுமையாக இருந்தால் தானே நல்லது. அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டால், நாளை அண்ணன், தம்பி உறவு பாதிக்குமே... நல்ல குடும்பத்தில், வாணியை கல்யாணம் செய்து கொடுத்தோம் என்று பெருமைப்படும் போது இப்படி நடந்து கொள்கிறாளே...' என்று, கவலைப்பட்டாள் ஜெயா.

போன் மணியடிக்க, எடுத்த ஜெயா, ''யாரு... சுபத்ராவா, நல்லா இருக்கியாம்மா?'' என்றாள்.

''நல்லா இருக்கேன்மா... உங்க மாப்பிள்ளை பாவம்மா... வாணி இல்லாமல் போரடிக்குதாம்; சீக்கிரம் கொண்டு போய் விடுங்க; என் கொழுந்தனுக்காக சிபாரிசு செய்றேன்,'' என்றதும், சிரித்தபடி, ''அடுத்த வாரம் கூட்டிட்டு போறேம்மா,'' என்றாள், ஜெயா.

''சரிம்மா... வாணிய கூப்பிடுங்க; அவகிட்டே பேசணும்ன்னு தான் கூப்பிட்டேன்.''

''இதோ ஒரு நிமிஷம்; உள்ளே இருக்கா... கூப்பிடுறேன்,'' என் கூறி, போனை சாய்த்து வைத்தவள், வாணியை தேடிப் போனாள்.

''வாணி... லேண்ட் லைனில், சுபத்ரா இருக்கா.''

''நான் வரல... ஏதாவது சொல்லி, 'கட்' செய்துடு,'' என்றதும், திரும்பி வந்து போனை எடுத்து, ''சுபத்ரா... வாணி குளிச்சுட்டு இருக்கா,'' என்றாள்.

''பரவாயில்லம்மா... எனக்கு ஆபீசுக்கு லேட்டாயிடுச்சு; இன்னொரு நாள் கூப்பிடறேன்.''

கோவிலில், சாமி கும்பிட்டு, மண்டபத்தில் உட்கார்ந்தனர், வாணியும், ஜெயாவும்!

''வாணி... உனக்கு நல்ல இடமா அமைஞ்சு, உன் கணவரோடு, நிறைவா வாழறது எனக்கும், அப்பாவுக்கும் திருப்தியா இருக்கு; நீயும், சுபத்ராவை போல, நல்ல மருமகள்ன்னு பேர் எடுக்கணும்.''

''அம்மா... உனக்கு, சுபத்ராவை பத்திப் பேசாமல் இருக்க முடியாதா... எனக்கு அவங்கள பத்தி பேசவே பிடிக்கல. உன் மாப்பிள்ளையும் அப்படித் தான்... 'எங்க அண்ணி ரொம்ப புத்திசாலி; எந்த முடிவு எடுத்தாலும் சரியா இருக்கும்'ன்னு, எப்பப் பாத்தாலும், அண்ணி புராணம் பாடுறாரு; நீயும் அதைப் போல ஆரம்பிச்சுட்டே...'' என்றாள், எரிச்சலுடன்!

''ஏன்ம்மா, உனக்கு சுபத்ரா மீது அவ்வளவு வெறுப்பு... உங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தாத்தானே நல்லது.''

''அம்மா... உனக்கு சொன்னா புரியாது; அவங்க சொந்தமா வீடு, வாசல்ன்னு செட்டில் ஆயிட்டாங்க; பிரெஞ்சு, ஜெர்மன்னு எல்லா மொழியிலும் எக்ஸ்பர்ட்; பிசினசில், அவங்க கணவருக்கு, வலது கரமா இருக்காங்க; சென்னை டிராபிக்கில், அனாயசமாக கார் ஓட்டுறாங்க; ஆபீசில், அவங்களுக்கு அவ்வளவு மரியாதை; அந்த அளவு எனக்கு தகுதிகள் கிடையாது. அவங்கள பத்தி பேசும் போது, மனசுக்குள் தாழ்வு மனப்பான்மை வருது... எல்லா விதத்திலும், என்னோடு உயர்வாக இருக்கிற அவங்கள பத்தி பேசி, என் நிம்மதிய கெடுத்துக்க விரும்பல; அதான் ஒதுங்கி போறேன். இது தப்பாம்மா...''

மனதில் உள்ளதை வாணி கொட்ட, அவளை பார்த்து, மென்மையாக புன்னகைத்த ஜெயா, ''தப்பு வாணி... நீ, சுபத்ராவ தப்பான கண்ணோட்டத்தில் பாக்கிறே... சுபத்ராவுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு; நீயும் அஞ்சு வருஷமானால் வீடு, வாசல்ன்னு செட்டில் ஆயிடுவே.

''உன்னிடம் இல்லாத திறமையும், புத்திசாலித்தனமும் சுபத்ராகிட்டே இருக்குன்னு நீயா நினைக்கிற... அவ அளவுக்கு உன்னால் இருக்க முடியலங்கிற தாழ்வு மனப்பான்மை தான், உன்னை ஒதுங்கிப் போக வைக்குது; அது தப்பு வாணி. உனக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கு. நீ அழகா பெயின்ட்டிங் செய்யிற; 'டிராயிங்' போட்டியில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கே; உன் சமையல் பிரமாதமா இருக்குன்னு, உன் மாமியார் புகழ்றாங்க; உன்னுடைய, 'எம்பிராய்டரி ஒர்க்' பாக்கவே, ரொம்ப பிரமிப்பா இருக்குன்னு சுபத்ரா புகழ்றா.

''மயிலை போல நாம் இல்லயேன்னு குயில் ஏங்கக் கூடாது; மயிலுக்கு ஆடத் தெரிந்தால், குயிலுக்கு பாடத் தெரியும். இல்லாதத நினைச்சு ஏங்குறத விட்டுட்டு, நம்பகிட்ட இருப்பதை நினைச்சு, சந்தோஷப்படணும். அடுத்தவங்களோடு நம்மை ஒப்பிட்டு, அமைதி இழக்காமல், நம் இயல்புகளோடு வாழப் பழகணும். சுபத்ராவைப் போல, நீயும் திறமைசாலி தான்.

''புரிஞ்சுக்க வாணி... தேவையில்லாத கோபதாபங்கள், உறவுகளை விலக வச்சுடும்; என் மக, புகுந்த வீட்டில் உண்மையான அன்பு, பாசத்தோடு, ஒத்துமையாக வாழணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.

ஜெயாவின் பேச்சு, வாணியின் மனதில் தெளிவை ஏற்படுத்த, ''அம்மா... சுபத்ரா அக்காவுக்கு ஒரு புடவை வாங்கி, என் கையால, 'எம்பிராய்டரி' செய்து தரணும்...'' மனம் தெளிந்து பேசும் மகளை, ஆதரவாக, அணைத்துக் கொண்டாள், ஜெயா.

- ராஜ்பாலா






      Dinamalar
      Follow us