PUBLISHED ON : ஜன 28, 2018

அ நிறம் | அளவு
காலம்...
குளிர்பான பாட்டில் மூடியை
பற்களால் திறந்து
ஆச்சரியப்பட வைத்தது
ஒரு காலம்...
பத்து பேர் சேர்ந்து அமுக்கினாலும்
திமிறி எழுந்து, கபடி விளையாட்டில்
எல்லையைத் தொட்டது
ஒரு காலம்...
மாடிப் படிக்கட்டுகளில்
இரண்டு இரண்டு படிகளாக
ஏறி இறங்கி, தாவிக் குதித்தது
ஒரு காலம்...
மார்பெல்லாம் கிழித்தாலும்
பனை மரம் ஏறி அந்தரத்தில்
தொங்கி, நுங்கு பறித்தது
ஒரு காலம்...
டிசம்பர் 31 இரவில்
பிரதான சாலையில், 100 கி.மீ.,
வேகத்தில் பைக் ஓட்டியது
ஒரு காலம்...
ஓடும் பஸ்சிலும், ரயிலிலும்
ஏறி இறங்கி வேடிக்கை
காட்டி விளையாடியது
ஒரு காலம்...
போட்டி போட்டு
கணக்கில்லாமல் தண்டால்
பஸ்கி எடுத்தது
ஒரு காலம்...
இப்போது,
நடை வண்டி ஓட்டும்
பேரனிடம் மெதுவாக நட என்று
அறிவுரை சொல்வது
ஒரு காலம்!
- சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.
