PUBLISHED ON : பிப் 11, 2018

அதிசய அரசியல்!
ஆச்சரியமாய் இருக்கிறது
இந்த அதிசய அரசியல்!
விடுதலை நாளை விட்டுவிட்டு
அடிமையான தினத்தையல்லவா
ஆராதிக்கின்றனர்!
விழுந்ததைக் கொண்டாட
விழா எடுப்பதும்...
அதை விழுந்து விழுந்து
கொண்டாடுவதும்
இங்கு தான் நடக்கிறது!
கட்சித் தாவல் அங்கீகரிப்புக்கு
சட்டமே இருக்கிறது
அதனால்
இது அதிசய அரசியல்!
ஆள் கடத்தல் உண்டு
ஒரு நபர்
கூட்டத்தை கடத்துவதல்ல...
கூட்டமாய்
ஒரு நபரை கடத்துவதால்
இது அதிசய அரசியல்!
கொள்கைகள்
ஒத்து வராததால் அல்ல...
கொள்கைகள் ஒத்து வருவதால்
நிகழும் கட்சித் தாவல்
ஆள் கடத்தல்...
அதனால்
இது அதிசய அரசியல்!
பணத்தாசைக்கு
விலை போகாத விந்தை
இதில் இருப்பதால்
இது அதிசய அரசியல்!
இங்கே
அமைக்கப்படும் ஆட்சி
ஐந்து ஆண்டுகளில்
காலாவதியாகி விடாது...
காலா காலத்திற்கும் தொடரும்!
அதனால்
இது அதிசய அரசியல்!
இங்கே
தேர்தல் முடிவுகள்
தெரிவதற்கு முன்பே
ஆனந்தமாய் கொண்டாடப்படுகிறது
வெற்றியை கொடுக்கப் போகும்
ஒரு தினம்...
அதுதான், 'காதலர் தினம்!'
பாலமுருகன், தென்காசி.
