PUBLISHED ON : பிப் 11, 2018

தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு எங்களை அழைத்துச் செல்லும், மும்பை நிறுவனம் ஒன்றின் பயணத்திட்டத்தின் படி, சென்னை - மும்பை; மும்பை - கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி; நைரோபி - தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் விமான பயணத்தை களைப்பின்றி ரசித்தேன்.
'கென்யா ஏர்லைன்ஸ்' விமானம் மூலம், ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்தை அடைந்த போது, மாலை, மணி, 4:30!
நான் நினைத்ததை விட பல மடங்கு செழிப்பாகவும், அழகாகவும், நேர்த்தியான சாலைகளுடன், பிரமாண்டமாக இருந்தது, ஜோஹன்னஸ்பர்க் நகரம்.
தென் ஆப்ரிக்கா என்றால், ஏராளமான கறுப்பு இனத்தவர் சுற்றித் திரிவர்; அடி தடி, சண்டை தகராறு அதிகம் நடக்கும். திருட்டு, கொள்ளைக்கு பஞ்சமிருக்காது என, என் மனதில் ஓடிய எண்ணங்கள் அனைத்தும் பொய்த்து போனது.
அருமையான நகரங்கள், அதிகமாக தென்படும் வெள்ளை இனத்தவர்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில், நடுத்தர பணியில், கறுப்பினத்தவர்களும், உயர் பதவிகளில், வெள்ளை இனத்தவர்களும் உள்ளனர். கூலி வேலைகளில் வெள்ளை இனத்தவரை பார்க்க முடியவில்லை. அதில், பிற ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த கருப்பினத்தவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பொது போக்குவரத்து வசதி அதிகம் இல்லை. சாலைகளில், பி.எம்.டபிள்யூ., போன்ற சொகுசு கார்களை தான் அதிகம் பார்க்க முடிந்தது. பைக்கை பார்க்கவே முடியவில்லை.
ஜோஹன்னஸ்பர்க்கின் பிரபலமான நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றான, 'மாண்டியோர்' ஓட்டலில், இரவு தங்கினோம். 'மிகவும் ஆடம்பரமான ஓட்டல். உலக நாடுகளின் தலைவர்கள், ஜோஹன்னஸ்பர்க் வந்தால், இங்கு தான் தங்குவர்...' என, எங்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற கார் டிரைவர் கிசுகிசுத்தார்.
சாலை விதிகளை அந்நகர வாகன ஓட்டிகள் மதித்து நடக்கின்றனர். டிராபிக் சிக்னலை மதித்து, வாகனங்களை இயக்குவது, ஒருவரை ஒருவர் முந்தி செல்லாமல், இஷ்டத்திற்கு வாகனங்களை, 'பார்க்கிங்' செய்யாமல் கண்ணியமாக நடந்து கொண்டது சந்தோஷமாக இருந்தது.
அதிகாலை, 3:00 மணிக்கு, பிளானஸ்பெர்க் என்ற இடத்திற்கு கிளம்பினோம். சாலையில் வாகனங்களே இல்லை. அப்போதும், சிக்னல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆளே இல்லாத சாலையில் சிகப்பு விளக்கு ஒளிர்ந்ததும், காரை நிறுத்தி, பச்சை ஒளிர்ந்த பின், டிரைவர் காரை இயக்கியதையும் பார்த்து, ஆச்சரியப்பட்டேன்.
அது போல, சாலைகளிலும், புறநகர் பகுதிகளிலும், பிளாஸ்டிக் பை, குப்பை போன்றவற்றை காண முடியவில்லை. பல, 100 கி.மீ.,க்கு பரந்து, விரிந்திருக்கும் சாலை யோரங்களில், நம்ம ஊர்களில் காணப்படுவது போல, 'பிளாட்டுகள் விற்பனைக்கு' போர்டுகளையும் காண முடியவில்லை.
சாலைகளில் இருந்து பல, கி.மீ., துாரத்துக்கு கம்பி வேலி அமைத்து, நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. கம்பி வலைக்குள், பெரிய மலைகள், நீரோடைகள், இயற்கை வளங்கள் மற்றும் வன விலங்குகள் இருந்தன.
ஜோஹன்னஸ்பர்க் நகரிலும், அதன் சுற்றுப்புற தொலை துார சாலைகளும், நேர்த்தியாக பராமரிக்கப்பட்டுள்ளன. நம் ஊரைப் போல அங்கும், லெப்ட் ஹேண்ட் டிரைவிங் தான். சாலையின் இடது ஓரம், 20 மீட்டருக்கு, ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளன. அதில், எத்தனை, கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும் என, குறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வளைவுகள், பாலங்கள், மலை இறக்கங்கள், வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில், 40, 60 என, பலகைகளில் குறிப்பிட்டு, கேமரா படம் வரையப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள வேகத்தை தாண்டும் வாகனங்கள், மறைவாக வைக்கப்பட்டுள்ள கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில், வாகனத்தின் உரிமையாளருக்கு, அபராத, 'நோட்டீஸ்' அல்லது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்ற, நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
இதனால், சாலைகளில் வாகனங்களின் முட்டல், மோதல், விபத்து போன்றவற்றை காண முடியவில்லை.
அதே போல், நகர்புறங்களுக்கு வெளிப்புறத்தில், பரந்து, விரிந்த திராட்சை தோட்டங்கள், அதன் நடுவே ஓட்டல்கள், பங்களாக்கள் இருப்பதை காண முடிந்தது.
அவற்றின் நுழைவுப்பகுதி துவங்கி, காம்பவுண்ட் சுவர் ஓரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் தங்கியிருந்த மாண்டியோர் ஓட்டலில் இருந்து, இரண்டு மணி நேர கார் பயணத்தில், ஸ்கீர்பூர்ட் என்ற இடத்தை அடைந்து, முதல் சாகசத்தை சந்தித்தோம்.
'கேப்டன் பில் ஹாரோப்ஸ் ஒரிஜினல் பலுான் சபாரி' என்ற தனியார் நிறுவனம், பல ஆண்டுகளாக நடத்தி வரும், பலுான் சபாரியில் பங்கேற்க சென்றோம்.
இதற்காக, அந்த இடத்தை, அதிகாலை, 5:00 மணிக்கு அடைந்தோம். பிரமாண்டமான பலுான்களில், சூடான காற்றை நிரப்பி, பலுானை விரிவடைய செய்தபடி இருந்தனர், அந்நிறுவனத்தின் ஊழியர்கள்.
ஒரே நேரத்தில், நான்கைந்து பலுான்கள் வானில் பறக்க துவங்கின. பலுானின் கீழே தொங்க விடப்பட்டிருந்த மூங்கில் கூடையில், காஸ் சிலிண்டர்கள் உள்ளன. அதில் இணைக்கப்பட்டுள்ள பர்னர் போன்ற அமைப்பில் தீயை எரியச் செய்கின்றனர். தீயிலிருந்து வெளியாகும் சூடான வாயுவால், பலுான் பறக்கிறது. அதன் திசையை மாற்ற, நான்கைந்து கயிறுகள், பலுானின் ஓரங்களில் இணைக்கப்பட்டுள்ளன. கயிற்றை இழுப்பது, காற்றை நிரப்புவது, வெளியேற்றுவது போன்ற செயல்களின் மூலம், பலுான் உயரே செல்கிறது; கீழே இறங்குகிறது. இயக்கத்திற்கு மூல காரணம், சூடான காற்று!
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சாகசத்தை, தொழிலாக நடத்தி வருகிறார், 75 வயதான, பில் ஹாரோப். பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட இவர், நான்கு மலைகளுக்கு இடையே உள்ள, பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அந்த பகுதியில், பலுான் சபாரி நடத்தி வருகிறார்.
பலுான் வானில் பறக்கும் போது, கீழே இருந்தபடி, அதன் ஓட்டத்தை, பலுான் நிறுவனத்தின் குழு கண்காணிக்கிறது. பலுான் இறங்கும் இடத்தில், ஒரு வேனை நிறுத்தி, அதில் பக்குவமாக பலுானை இறக்குகின்றனர்.
தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் அனைத்து சாகசங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற உறுதியோடு வந்ததால், முதல் ஆளாக, மூங்கில் கூடையில் ஏறி, அதன் கேப்டன், பில் ஹாரோப் அருகே நின்று கொண்டேன்.
எங்கள் குழுவினர், 15 பேர், அந்த மூங்கில் கூடையில் ஏற, பலுான் உயர பறக்கத் துவங்கியது. கீழே குனிந்து பார்த்த போது...
— தொடரும்.
ஆழ்கடலில் கப்பல் பயணம்!
தென் ஆப்ரிக்காவின் நைஸ்னா நகரில் உள்ள துறைமுகம், இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இயற்கையான துறைமுக நகரம்! தென் ஆப்ரிக்காவுக்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள், இங்கு குடியேறி, சர்வதேச நகரமாக மாற்றியுள்ளனர்.
வீடுகளும், கடைகளும், ஐரோப்பாவை நினைவுகூரும் வகையில் உள்ளன.
அந்த கடலில், பாய்மர கப்பலில் சாகச பயணம் சென்றோம்.
நாங்கள் புறப்பட்ட போது, அமைதியாக இருந்த இந்திய பெருங்கடல், சற்று நேரத்தில் ஆக்ரோஷமாக மாறியது. இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதிக்குள் நுழைந்து செல்லப் போகிறோம் என, கப்பலை ஓட்டியவர் கூறிய போது, வயிற்றை கலக்கியது.
துறைமுகத்தின் கழிமுகப்பகுதியிலேயே அலைகளால், படகு துாக்கியடிக்கப்பட்டு, கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
மொத்தம், 20 கி.மீ., சுற்றளவு கொண்ட துறைமுகத்தை படகில் சுற்றி வந்தோம்; அலைகள் தாலாட்ட, படகிலேயே மாலை நேர சிற்றுண்டி, ஒயினுடன் நடந்தது.
மும்பையை சேர்ந்த ஒரு நபர், விசேஷமாக தயாரித்து, கப்பலுக்கு கொடுத்து அனுப்பியிருந்த, சமோசா, பூரி, உளுந்து வடை மற்றும் சிக்கன் கறியை, அனைவரும் ஒரு வெட்டு வெட்டினோம்.
ஏ.மீனாட்சிசுந்தரம்
