தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாணவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?

மாணவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?

மாணவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டூர், வீரக்கல்புதுார் பேரூராட்சி, குஞ்சாண்டியூர் அடுத்த சித்தன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், கட்டட தொழிலாளி, கோவிந்தராஜ்; இவருக்கு, இரு மகன்கள். மூத்தவர் நந்தகுமார்; வயது, 19. இளையவர், சங்கர்.

வீட்டில் வறுமை தாண்டவமாடினாலும், கட்டட வேலைக்கு சென்று, கிடைக்கும் வருமானத்தில், இரு மகன்களையும் படிக்க வைத்தார், கோவிந்தராஜ். குஞ்சாண்டியூர் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார், நந்தகுமார். படிப்பில் சுட்டியான இவருக்கு, மேட்டூர் தனியார் பள்ளியில், பிளஸ் 1 படிக்க, இலவசமாக இடம் கிடைத்தது. 2015ல்,

பிளஸ் 2 தேர்வில், 1,187 மதிப்பெண் பெற்றார். அவரின், மெடிக்கல் கட் - ஆப் மதிப்பெண், 199.25!

இவருக்கு சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் படிக்க இடம் கிடைக்கவே, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற மகனின் கனவு, மகன் மருத்துவராக வேண்டும் என்ற பெற்றோரின் கனவு நிறைவேறியது.

சாதாரண கட்டடத் தொழிலாளியான கோவிந்தராஜ், இதனால், பொருளாதார கஷ்டத்தில் தவித்தாலும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், முதல் ஆண்டு கட்டணத்தை கட்டி விட்டார்.

இந்நிலையில், மேட்டூர் தனியார் பள்ளியில் படித்த இளைய மகன் சங்கர், 2016ல் நடந்த பிளஸ் 2 தேர்வில், 1,015 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அவரையும் கல்லுாரியில் சேர்க்க வேண்டும்; அத்துடன், நந்தகுமாருக்கும் மருத்துவ கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் கோவிந்தராஜ் கூறியது:

ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த நான், 10ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பின், கட்டட வேலைக்கு சென்று விட்டேன். என் மகன்களையாவது நன்றாக படிக்க வைக்க விரும்பினேன். இதற்காக, நாள் தவறாமல் கட்டட வேலைக்கு சென்றேன். அதில், கிடைத்த வருமானத்தில், மருத்துவ கல்லுாரிக்கு, முதல் ஆண்டு கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம் என, 90 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டேன்.

இரண்டாம் ஆண்டு கல்வி கட்டணத்திற்கு வேலை செய்து, பணத்தை சேமிக்கலாம் என்றிருக்கையில், ஓராண்டுக்கு முன், மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கட்டுமானப் பணி பாதித்தது. வாரத்தில், ஆறு நாட்கள் வேலைக்கு சென்ற எனக்கு, நான்கு நாட்கள் வேலை கிடைப்பதே பெரிதாக இருந்தது. வருவாய் குறைந்ததால், நந்தகுமாரை மட்டும் படிக்க வைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து, சங்கரை கல்லுாரியில் சேர்க்கவில்லை.

இருந்த பணத்தை வைத்து, நந்தகுமாருக்கு, இரண்டாம் ஆண்டு கட்டணத்தில், பாதியை செலுத்தி விட்டேன்.

இச்சமயத்தில், தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதால், கட்டுமானப் பணி மேலும் முடங்கியது. வாரத்தில், மூன்று நாட்கள் வேலை கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. இதனால், நந்தகுமாரின் இரண்டாம் ஆண்டு நிலுவை கட்டணத்தை செலுத்த முடியவில்லை, என்கிறார் வருத்தத்துடன்!

தொடர்ந்து மாணவர் நந்தகுமார் கூறியது:

மிகுந்த சிரமத்துக் கிடையே, என்னை மருத்துவம் படிக்க வைக்கிறார், என் தந்தை. நான் மருத்துவராகி, இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என, விரும்பினேன். ஆனால், அவ்வப்போது அரசு எடுக்கும் முடிவுகள், எங்களைப் போன்ற ஏழை குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கிறது. மருத்துவ கல்லுாரியில் நிலுவை கட்டணம் செலுத்தாவிட்டால், இரண்டாம் ஆண்டு தேர்வு அனுமதி சீட்டை, தரமாட்டார்கள்.

பெற்றோர் படும் கஷ்டத்தை பார்க்கும் போது, படிப்பை விட்டுவிடலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் கனவு சிதைந்து விடக்கூடாது என்ற எண்ணமும் உள்ளது. இந்நிலையில், யாரேனும் உதவினால் மட்டுமே, என் படிப்பை தொடர முடியும், என்றார்.

தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 98425 14073

பொன்னுத்துரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us