தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாதிரி அரசாங்கம்!

மாதிரி அரசாங்கம்!

மாதிரி அரசாங்கம்!


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை -

முதலமைச்சர் அருமைநாயகத்தின் கார் உள்ளே பிரவேசித்தது; போர்டிகோவில் கார் நிற்க, மெதுவாக காரிலிருந்து இறங்கிய அருமைநாயகம், புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் கவுன்டருக்கு நடந்து சென்றார்.

''பெயர்?''

''அருமைநாயகம்.''

''வயது?''

''62.''

''தொழில்...''

''முதலமைச்சர்,'' என்றதும், சரேலென எழுந்து நின்றான், சீட்டு எழுதியவன்.

''சா...சார் நீங்க...''

''இங்க பாரு... அரசு மருத்துவமனைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள்ல நானும் ஒருத்தன்; ஆச்சரியப்படாமல், போலி மரியாதை காட்டாமல், சீட்டை எழுதிக் கொடு,'' என்றார்.

''உங்களுக்கு என்ன பிரச்னை சார்?''

''மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யணும்.''

பொது மருத்துவம் முதியோர் பிரிவுக்கு எழுதி, சீட்டை நீட்ட, அதை வாங்கினார், அருமைநாயகம்.

'காண்பது கனவா, நனவா... ஒரு முதலமைச்சர் தனியார் மருத்துவமனைக்கு போகாமல், அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறாரே...' என, வாய் பிளந்து வேடிக்கை பார்த்தது, நோயாளிகள் கூட்டம்.

முதலமைச்சர் வந்த செய்தி அறிந்து, நோயாளிகளும், மருத்துவர்களும், பணியாளர்களும் பதற்றமடைந்தனர்.

''யாரும் தேவையில்லாம கூட்டம் போடாதிங்க... நான் மருத்துவம் பாக்க வந்திருக்கேன்; அவரவர் வேலைய பாருங்க...'' என்றதும் கூட்டம் மெதுவாக கலைந்தது.

அருமைநாயகத்தை சோதித்த சிறப்பு மருத்துவர், ''உங்களுக்கு என்ன செய்யுது சார்?'' என்று கேட்டார்.

''இடது நெஞ்சு பாரமாக இருக்கு; இடது புஜத்தில் ஊசி குத்துவது போல வலிக்குது,'' என்றார்.

''ரத்த அழுத்தம், சர்க்கரை இருக்கா?''

''இருக்கு; முன்னெச்சரிக்கையாக மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யலாம்ன்னு வந்திருக்கேன்,'' என்றதும், அவருக்கு ரத்த அழுத்தம் பார்த்தார், மருத்துவர். எல்லாம் நார்மலாகவே இருந்தது.

''ரத்த அழுத்தத்துக்கும், சர்க்கரைக்கும் மாத்திரை சாப்பிடுறீங்களா?''

''ஆமாம்,'' என்று சொல்லி, மாத்திரையின் பெயர் கூறினார், அருமைநாயகம்.

''இதற்கு முன் எங்க மருத்துவம் பாத்தீங்க?'' என்று கேட்டார், மருத்துவர்.

ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொன்னார்.

''உங்க பங்களாவுக்கு வந்து உங்கள சோதிப்பாங்களா?''

''டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையிலிருந்து மருத்துவர் குழு வரும்; தேவைப்பட்டால் சிங்கப்பூர், இங்கிலாந்து ஏன்... அமெரிக்காவில் இருந்து கூட மருத்துவர்களை வரவழைத்து, செக்கப் செய்துக்குவேன்,'' என்றார், பெருமையுடன்!

''இப்போது என்ன மனமாற்றம்... எந்த போதி மரத்தடியில் ஞானம் பெற்றீங்க...'' என்று மருத்துவர் கேட்டதும், அமைதியாக அமர்ந்திருந்தார், அருமைநாயகம்.

அருமைநாயகத்துக்கு, ஈ.சி.ஜி., மற்றும் மார்பு பகுதி எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. கொழுப்பு, சர்க்கரை, ஈரல், சிறுநீரகம் செயல்படும் விதம் அறிய ரத்த பரிசோதனை நிகழ்த்தப்பட்டது.

காது, மூக்கு, தொண்டை மருத்துவர், அருமைநாயகத்தை ஆராய்ந்தார்.

கண்களை சோதித்தார், கண் மருத்துவர்.

மருத்துவர் குழு அருமைநாயகத்திடம், 'மருத்துவமனைக்குள், கெட்ட நாற்றம் அடிக்குது; சாக்கடை நீர் தேங்கி, கொசு மொய்க்கிறது; குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. கட்டடங்களின் மீது தேவையற்ற செடிகள் முளைத்துள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை வேறு இருக்கிறது. நீங்கள் இங்குதான் தொடர்ந்து மருத்துவம் செய்யப் போகிறீர்கள் என்றால் இதையெல்லாம் சரி செய்யலாமே...' என்றனர்.

''நிச்சயம் செய்றேன்,'' என்றார்.

'அரசு மருத்துவமனைகளின் உள் மற்றும் வெளி கட்டமைப்பை மேம்படுத்தினால் தான் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும், அதிகாரிகளும் தயங்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்குவாங்க. நீங்க வந்தது நல்ல ஆரம்பம்ன்னு நம்புறோம்...' என்று அவர்கள் கூறியதும், மிடறு விழுங்கிய, அருமைநாயகம், ''கவலையே படாதீங்க... எல்லாரும் அடிச்சு பிடிச்சு அரசு மருத்துவமனைக்கு வருவாங்க,'' என்றார்.

அதன்பின், சுகாதார பணியாளர்கள் தினசரி திறந்தவெளி சாக்கடைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். குப்பைகளை சேகரித்து, குப்பைகள் எரிக்கும் அறையில் கொட்டப்பட்டது. பிளீச்சிங் பவுடர் துாவி, கொசுக்களை ஒழிக்கும் ஸ்ப்ரே செய்யப்பட்டது. கோவில் யானை போல நோயாளிகளிடம் காசு வாங்கும் வார்டு பாய்கள் வாலை சுருட்டிக் கொண்டனர். தாமதமாய் வரும் மருத்துவர்கள், அவரவர் பிரிவுக்கு பதறி, சிதறி ஓடினர்.

சிதம்பரம், நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் -

மாவட்ட ஆட்சித் தலைவர், எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் நகர பணக்காரர்கள் என, எல்லாருடைய கார்களும், பள்ளி வளாகத்தில் வரிசையாக வந்து நின்றன.

அனைவரும் கூட்டமாய் தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றனர்.

தலைமை ஆசிரியர் பதை பதைத்து,''என்ன பிரச்னை, எல்லாரும் கூட்டமாய் வந்திருக்கீங்க?'' என்று கேட்டார்.

'எங்க பிள்ளைகள, உங்க பள்ளிக் கூடத்துல சேர்க்க வந்திருக்கோம்...' என்றனர்.

''ஒரே நேரத்தில் இத்தனை பேர் அட்மிஷன் கேட்டால் என்ன செய்வது?'' என்றார், தலைமையாசியர்.

'இதற்கு முன் எங்க பிள்ளைக படித்த தனியார் பள்ளிகளிலிருந்து, பிள்ளைகளோட சான்றிதழ்களை வாங்கி வந்துட்டோம். உங்க கைய, காலா பாவிச்சு கேக்கறோம்...அட்மிஷன் குடுத்துடுங்க...' என்றனர்.

''அரசு பள்ளிகள்ல ஆங்கிலம் நன்றாக சொல்லிதர மாட்டார்களே...''

''எங்க பிள்ளைகள அரசு பள்ளிகள்ல சேர்க்கும்போது, கட்டாயம் ஆங்கிலத் திறன் மேம்படும்,'' என்றார், கல்வி அதிகாரி.

''ஆசிரியர்கள், பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார்களே...'' என்று தலைமையாசிரியர் சொன்னதும், எம்.எல்.ஏ., ஒருவர், ''நாங்க வர வைப்போம்,'' என்றார், வேகமாக!

''அரசு பள்ளி ஆசிரியர்கள், கந்துவட்டி தொழில் செய்வார்கள்.''

''இனி, எப்படி செய்கிறார்கள்ன்னு நாங்களும் பாக்கிறோம்,'' என்றார், கலெக்டர்.

''இங்கு கழிப்பறை கிடையாது; சுத்தமான குடிநீர் இல்ல; கட்டடங்கள் இடியும் நிலையில இருக்கு,'' என்றார், தலைமையாசிரியர்.

'எங்கள் செலவில் இதையெல்லாம் செய்து தர்றோம்...' என்றனர், பணக்காரர்கள்.

''உங்க பிள்ளைக சத்துணவை தான் சாப்பிடணும்.''

''உணவோட தரத்தை மேம்படுத்துவோம்.''

''கல்வி கற்றுத்தரும் நவீன கருவிகள் இல்லை.''

''வாங்கி பரிசளிப்போம்.''

தலைமை ஆசிரியர் கேட்டதற்கெல்லாம் வேகமாக பதில் கூறினர், வந்தவர்கள்.

தலைமை ஆசிரியருக்கு தலை கால் புரியவில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் நடையாய் நடந்து, 'உங்க பிள்ளைகள அரசு பள்ளியில் சேருங்க...' என்று எவ்வளவு கெஞ்சியிருப்போம். தனியார் பள்ளியில் சேர்ப்பதை தங்களோட அந்தஸ்தின் அடையாளமாக கருதும் மாயை பொதுமக்களிடம் மட்டுமா இருக்கிறது... அரசு பள்ளி ஆசிரியர்களே அப்படித் தானே நினைக்கின்றனர். அரசு பள்ளிகள் தீண்டத் தகாதவர்களின் புகலிடமாக பாவிக்கப்படும் நிலையில், ஒரே இரவில் எல்லாம் தலைகீழாய் மாறி விட்டதே, என்று நினைத்தார்.

''நீங்க யாரும் என்னை கெஞ்ச வேணாம்; உங்க எல்லாருடைய குழந்தைகளுக்கும், 'அட்மிஷன்' தர்றேன். ஆனா, எனக்கு ஒரு உண்மைய மட்டும் சொல்லுங்க... நீங்க எல்லாரும் எந்த போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்றீங்க...''

அனைவரும் ஒருசேர மவுனித்து, அசடு வழிந்தனர்.

மெரினா கடற்கரை, நள்ளிரவு நேரம் -

நுாற்றுக்கணக்கான மாணவர்கள் குழுமியிருந்தனர். 'ஆபரேஷன் சக்ஸஸ்!' என்று கோரசாய் குதுாகலித்தனர். மாணவர் தலைவர் குரல் உயர்த்தி,''தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளில், 4.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரிடமும், 20 லட்சம் மாணவர்கள் கையெழுத்து வேட்டை நடத்தினோம்.

''தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள், பணக்காரர்கள், அதிகாரிகள் அனைவரும் மருத்துவம் பாக்க அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்; அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும். மீறினால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி பறிபோகும். பணக்காரர்களின் வருமான வரி, 75 சதவீதமாக வசூலிக்கப்படும். இதற்கான அவசர சட்டங்களை, மாநில அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். தவறினால், அடுத்த சில மாதங்களில் வரும் சட்டசபை தேர்தலில் அவசர சட்டம் நிறைவேற்றும் கட்சிக்கே ஓட்டளிப்போம்.

''மாநில அரசு நிறைவேற்றும் அவசர சட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களின் கையெழுத்து வேட்டையை, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடத்துவோம் என, 4.5 கோடி பேர் கையெழுத்திட்ட மெகா பார்சல் பிரதியை முதலமைச்சருக்கு அனுப்பினோம். இதன் விளைவு, அரசு மருத்துவமனைகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனி மவுசு ஏற்பட்டுள்ளது. மாணவர் புரட்சி, இனி எல்லா விஷயங்களிலும் தொடரும். மாணவர் ஒற்றுமை ஓங்குக!'' என்ற கோஷம், கடலின் ஓசையை உள்வாங்கி, எதிரொலித்து அடங்கியது.

ஜாஸ்மின்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us