PUBLISHED ON : மார் 25, 2018

நகைப்பிற்குரியவர்கள்!
சாலை விதிகளை
சகட்டு மேனிக்கு மீறும்
நாங்கள் தான்
சகல கலா வல்லவர்கள்!
விளை நிலங்களை
வீட்டு மனைகளாக விற்று தரும்
நாங்கள் தான்
விற்பன்னர்கள்!
காணும் பொருட்களிலெல்லாம்
கலப்படம் செய்யும்
நாங்கள் தான்
கண்ணியம் மிக்கவர்கள்!
போதைப் பொருட்கள்
பொதுவுடமை ஆக்கும்
நாங்கள் தான்
போற்றுதலுக்குரியவர்கள்!
அனைத்து போராட்டங்களுக்கும்
ஆள் திரட்டித் தரும்
நாங்கள் தான்
அசகாய சூரர்கள்!
வரதட்சணை என்ற பெயரில்
வாங்கிக் குவிக்கும்
நாங்கள் தான்
வருங்கால இந்திய துாண்கள்!
ஊழியம் எதுவும் செய்யாமல்
ஊதியம் வாங்கும்
நாங்கள் தான்
உழைப்பாளர்கள்!
கொடுத்த வாக்குறுதியை
குழி தோண்டி புதைக்கும்
நாங்கள் தான்
கோமான்கள்!
கல்விக்கு, கணக்கு வழக்கின்றி
கட்டணம் வசூலிக்கும்
நாங்கள் தான்
கல்வி தாளாளர்கள்!
நல்லதே நடக்குமென்று
நம்பிக் கொண்டிருக்கும்
நாட்டு மக்களே
நகைப்பிற்குரியவர்கள்!
பெ.கருணைவள்ளல்,
சென்னை.
