தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு மகளுக்கு —

நான், 70 வயது மூதாட்டி; என் கணவர் இறந்து விட்டார். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்; இருவருக்கும் திருமணம் செய்து விட்டேன்.

தன்னை விட வயது மூத்த பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான், மருமகன். இது தெரிந்து, என் மகள் சண்டை போட, அவளை அடித்து உதைத்து, 'டார்ச்சர்' செய்ய ஆரம்பித்துள்ளான்.

விஷயம் தெரிந்து, போலீசில் புகார் செய்தேன். பண பலம் மற்றும் ஆள் பலத்தால், ஜாமினில் வெளியே வந்து விட்டான். அதிலிருந்து, என் மகளை படாதபாடு படுத்தி வந்தவன், ஒருநாள், காஸ் சிலிண்டரை திறந்து வைத்து, வெளியேறியுள்ளான். அவள், அடுப்பை பற்ற வைக்க, ஒரு சில நிமிடங்களில் எரிந்து, சாம்பலாகி விட்டாள், என் மகள். போலீசில் புகார் செய்தேன்; பணத்தால் எப்படியோ சரிக்கட்டி, ஜாமினில் வெளியே வந்து விட்டான்.

அப்போதிலிருந்து, வீட்டுக்கு வந்து, வயதானவள் என்று கூட பார்க்காமல், கண்டபடி திட்டுவதும், புகாரை வாபஸ் வாங்கும்படியும், தொந்தரவு செய்து வருகிறான்.

இதையெல்லாம் பார்த்த என் மகன், 'எதற்கு வம்பு, புகாரை வாபஸ் வாங்கி விடலாம்...' என்கிறான்; ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை. எந்த தவறும் செய்யாத என் மகள், அநியாயமாக இறந்து போனாள். அந்த பாவியை சும்மா விடக்கூடாது என, வைராக்கியம் கொண்டுள்ளேன்.

மகளே... இனி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

— இப்படிக்கு, உன் தாய்.

அன்பு அம்மாவுக்கு —

தவறு செய்த மருமகனை தண்டிக்க, காவல்துறையை நாடிய உங்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். ஆனால், காவல்துறையும், நீதித்துறையும் பணம், அதிகாரம் படைத்தோர் முன், பெரும்பாலும் மண்டியிட்டு விடுகின்றன; நீதித்துறையின் தாமதம், நுாற்றுக்கு, 90 சதவீதம் குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விடுகிறது.

ஒரு வழக்கு, கீழ் நீதிமன்றத்திலிருந்து, உச்சநீதிமன்றம் வரை சென்று, குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தர, குறைந்தபட்சம், 30 ஆண்டுகள் ஆகி விடுகின்றன. அந்த, 30 ஆண்டுகளும், நாம் நீதிமன்றத்திற்கு வெளியே, குற்றவாளியுடன் ஒரு தொடர் யுத்தம் நடத்தியே தீர வேண்டும். அதில், பணம், மானம், மரியாதை, ஏன் உயிரைக் கூட இழக்க வேண்டிய ஆபத்துகளும் உள்ளன.

இந்த தொடர் போராட்டத்திற்கு மன திடமும், உயிரை துச்சமாக பாவிக்கும் தீரமும் தேவை. வழுக்கு மரத்தில், வழுக்க வழுக்க ஏறி, உச்சத்தை அடைய வேண்டும்; காட்டாற்றை எதிர்த்து எதிர்நீச்சல் போட வேண்டும். எதிராளி எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ, அதை சமாளிக்க, தேவையான ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். அதற்கு, எதிராளியுடன் விலை போகாத, கூட்டு சதி செய்யாத, வழக்காடும் திறமை உள்ள, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது, நெற்றிக்கண் கோபம் உள்ள வழக்கறிஞரை நீங்கள் அமர்த்த வேண்டும்.

வழக்கு எந்த நீதிமன்றத்தில் நடக்கிறதோ, அங்கு உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் நல்லது, கெட்டதுகளை மோப்பம் பிடிக்க வேண்டும்; குறிப்பிட்ட நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என தோன்றினால், நியாயமான அமர்வுக்கு மாற்றுதல் நலம்.

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காவல்நிலையத்தின் தொலைபேசி எண், காவல் ஆய்வாளரின் மொபைல் போன் எண் வைத்திருங்கள். மருமகன் தொந்தரவு செய்தால், உடனடியாக புகார் செய்யுங்கள்.

வழக்கின் சாதக - பாதகங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

குற்றவாளிக்கு எதிரான ஒரு பிம்பத்தை நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்க வேண்டும்; மீடியா கருத்து அதிமுக்கியம்.

வீட்டில், சி.சி.டி.வி கேமரா பொருத்துங்கள்; மருமகன் வந்து மிரட்டும் போது, அவனது செயல்களை, மிரட்டல்களை பதிவு செய்யுங்கள். அந்த ஆதாரங்களை காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் புது புகாருடன் தாக்கல் செய்து, அவனது ஜாமீனை ரத்து செய்ய முயலுங்கள்.

தற்காப்புக்கு பெப்பர் ஸ்ப்ரே, மிளகாய் பொடி வைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராய் போராடும் மெய்யான அமைப்புகளுடன் கை கோருங்கள்.

இதெல்லாம் செய்ய முடியாது என தோன்றினால், இறைவன் அவனுக்கு தகுந்த தண்டனையை, தகுந்த நேரத்தில் கொடுப்பான் என்று மனதை தேற்றி, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்.

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us