PUBLISHED ON : ஏப் 08, 2018

காலம் மாறிப்போச்சு!
ஒற்றை ஊதியத்தில்
ஒன்பது பிள்ளைகள்
ஒற்றுமையாய் வாழ்ந்தது
அந்தக் காலம்!
ஒற்றைப் பிள்ளைக்கு
இருவர் ஊதியம்
பற்றாக்குறையானது
இந்தக் காலம்!
வாசல், நடை, கூடம், முற்றம்
வாழும் வீட்டின் அடையாளம்
நேசமுடன் கூடி மகிழ்ந்தது
அந்தக் காலம்!
ஒன்று, இரண்டு, மூன்று என
படுக்கையறையே குறியீடாய்
அடிமைப்படுத்திடும் அந்நிய பண்பாடு
இந்தக் காலம்!
பாய் விரித்துப் படுத்து
களைப்புடன்
வாய் திறந்து துாங்கியது
அந்தக் காலம்!
வராத துாக்கத்தை வரவழைக்க
மருந்து, மாத்திரை தேடுவது
இந்தக் காலம்!
ஒழுக்கமுடன் பண்பும் கலந்து
எழுத்தறிவித்த கோவில்களாய்
பழுதில்லா கல்விச் சாலைகள் இருந்தது
அந்தக் காலம்!
கற்றை கற்றையாய் வசூலித்து
எழுத்தையும், அறிவையும் விற்கும்
கேவலமான கல்விச் சந்தைகள்
இந்தக் காலம்!
காசு, பணம் வேண்டி
மாசிலா மனதுடன், பக்தர்கள்
ஆலயத்தில் ஈசனைத் தொழுதது
அந்தக் காலம்!
காசு, பணம் இருந்தால் தான்
கடவுளே தரிசனம் தருவார்
ஆண்டவனும் விலை போன அதிசயம்
இந்தக் காலம்!
கர்ம வீரராய், கறை படாத
கைகளுடன், நேர்மையாய் வாழ்ந்த
ஆட்சியாளர்...
தர்ம நெறியுடன்
இருந்த அரசியல்வாதிகள்
அந்தக் காலம்!
மக்கள் நலனை சற்றும் சிந்தியாமல்
எக்கணமும் தன்னலமே குறிக்கோளாய்
வக்கணையாய் வாய் பேசும் தலைவர்கள்
இந்தக் காலம்!
— மீனாட்சி பட்டாபிராமன், மதுரை.
