PUBLISHED ON : ஜூன் 03, 2018

அ நிறம் | அளவு
என்றோ ஒருநாள்...
அன்பு தோழனே...
என்றோ ஒருநாள்
உனக்கு அழ வேண்டும்
போல் இருந்தால் தயங்காமல்
என்னைக் கூப்பிடு
ஓடோடி வருவேன்
உன் தலை சாய்க்க
என் தோள் தருவேன்!
உன்னிதழில் புன்னகையை
பூக்க வைக்க முடியுமோ
என்னவோ... ஆனால்,
உன் அழுகையை நான்
பகிர்ந்து கொள்வேன்!
என்றோ ஒருநாள்
எதுவுமே இவ்வுலகில்
உனக்கு பிடிக்காமல்
போனால்...
தயங்காமல்
என்னை கூப்பிடு
ஓடோடி வருவேன்
உன் கூடவே இருந்து
உன்னை அமைதி படுத்துவேன்!
என்றோ ஒருநாள்
என்னை
நீ அழைத்தும்
நான் மவுனித்தால்
அன்று
நீ எனக்காக
என்னை காண
ஓடோடி வருவாயா?
ஏனெனில்
அன்றைக்கு
உன் மடியும், தோளும்
எனக்கு தேவைப்படலாம்
சுகமாக அழுவதற்கு!
ஜே.சி.ஜெரினாகாந்த்,
சென்னை.
