தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா (13)

ஆச்சி மனோரமா (13)

ஆச்சி மனோரமா (13)


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம் மாடர்ன் தியேட்டர்சில் பணிபுரிந்த விஸ்வநாதன், தினமும் செட்டிற்கு வருவதும், படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளை ஏற்பாடு செய்வதுமாக இருந்தார். அவரோடு மனோரமாவிற்கு நல்ல நட்பும் கிடைத்தது.

இப்படி, படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்து, படத் துவக்க விழா ஏற்பாடுகளை ஜரூராக செய்து கொண்டிருந்தார், விஸ்வநாதன். ஆனால், பட பூஜை நடைபெறுவற்கு முன், திடீரென்று மரணமடைந்து விட்டார்.

இது, அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லாருமே சோகத்தில் மூழ்கினர். காலம் நிர்ணயித்ததை யாரால் மாற்ற முடியும்!

விஸ்வநாதன் இல்லாததால், டி.ஆர்.சுந்தரமே நேரில் வந்து பணிகளை தொடர்ந்தார். ஆனாலும், அவர் யாரென்று மனோரமாவிற்கு தெரியவில்லை.

இதனிடையே, பட பூஜைக்கான நாளும் வந்தது.

அன்று முதல் படப்பிடிப்பு -

படப்பிடிப்பிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த மனோரமாவிடம், அவரது தாயார், 'படப்பிடிப்பிற்கு முன், டி.ஆர்.எஸ்., காலில் விழுந்து நமஸ்காரம் செஞ்சிடு; மறந்திடாதே...' என்று அறிவுறுத்தினார்.

அதற்கு, 'டி.ஆர்.எஸ்., யாரென்று தெரியல... அவர் மூஞ்சி எப்படி இருக்கும்ன்னும் தெரியல... அப்புறம் எப்படி அவர் காலில் விழறது...' என்று எரிச்சலோடு கேட்டார், மனோரமா.

'அங்க இருக்கிறவங்க யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்கோ. உன்னை ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல, இந்த படம் உதவி செய்யும். கதாநாயகி வாய்ப்பு நிறைய வரும். அதனால, எப்படியாவது அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிடு...' என்றார்.

அம்மா இவ்வளவு சொன்ன பிறகும், முடியாது என்று எப்படி மறுக்க முடியும்... 'சரி...' என்றார்.

முதல் நாள் படப்பிடிப்பு ஆரம்பமானது; நிறைய பேர் குவிந்திருந்தனர். அவர்களில், யார், டி.ஆர்.எஸ்., என்று தெரியவில்லை. ஒருவரிடம் கேட்டபோது, ஓர் ஆளை சுட்டிக்காட்டி, 'அவர் தான், டி.ஆர்.சுந்தரம்...' என்றார்.

கூட்டத்திற்குள் அவரை தேடி சென்றபோது, இன்னும் இரண்டு பேர் அதேபோன்ற சாயலில் இருக்கவே, குழம்பி விட்டார், மனோரமா.

டி.ஆர்.எஸ்., என்று நினைத்து யார் காலிலாவது விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம். திரும்பவும் இன்னொருவரிடம் கேட்டு உறுதி செய்த பின், அவர் அருகே சிறிது பயத்தோடே சென்ற மனோரமா, 'ஐயா... உங்கள இப்பதான் முதன் முதலா பார்க்கிறேன்... நான் சினிமாவில் கதாநாயகியா நடிச்சு, நல்ல பேரும், புகழும் பெறணும்ன்னு என்னை ஆசிர்வதீங்க...' என்று சொல்லி, அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

அவரும் நிறைந்த மனதுடன், மனோரமாவை வாழ்த்தினார்.

பின், படப்பிடிப்பு துவங்கியது.

மாடர்ன் தியேட்டர்சின், 97வது படம் அது. அப்புறம் அவர்களின், 98 மற்றும் 99வது படங்களிலும் மனோரமாவே கதாநாயகியாக நடிப்பதற்கு ஏற்பாடாகியது.

இதனால், சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார், மனோரமா. தன் திரைப்பட வாழ்க்கை, இன்னொரு தளத்தை நோக்கி உயர்வாக செல்கிறது என்பதை நினைத்தபோதே அவர் மனம் குளிர்ந்தது.

ஆனால், கடவுளின் கணக்கு வேறாக இருந்தது. ஆம்... ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே, தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார், டி.ஆர்.சுந்தரம்.

யாருக்கு சொந்தம் திரைப்படத்தின் கதாநாயகி மனோரமா என்றதும், 'இவரா கதாநாயகி?' என்று பலரும் பரிகசித்தனர்.

டி.ஆர்.சுந்தரத்திடமே, 'ஏன் இவரை போய் கதாநாயகியா போட்டீங்க?' என்று வெறுப்பேற்றி இருக்கின்றனர்.

அவர்களுக்கு எல்லாம் வெற்றுப் புன்னகையை மட்டுமே விடையாக கொடுத்திருக்கிறார், டி.ஆர்.எஸ்.,

எனினும், தன் முடிவில் உறுதியாகவே இருந்தார். எந்தவிதமான சலனத்திற்கும், குழப்பத்திற்கும் இடம் தரவில்லை; யாருடைய வார்த்தையையும் பொருட்படுத்தவில்லை.

அப்படியானால் மனோரமாவின் திறமை மீது, அந்த அளவிற்கு அவர் நம்பிக்கை வைத்திருந்தார் என்பது தானே பொருள்.

எனவே தான், டி.ஆர்.எஸ்., மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார், மனோரமா.

தந்தையை அறியாதவர் அவர்; தந்தை பாசம் எப்படி இருக்கும், தந்தையின் அரவணைப்பு எப்படிப்பட்டது என்பதும் தெரியாது.

ஆனால், டி.ஆர்.சுந்தரத்திடம் பணியாற்றிய அந்த இரண்டு மாத காலத்திற்குள், தந்தையின் பாசம் இப்படி தான் இருக்கும் என்பதை அவரிடம் கண்டு, அளவு கடந்த அன்பை அவரிடம் செலுத்தினார்.

அவரும் தந்தையை போன்றே பரிவோடு மனோரமாவிடம் நடந்தார்.

தந்தை இல்லாத குறைதீர்ந்து போனதாக, தன் தாயிடம் பெருமையாகவும், சந்தோஷமாகவும் கூறுவதுடன், ஒவ்வொரு நாளும் அவரோடு பழகிய நிகழ்வுகளை தன் அன்னையிடம் மெய்மறந்து கூறி மகிழ்வார்.

இப்படி ஒரு தந்தையைப் போல் விளங்கிய, டி.ஆர்.எஸ்., 'திடுதிப்'பென்று மரணமடைந்தது மனோரமாவிற்கு பெரும் அதிர்ச்சியாகவும், தாங்க முடியாத சோகமாகவும் இருந்தது.

குறுகிய காலத்திற்குள் அந்த தந்தையின் பாசத்தை இறைவன் பறித்துக் கொண்டதை நினைத்து வேதனையில் அழுதார்.

காலம் தீர்மானித்ததை மாற்றும் சக்தி யாருக்கு உண்டு.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து முடிந்தது. என்றாலும், டி.ஆர்.எஸ்., சை இழந்த சோகம் மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

அந்த படத்தில் நடித்ததற்காக வாங்கிய பணத்தை, தன் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த மனோரமாவிற்கு விருப்பம் இல்லை.

குருவாயூர் கோவிலுக்கு சென்று, அங்கு லட்ச தீபம் ஏற்றினார்.

பழநி மற்றும் திருப்பதி சென்று, சுவாமிகளின் கல்யாண உற்சவத்தை நடத்தினார்.

இப்படி தெய்வ வழிபாட்டிற்காக அந்த பணத்தை செலவு செய்த மனோரமா, மாடர்ன் தியேட்டர்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் புடவையும், வேட்டியும் வழங்கினார்.

அந்த பணத்திலிருந்து சல்லிக் காசு கூட தனக்காக எடுத்துக்கொள்ளவில்லை, மனோரமா.

அந்த அளவிற்கு டி.ஆர்.சுந்தரம் மீது அபிமானம் வைத்திருந்தார், மனோரமா.

— தொடரும்

நன்றி: சங்கர் பதிப்பகம்

சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

குன்றில் குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us