தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது, 30; கணவர் வயது, 34. எங்களுக்கு, 6 மற்றும் 4 வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், கணவர். நான், தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் - டெக்னீஷியனாக உள்ளேன். மாமனார் இல்லை; மாமியார் மட்டும் எங்களுடன் உள்ளார். கணவருடன் பிறந்தவர், ஒரு அக்கா; திருமணமாகி விட்டது.

என் கணவரின் தாத்தா, கிராமத்தில் இருக்கும் வீடு மற்றும், 4 சென்ட் நிலத்தை, பேரனுக்கு கொடுக்கும்படி கூறி, இறந்து போனார்.

ஆனால், சதி செய்து, அதை அபகரித்துக் கொண்டார், நாத்தனார். அதில் பாதியையாவது, என் கணவருக்கு விட்டுக் கொடுக்க, மாமியார் எவ்வளவோ சொல்லியும், 'கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர்; அவர்களுக்கு எதற்கு சொத்து...' என்று, கொடுக்க மறுக்கிறார்.

இத்தனைக்கும், அவர் கணவர் மத்திய அரசு பணியில், நல்ல பதவியில் உள்ளார். கல்லுாரியில் படிக்கும் ஒரே மகன். கார், பங்களா என்று, சகல வசதிகளுடன் வாழ்கிறார்.

'சட்டப்படி, தாத்தா சொத்து பேரனுக்கு தான் வரணும்...' என்று கூறினாலும், ஏற்க மறுக்கிறார்.

சட்டப்பூர்வமாக அணுகலாம் என்று கூறினால், 'சொந்த அக்கா மீது வழக்கு தொடுத்து, அசிங்கப்படுத்துவதா...' என்று தயங்குகிறார், கணவர்.

இந்த பிரச்னையை, எப்படி தீர்த்துக் கொள்வது... ஆலோசனை தாருங்கள், அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

தாத்தா மற்றும் அப்பா சேர்த்து வைத்த சொத்துகளை, அலுங்காமல் குலுங்காமல், 'லபக்'குவது எப்படி என, ஒரு உறவு கூட்டமே நாக்கை தொங்கப் போட்டு அலைகிறது. வியர்வை சிந்தி உழைத்தவர் சொத்தை சுருட்டி, உல்லாச, ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புகிறோமே என்ற மனசாட்சி அவர்களுக்கு சிறிதும் உறுத்துவதில்லை.

தாத்தா சொத்தில், உன் நாத்தனார் உரிமை கொண்டாடுவது ஆச்சரியமில்லை. இறந்துபோன தாத்தா வாய் வழியாக கூறாமல், எழுத்துப்பூர்வமாய் உயில் எழுதி வைத்து போயிருந்தால், பிரச்னையை தவிர்த்திருக்கலாம். ஆனால், விபரம் இல்லாமல், அப்படி எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போய் விட்டார்.

தாத்தாவுக்கு தன்பேத்தி வழியாக, ஒரு பேரன், தன் பேரன் வழியாக ஒரு பேரன் - பேத்தி உள்ளனர். அதனால், சொத்தை, மூன்று பாகங்களாக பிரித்து, மூன்று பேரன் - பேத்திகளுக்கு கொடுப்பதே சிறந்தது.

நீ, உன் நாத்தனார் மற்றும் அவர் கணவரிடம் பேசி, இரண்டு பங்குகளுக்கான பணத்தை பெற்றுக் கொள்! நீ சொல்வதை கேட்க மறுத்தால், ஊர் பெரியவர்களை வைத்து பேசி, சமாதான உடன்படிக்கை செய்; அதன்படி உன் குழந்தைகளுக்கு இரண்டு பங்கு கிடைக்கும்.

நாத்தனாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பு. அதற்கு சரியான பதில் அனுப்பாவிட்டால், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர். வழக்கு நடக்கும்போதே, இருதரப்பு வக்கீலை வைத்து சமாதானம் பேசு. ஆயிரக்கணக்கான உரிமையியல் வழக்குகளில், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சு வார்த்தையில் தான் தீர்வு கிடைத்திருக்கிறது. வீட்டையும், நிலத்தையும், நாத்தனார் குடும்பம் விற்று விடாமல் இருக்க, இடைக்கால தடை வாங்கு.

இரு குடும்பத்தாரும் குல தெய்வம் கோவிலுக்கு போய், தாத்தா சொத்து யாருக்கு என்பதை திருவுளச் சீட்டு போட்டு முடிவெடுங்கள்.

கடைசியாக ஒரு தீர்வை கூறுகிறேன்... 'தாத்தாவின் சொத்துக்கு, நீ உரிமை கொண்டாடுகிறாய்; சரி, எனக்கான உரிமையை உனக்கு தானமாய் தருகிறேன். சொத்துக்காக, இரண்டு குடும்பங்களும் முட்டிக் கொள்ளாமல் உறவு பாராட்டுவோம்...' என சமிக்ஞை காட்டு. பெருந்தன்மையாய் நீ விட்டுக் கொடுத்தால், இறைவன் உனக்கு மூன்று பங்கு சொத்தை பரிசளிப்பான். அப்படி அவன் பரிசளிக்காவிட்டால், உன் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசப்படுத்துவான்.

'எதை கொண்டு வந்தோம், எதை கொண்டு போவதற்கு...' என்கிற கீதாசாரத்தை மனதில் இருத்து; எல்லாம் நல்லதே நடக்கும்!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us