PUBLISHED ON : நவ 04, 2018

தீபாவளி திருநாள்!
குழந்தைகள்
கொண்டாடும்
குதுாகல பண்டிகை
தீபாவளி!
உறவுகள் வருவது
புத்தாடை அணிவது
திகட்டாத தின்பண்டங்கள்
கலந்துண்டு களிப்பது என
குழந்தைகளுக்கு
மும்மடங்கு மகிழ்ச்சியை கொடுக்கும்
முத்து திருவிழா தீபாவளி!
அவர்களின் மகிழ்ச்சியால்
அனைவருக்கும் மகிழ்ச்சி
மகிழ்ச்சி பரிமாற்றத்திற்கான
பண்டிகை தான் தீபாவளி!
மகிழ்ச்சியை மட்டுமல்ல
பண்டிகை மூலம்
உன்னத நீதியை உணர்த்துவதும்
தீபாவளி திருநாள் மட்டுமே!
அகந்தை
அகற்றப்பட வேண்டிய குணம்
இதை-
நரகாசுரன் கதை மூலம்
நமக்கு சொல்வது தீபாவளி!
தாயால் அன்றி
இறப்பு இல்லை என
தலைகனத்தில் இருந்தவனின்
சரிந்த கதை தான் தீபாவளி!
குனிய மறுத்ததும்
படைத்தவன் பாதங்களை
பணிய மறுத்ததும்
அகந்தையின் அடையாளம்!
குனிந்து
பற்ற வைக்கப்படும் பட்டாசுகள்
விண்ணில் வியந்து பார்க்கும் வண்ணம்
உயர்ந்து ஒளிர்ந்து உவகை கொடுக்கிறது!
பணிபவன் உயர்த்தப்படுவான்
இதை
பட்டாசுகளின் வழியே
சூசகமாய் சொல்கிறது தீபாவளி!
தீபாவளி திருநாள்
வெடிகளை
வெடிக்கும் திருநாள் மட்டுமல்ல...
அகந்தை கூடாதென்பதை
பட்டாசுகள் வழியே படிக்கும் திருநாளும் தான்!
பிரேம்குமார், உடுமலைபேட்டை.
