
நாங்கள் தங்கியிருந்த, 'ராயல் சைகான்' ஓட்டலிலேயே மறுநாள், காலை 8:00 மணிக்கு, சிற்றுண்டியை முடித்து, வெளியே வந்தோம். 'டம்' என்ற புது பெண் வழிகாட்டி, எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார்.
'மீ காங் நதியில் படகு சவாரி செய்ய போகிறோம்...' என்று கூறியதும், சந்தோஷத்தில் குதித்தோம்.
அரைமணி நேரம் வேனில் பயணித்து, மீ காங் டெல்டா பகுதியை அடைந்தோம்.
மீ காங் என்றால், அம்மா என்று அர்த்தமாம். இந்த மீ காங் நதி, திபெத்தில் உற்பத்தியாகி, சீனா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் வழியே, 4,300 கி.மீ., துாரம் ஓடி, இறுதியில், வியட்நாமில் நுழைந்து, கடலில் கலக்கிறது.
ஆறு நாடுகளின் வழியே ஓடி வரும் இந்த நதி நீரை, எந்த பிரச்னையுமின்றி,
'மீ காங் ரிவர் கமிஷன்' என்ற அமைப்பை உருவாக்கி, ஆறு நாடுகளும், அந்த நதியின் நீரை பங்கிட்டுக் கொள்கின்றனர் என்பதை வழிகாட்டி கூறியபோது, ஆச்சரியமாக இருந்தது.
கூடவே, நம் நாட்டில், இரு மாநிலங்களுக்கிடையே, நதிநீர் பிரச்னை பல காலமாக தீர்க்கப்படாமல் குடுமிப்பிடி சண்டையாய் நீடித்திருப்பதை நினைத்தால், வேதனையாகவும், அவமானமாகவும் இருந்தது.
'கமிங் பேக் டு த பாயின்ட்...'
மீ காங் நதியில், படகில் பயணித்து, குட்டி குட்டியாய் இருக்கும் தீவுகளுக்கு அழைத்து சென்றார். இங்கு, படகை ஓட்டுபவரில் பெரும்பாலோர் பெண்கள். ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு விதமான குடிசை தொழிலை செய்யும் குடும்பங்கள் வசிக்கின்றன. நாங்கள் சென்ற முதல் தீவில், தேனீ வளர்த்து, தேன் எடுக்கும் தொழிலை செய்வோர் இருந்தனர். தேன் எடுப்பதை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்; விரும்பினால் விலைக்கு வாங்கலாம். அமெரிக்க டாலர்களில் தான் விலையை நிர்ணயித்துள்ளனர். நம்மூர் ரூபாயில் கணக்கிட்டு பார்த்தால், விலை அதிகம் தான்.
மற்றொரு தீவில், தேங்காய் மிட்டாய் செய்யும் குடும்பங்கள் நம்மை வரவேற்கிறது. தீவில் விளையும் தேங்காய்களை பிரத்யேகமான இயந்திரத்தில் துருவி, பால் எடுத்து, பெரிய அண்டாவில் காய்ச்சுகின்றனர். அத்துடன், இஞ்சி, வேர்க்கடலை கலந்து மிட்டாய் தயாரிக்கின்றனர். இதையும், நம் கண் முன் செய்து காட்டுகின்றனர்; சாப்பிட சாம்பிளும் தருகின்றனர். சுவை பிடித்திருந்தால், வாங்கிக் கொள்ளலாம்.
'லொட லொட' என்று, நிறைய பேசுவோருக்கு, இந்த ஜவ்வு தேங்காய் மிட்டாயை கொடுத்தால், சிறிது நேரத்திற்கு அவர்களால் எதுவும் பேச முடியாது; அந்த அளவுக்கு வாயில் ஒட்டிக் கொள்ளும்!
அங்குள்ள மற்றொரு கடையில், பெரிய பெரிய ஜாடிகளில், ஒயினை ஊற்றி, பாம்புகளை சுருட்டி, அடைத்து வைத்துள்ளனர். பார்க்கும்போதே, 'உவ்வே...' அதை, சாம்பிள் பார்ப்பதற்கு சிறு கிளாசில் ஊற்றி தருகின்றனர். வெள்ளைக்கார வெளிநாட்டு பயணியர், அதை பார்த்ததுமே, சாப்பிட துள்ளிக்குதித்து ஓடுகின்றனர்.
மற்றொரு தீவில், விதவிதமான பழங்களை குவித்து வைத்திருந்தனர். அன்னாசி, பப்பாளி, மாம்பழம், லிச்சி, மற்றும் உலர் பழங்கள் போன்றவற்றை துண்டுகளாக வெட்டி பரிமாறுகின்றனர்; குடிக்க மூலிகை டீயும் தருகின்றனர்.
வயிற்றுக்கு உணவு அளித்ததோடு, செவிக்கும் உணவு வழங்க, இசைக் குழுவினரை பாட வைத்து, மகிழ்விக்கின்றனர்.
இவர்கள் பாடியதும், நம்மூர் நரிக்குறவர்களின், 'டிம்பஸ்கோ ஆயாலோ... சாமியோவ்...' ஸ்டைலிலேயே இருந்தது. அவர்களது நாட்டுப்புற பாடல்கள் அனைத்தும் இந்த முறையில்தான் இருக்கும் என்று பிறகு தெரிவித்தார், வழிகாட்டி.
அங்குள்ள, சிறு ஓடையில், துடுப்பு போட்டு ஓட்டும் படகுகளில் சவாரி செய்யலாம். 2 கி.மீ., துாரத்துக்கு சவாரி செய்து, இயற்கை அழகை ரசிக்க, கட்டணம், தாய்லாந்து பணமான, 80 பாட் - இந்திய பணம், 160 ரூபாய்.
இந்த படகுகளில் துடுப்பு போடுவோர், 90 சதவீதம் பெண்கள்; அதிலும், வயதான பெண்கள் தான். அவர்கள், துடுப்பை லாவகமாக சுழற்றுவது, ஆச்சரியமாக இருந்தது.
படகின் முன்புறம் ஒரு பெண்மணி துடுப்பு போட, பின்புறம், அவரது மகளோ, சகோதரியோ ஒத்தாசைக்கு வருகின்றனர்.
இன்னொரு தீவில், குதிரை வண்டி சவாரி பிரசித்தம். நான்கு பேர் அமரக்கூடியது. அங்கு வரும் சுற்றுலா பயணியர், குதிரை வண்டி சவாரியை தவற விடுவதே இல்லையாம். 2 கி.மீ., துாரத்துக்கு கட்டணம், 2 அமெரிக்க டாலர் - ஒரு டாலர், 70 ரூபாய்.
மதிய உணவு வேளை வந்ததும், அங்கிருந்த, குடில்கள் போல் அமைந்திருந்த உணவகத்தில் சாப்பிட சென்றோம். எல்லா உணவு வகையிலுமே, ஏதோ ஒரு, ஜீவராசியை கலந்தே தயாரித்திருப்பது வாசனையிலேயே தெரிந்தது.
எந்த ஒரு அசைவ பொருளும் சேர்க்காமல், ஸ்பெஷலாக, 'வெஜிடபுள் சூப்' தயார் செய்து கொடுக்க சொன்னோம். இரண்டு, மூன்று முறை எதையெதையோ கலந்து எடுத்து வர, நாங்கள் வேண்டாமென மறுக்க, இறுதியில், வெறும் தக்காளி, வெங்காயம், 'லெட்டுயூஸ்' எனப்படும் வாசனை இலைகளை மட்டும் போட்டு சூப் தயாரித்து கொடுத்தனர்.
சூடு குறையாமல் இருக்க, டேபிள் மீது சிறு அடுப்பை பொருத்தி, சூப் பாத்திரத்தை வைத்து, கப் மற்றும் ஸ்பூனை கொடுத்தனர். நாங்களாகவே பாத்திரத்திலிருந்து எடுத்து ஊற்றி குடிக்க வேண்டும்; சுவையாக இருந்தது.
'ஸ்டிக்கி ரைஸ்'ல் தயாரிக்கப்பட்ட சோறு வாங்கி, நாங்கள் எடுத்துச் சென்ற புளியோதரை மிக்ஸ் மற்றும் தக்காளி சட்னியை கலந்து சாப்பிட்டு, வயிற்றை நிரப்பி, அங்கிருந்து கிளம்பினோம்.
முதலில் நாங்கள் பயணம் செய்த, மோட்டார் படகில் ஏறி, மீண்டும், ேஹா ச்சி மின் ஊருக்கு வந்தோம்.
மாலை, ஒரு பெரிய ஷாப்பிங் மால் முன் நிறுத்தி, தேவைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள கூறினார், வழிகாட்டி.
வரிசையாக ஏராளமான கடைகள் அணிவகுத்திருந்தன. தோல் பொருட்கள் தான் அதிகம். தவிர, அலங்கார பொருட்கள், வாட்ச், துணிக் கடை, மொபைல் போன்கள் என, குவிந்திருந்தன. விலை அதிகம் என்பதால், சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.
எங்கள் முகம் வாடியதை அறிந்த வழிகாட்டி, 'நைட் மார்க்கெட்' என்று, நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகிலேயே இருப்பதாகவும், இரவு முழுதும் கடைகள் திறந்திருக்கும். அங்கு விலை சற்று குறைவாக இருக்கும், எனக் கூறி, எங்களை, 'ராயல் சைகான்' ஓட்டலில் விட்டுச் சென்றார்.
ஓட்டலுக்கு சென்று, குளித்து, இரவு உணவு உண்ண வெளியே வந்தால்...
— தொடரும்.
வியட்நாம் நாட்டில் ஓடும் அனைத்து வாகனங்களும், இடது பக்க டிரைவிங் கொண்டவை. காதைப் பிளப்பது போன்று, யாரும் ஒலி எழுப்புவதில்லை.
* சாலைகளில், வாகனங்கள், 50 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்ல அனுமதியில்லை. போக்குவரத்து காவலர்களை எங்கும் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சாலையில் ஆங்காங்கே கேமரா பொருத்தப் பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே, போக்குவரத்தை கண் காணிக்கின்றனர்.
'ஹெல்மெட்' அணியாமல் சென்றாலோ, அதிக வேகத்தில் சென்றாலோ, உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, அபராதம் விதிக்கின்றனர்.
- ந.செல்வி