PUBLISHED ON : நவ 04, 2018

நரகாசுரனை அழித்து, தீபாவளி கொண்டாட காரணமான கிருஷ்ணருக்கு, பல கோவில்கள் உண்டு. ஆனால், நாகர்கோவிலின் ஒரு பகுதிக்கு, அவரது பெயரையே சூட்டி அழைக்கின்றனர். அங்கு, ஒரு கிருஷ்ணர் கோவிலும் இருக்கிறது. நரகாசுரனை அம்பு எய்து கொன்ற, சத்யபாமாவுக்கு, இங்கு தனி சன்னிதி உள்ளது.
ஆதித்த வர்ம மகாராஜா காலத்தில், அவரது எல்லைக்கு உட்பட்டு இருந்தது, நாகர்கோவில். குருவாயூரப்பன் பக்தரான இவர், தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில், குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். ஒருநாள் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக, அவரது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.
அதன்படி கோவில் கட்டிய மன்னர், தான் கனவில் கண்ட வடிவத்திலேயே கிருஷ்ணர் சிலையை வடித்து, பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு, நவநீத கிருஷ்ணர் - நவநீதம் என்றால் வெண்ணெய் என, பெயர். கிருஷ்ணரே கனவில் வந்து சொன்னதால், கோவில் அமைந்த பகுதிக்கு, கிருஷ்ணன் கோவில் என்று பெயர் சூட்டினார்.
மூலஸ்தானத்தில், கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்று மடக்கி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் ராஜகோபாலர், பாமா - ருக்மிணியுடன் காட்சி தருகிறார்.
மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில், கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது, ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பட்டார். இதன் அடிப்படையில், இங்கு, மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர்.
சித்திரையில் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது, ராஜகோபால சுவாமி, தேரில் எழுந்தருளுவார். வைகுண்ட ஏகாதசியன்று, இவரே சொர்க்கவாசல் கடப்பார். இத்தலத்து கிருஷ்ணர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால், இவரது பெயரில் இந்தக் கோவில் இருக்கும் இடம், கிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
தினமும் அர்த்த ஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை, வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். இந்த சமயத்தில், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்து, பால் பாயசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல் மற்றும் சர்க்கரை படைக்கின்றனர்.
சித்திரை பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில், கையில், வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார், கிருஷ்ணன். ஏழாம் நாளில், இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம், விசேஷமாக நடக்கும்.
சித்ரா பவுர்ணமியன்று, இங்குள்ள பழையாறுக்கு சென்று, ஆராட்டு வைபவம் காண்பார். ஆடி மாதம் கடைசி சனிக்கிழமையன்று, புஷ்பாபிஷேகம் நடக்கும். அன்று, மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டும் தெரியும்படி அலங்கரிப்பர்.
மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடி மரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர் எட்டு திசை காவலர்கள் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார் மற்றும் விஷ்வக்சேனர் ஆகியோர் ஒரே சன்னிதியில் காட்சி தருகின்றனர்.
பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார். சபரிமலையில், மண்டல பூஜை நடக்கும் நாளன்றும், தை மாத பிறப்பன்றும், இந்த தண்டத்திற்கு பூஜை நடக்கும். சாஸ்தா சன்னிதி உள்ளது.
மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லி மரம் இத்தலத்தின் விருட்சம். செல்வ வளம் வேண்டி இந்த மரத்தை வணங்குவர்.
குரங்கை வைத்து வயலை உழுவதைப் போன்ற சிற்பம், வித்தியாசமாக உள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் செல்லும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
தி.செல்லப்பா