/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தீபாவளி - எல்லாரும் கொண்டாடுவோம்!
/
தீபாவளி - எல்லாரும் கொண்டாடுவோம்!
PUBLISHED ON : நவ 04, 2018

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அடுத்த படியாக, உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை, தீபாவளி. தீபாவளி என்றாலே, சத்ய பாமாவின் புதல்வன் நரகாசுரனை, கிருஷ்ண பரமாத்மா அழித்தது தான் நமக்கு தெரியும். ஆனால், அந்த தீபாவளி பண்டிகையின் காரணத்தை எப்படியெல்லாம் வரையறுக்கின்றனர் என்பதை பார்ப்போம்...
ராமர், வனவாசம் முடிந்து, சீதையுடன் அயோத்தி திரும்பிய நாளில், மக்கள், தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றி, மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினர். அதுவே, தீபத் திருநாளாக மாறியது
தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. அதை, 'தாந்த்ரேஸ்' தினமாக கொண்டாடுகின்றனர். அன்று, சொக்காட்டான் ஆடினால், செல்வம் பெருகும் என்று, தீபாவளி தினத்தில், குஜராத்தியர்கள், சொக்கட்டான் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்
பாற்கடலை கடைந்த போது, ஐப்பசி அமாவாசை தினத்தன்று, முதன் முதலாக மகாலட்சுமி அவதரித்ததை, அவள் பிறந்த தினமாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது
கவுரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று, வனவாசம் சென்ற, பஞ்ச பாண்டவர்கள், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு திரும்பிய போது, விளக்குகள் வைத்து வரவேற்ற தினமாகவும், தீபாவளி கருதப்படுகிறது
ஈசனின் இடப்பாகத்தை பிடிக்க, சக்தி, 21 நாட்கள், 'கேதார கவுரி விரதத்தை' புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து, ஐப்பசி அமாவாசை நாளில் முடித்ததால், ஜோதி சொரூபமான இறைவனை வணங்கும் நாளாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது
எமனிடம், சாவித்திரி போராடி, சத்தியவானை உயிரோடு மீட்ட நன்னாளே, தீபாவளி திருநாள்
தன் முன்னோர், புனிதமடைய வேண்டி, பகீரதன், தேவலோக கங்கையை பூமிக்கு எடுத்து வந்த நாளே, தீபாவளி திருநாள்
கோகுலத்தில் பெரும் மழையில் தவித்தவர்களை, தன் ஒற்றை விரலால் கோவர்த்தனகிரி மலையை துாக்கி, கிருஷ்ண பகவான் பாதுகாத்தார். கோகுலத்தினர், கோவர்த்தனகிரியை வழிப்பட்ட நாளே, தீபாவளி
விக்கிரமாதித்தன் முடிசூட்டி, அரியணை ஏறிய தினமாக கூறப்படுகிறது, தீபாவளி
கி.மு., 4-ம் நுாற்றாண்டில், சந்திரகுப்தன் ஆட்சி காலத்தில், 'தீபாவளியார்' என்ற துறவி வாழ்ந்து வந்தார். இவர், சந்திர குப்தனிடம், 'ராவணனை வென்று ராமர், சீதையை மீட்ட நாளை, மிகப்பெரிய திருநாளாக கொண்டாட வேண்டும்...' என கோரிக்கை வைத்தார். மறுக்கவே, துறவி போராடினார். இதனால், கோபமுற்ற சந்திர குப்தன், துறவியை கழுவிலேற்றி கொன்றான்.
அன்று முதல், நாட்டில் மழையின்றி, பஞ்சம் தலைவிரித்தாடியது. 'துறவியின் ஆசையை நிறைவேற்றினால், நாடு சுபிட்சம் அடையும்...' என, கூறினர், ஜோதிடர்கள். இதன் பின், ராமர் வென்ற நாளை, அத்துறவியின் பெயரால் தீபாவளி திருநாளாக கொண்டாடி மகிழ ஆணையிட்டுள்ளான், சந்திர குப்தன்
நேபாளத்தில், 'பஞ்சக்' என்ற பெயரில், தீபாவளி, ஐந்து நாட்கள், உழவர் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது
காசியில், அன்னபூரணி தேவி, லட்டு தேரில் பவனி வருவது, கண்கொள்ளா காட்சி. அங்கு நடக்கும் மிட்டாய் திருவிழா, பிரசித்தி பெற்றது
ஜைனர்கள் கூற்றுப்படி, மஹாவீரர் முக்தியடைந்த நாளே, தீபாவளி
சீக்கியர்கள், தீபாவளி அன்று, தங்கள் மதகுரு குருநானக், நிர்வாணம் அடைந்த நாள் என்று, அமிர்தசரசில் உள்ள குளத்தின் படிகளில், ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றி அலங்கரிப்பர்
வட மாநிலங்களில், 'சோட்டி தீபாவளி' என்று, ஐந்து நாட்களுக்கு, லட்சுமி பூஜையாக கொண்டாடப்படுகிறது
கோவாவில், தமிழகத்தை போலவே, நாக சதுர்த்தி அன்று, தீபாவளி கொண்டாடப்படுகிறது
சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில், தீபாவளி அன்று, தீமிதி விழாவும், இரவு, தங்க தேரோட்டமும் நடக்கும்
மத்தியப்பிரதேசத்தில், தீபாவளி பண்டிகையின் இரண்டாம் நாள், 'ரூப் சதுர்த்தி' அதாவது, அழகு பண்டிகை. அன்று, பெண்கள், புனித நீராடி, தியானம் செய்தால், அழகும், வசீகரமும் நிலைக்கும் என்பது, ஐதீகம்
ஒடிசாவில், தீபாவளியன்று, முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம்
மேற்குவங்கத்தில், மகிஷாசுரனை வதைத்த பின், விலாய தாண்ட நடனம் ஆடிய காளி தேவியை நினைவுபடுத்தும் வகையில், தீபாவளி கொண்டாடப்படுகிறது
மலேஷியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில், 'ஹரி' தீபாவளி என, கொண்டாடப்படுகிறது. ராவணனை அழித்ததற்காக, ராமனுக்கு, மண் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றுகின்றனர்
பவிஷ்யோத் புராணம், 'தீபாவளி' என்றும், நீலமோ புராணம், 'தீபோற்சவம்' என்றும், காலவிவேகம் என்ற நுால், 'சுக ராத்திரி' என்றும், தீபாவளியை குறிப்பிடுகின்றன.
ஐப்பசி மாதம் இருள் கூடி, பனி சூழும் காலம். இருளையும், குளிரையும் விலக்க நெருப்பு மூட்டி, உஷ்ணம் ஏற்றும் வகையில், தீபாவளி கொண்டாடப்பட்டிருக்கலாம் என்கிறார், எழுத்தாளர், கி.ராஜநாராயணன்.
புராணங்களில், தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மக்களின் தீய எண்ணம் அழிந்து, ஆன்ம ஜோதி ஒளிர்வது தான் தீபாவளியின் தாத்பரியம்.
மதங்கள், மொழிகள் வேறுபட்டாலும், ஒருமைப்பாட்டுடன் தீபாவளியை கொண்டாடுவோம்!
- எம்.விக்னேஷ்