
ஆரம்ப காலங்களில், ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு, 1,000 ரூபாய் தான் சம்பளம். அப்புறம், 2,000 ரூபாய் வரை வாங்கினார். தேவர் பிலிம்ஸ், வேட்டைக்காரன் என்றொரு படத்தை தயாரித்தது. அப்போது அவருக்கு, முதன் முதலாக, 1௦ ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. அன்றைய காலகட்டத்தில் அது மிகப்பெரிய சம்பளம்.
ஒரு கட்டத்தில், ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 'டப்பிங்' பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன, ஓரளவுக்கு நல்ல வருமானமும் கிடைத்தது.
இதுபோன்ற ஒரு சூழலில், இந்தியா - சீனாவிற்கு இடையே போர் வந்தது. நடிகர்கள் அனைவரும் நிதியுதவி செய்தனர். அப்போது, தங்கம், சவரன், 50 ரூபாய்க்கு விற்றது. பின், போர் வந்ததும், சவரன் 100 ரூபாய் ஆனது.
போருக்கான நிதியை வழங்க ஆசைப்பட்டார், மனோரமா. 1,000 ரூபாய் எடுத்து, 10 சவரன் நகை வாங்கினார். அவரிடம் ஏற்கனவே, 20 சவரன் நகை இருந்தது. அனைத்தையும் சேர்த்து, 30 சவரன் நகையை, போர் நிதியாக கொடுத்தார்.
'நம்ம வாழ வச்ச நாட்டுக்கு, நாம ஏதாச்சும் செய்யணும்ல...' என்றார், மனோரமா.
மனோரமா, எப்படி நடித்திருந்தாலும், அவரது நடிப்பை பாராட்டி பேசாதவர்கள் இரண்டே இரண்டு பேர் தான்...
ஒன்று, அவரது அம்மா; மற்றொருவர், சிவாஜி கணேசன்.
மிக நன்றாக நடித்திருந்தாலும், அதை பாராட்டியே பேச மாட்டார்கள்.
ஆனால், ஒரு படத்தில், மனோரமாவின் நடிப்பை பார்த்து, புகழ்ந்து தள்ளி விட்டார், சிவாஜி கணேசன்.
'பாஷையை மாற்றிப் பேச, மனோரமாவை விட்டா வேற யார் இருக்கா; இன்னொருவரால் இப்படி பேசவே முடியாது...' என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
அனுபவி ராஜா அனுபவி படத்தில், துாத்துக்குடி பாஷை பேசி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார், மனோரமா. அந்த படத்தை பார்த்து தான், சிவாஜி அவ்வாறு பாராட்டி பேசினார்.
இதைக் கேட்ட மனோரமாவுக்கு, ஆகாயத்தில் இறக்கை கட்டி பறப்பதை போலிருந்தது. 1991ல், ஞானப்பறவை என்ற படத்தில், நடிகர் திலகத்திற்கு ஜோடியாக, மனோரமா நடித்தது குறிப்பிடத்தக்கது.
மனோரமாவை, 'ஆச்சி' என்று தான் பலரும் அன்போடு அழைப்பர். இந்த பெயர் அவருக்கு வந்ததே, ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான்...
மனோரமா, செட்டிநாட்டில் வளர்ந்தவர் என்பதால், அவருக்கு அந்த பாஷை நன்றாகவே தெரியும்.
சுகி.சுப்ரமணியத்தின், காப்புக்கட்டி சத்திரம் என்றொரு நாடகம், 1962ல், வானொலியில், 66 வாரம் தொடர்ந்து ஒலிபரப்பானது. அதில், மனோரமாவுடன், நாகேஷும் நடித்தார். அந்த நாடகத்தில், இளநீர் விற்கும் பெண் கேரக்டர், மனோரமாவுக்கு.
அந்த நாடகம் முழுவதும் செட்டிநாடு பாஷையில் பேசி நடித்தார். இதனால்,
ஏவி.எம்., ஸ்டுடியோவில், 'மேக் - அப்' மேன், விளையாட்டாக, மனோரமாவை, 'ஆச்சி' என்று அழைக்க துவங்கினார். இதைக் கேட்டு, ஏவி.எம்.,ல் உள்ள பலரும் அப்படியே, 'ஆச்சி... ஆச்சி...' என்று அழைக்க ஆரம்பித்தனர்.
அப்போது, ஜெய்சங்கர், லட்சுமி போன்ற திரை நட்சத்திரங்கள், மனோரமாவை எப்படி அழைப்பது என்ற தயக்கத்திலிருந்தனர். 'அக்கா' என்று கூப்பிடலாமா என்றும் அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில், ஏவி.எம்., ஸ்டுடியோவில் பலரும், 'ஆச்சி' என்று அழைப்பதை பார்த்த அவர்களும், 'ஆச்சி' என்றே அழைக்கத் துவங்கினர். அப்படியே பரவி, தமிழகம் முழுவதற்குமே மனோரமா, 'ஆச்சி' என்றானார்.
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், தன் பழமையை மறக்காத எளிமையானவர், மனோரமா. வீண் பகட்டு, படோடாபத்திற்கு அவர் இடமே கொடுத்தது இல்லை.
சிட்டுக்குருவி என்றொரு படம். அதன் படப்பிடிப்பு, மைசூரை அடுத்த தலக்காடு என்ற இடத்தில் நடந்தது. ஊரிலிருந்து ரொம்ப தொலைவில் இருந்த கோவில் ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்றது.
சிவகுமாரும் - சுமித்ராவும் நடித்த காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த படத்தில் மனோரமாவும் நடித்தார். அப்போதைக்கு அவருக்கு, 'ஷூட்டிங்' இல்லை என்பதால், அங்கிருந்த செடிகளிலிருந்து பூக்களை பறித்து, சிரத்தையுடன் கோவிலின் வெளிப்புற சுவரை ஒட்டி தரையில் சம்மணமிட்டு, பூக்களை தொடுக்க துவங்கி விட்டார்.
இதைப் பார்த்த, எஸ்.என்.லட்சுமி வியந்து போனார். மனோரமாவின் அருகே சென்று, பேச்சு கொடுத்தார்.
பந்தா இல்லாமல், எளிமையாக தரையில் அமர்ந்து, பூக்களை தொடுத்து கொண்டிருந்த மனோரமாவை பார்த்து, படக்குழுவினர் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.
சிவகுமாரின் வாரிசு நடிகர் சூர்யா, தமிழ், 'டிவி' சேனல் ஒன்றில், நிகழ்ச்சி நடத்தி வந்தார். அந்த நிகழ்ச்சியில், 'ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை யார்?' என்று கேட்டார். அதற்கான, 'க்ளூ'வையும் அவர் கொடுத்தார்.
'டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' என்று, மனோரமா பாடிய பாடலையும் சேர்த்து அவர் பாடிக் காட்டினார். அந்த ஷோவை, 'டிவி'யில் பார்த்த, மனோரமா கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் கொட்டியது.
தமிழ் கலாசாரம், பண்பாடு போன்றவற்றில் தீவிர நம்பிக்கை உடையவர் மனோரமா. நம் முன்னோர் தெரிவித்த கருத்துக்களை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அழுத்தமான அபிப்பிராயம் கொண்டவர்.
ஒருமுறை பேட்டி ஒன்றில், 'பொம்பளைங்க யாரும் ஆம்பளைங்களுக்கு முன்னாடி சாகணும்ன்னு நினைக்கக் கூடாது. ஆம்பளைங்களுக்கு அப்புறமாத்தான் பொம்பளைங்க சாகணும். ஏன்னா, நமக்காவது வீட்டு வேலை செய்யத் தெரியும். சமைக்க தெரியும். ஆனா, நம் கணவர்களுக்கு என்ன தெரியும்? அதனால, அவங்க உயிரோட இருக்கிற வரை பத்திரமா பார்த்துக்கற பொறுப்பு நமக்குத்தான்னு நினைக்கணும்.
'அதனால, நம்முடைய சாவு ஆம்பளைங்களுக்கு அப்புறமாத்தான் இருக்கணும்ன்னு ஒவ்வொரு பொம்பளைங்களும் நினைக்கணும்...' என்றார்.
பண்டைய கலாசாரத்தின் தாக்கம் தான் இந்த பேட்டி. அப்புறம், அவரது நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அது, திருநங்கை கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார். ஆனால், அது கடைசி வரை நிறைவேறவே இல்லை. அப்படியொரு கேரக்டர் கிடைத்தால், சம்பளம் வாங்காமல் நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.
ஆனால், அந்த வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவே இல்லை.
நடிகர், எம்.ஆர்.ராதாவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த காலத்தில் அவருக்கு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு; அவரது கேரக்டர் ரொம்ப முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால், நிஜத்தில் அவர் மிகவும் மென்மையானவர்; கருணை உள்ளம் கொண்டவர்.
மனோரமா நடித்த, மணிமகுடம் நாடகத்தை பார்த்த, எம்.ஆர்.ராதா, நேராக பள்ளத்துாருக்கே சென்று விட்டார். அங்கு, மனோரமாவை பார்த்து, 'நீ என் நாடக கம்பெனில சேர்ந்துடு. என்ன சம்பளம் வேணுமோ வாங்கிக்க...' என்றார்.
மனோரமாவுக்கு, இது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. ஆனாலும், அவரது நாடக கம்பெனியில் சேருவதற்கு பயம். அவரை கண்டால், எல்லாரும் பயப்படுவர். அப்படி தான் மனோரமாவும் பயந்தார். எனவே, அவரது நாடக கம்பெனியில் சேரவே இல்லை என்றாலும், அவருடன் நிறைய திரைப்படங்களில் நடித்தது உண்டு.
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
- குன்றில்குமார்