
'புதுவை மாநில தமிழ் வளர்ச்சி' என்ற நுாலிலிருந்து: 'பொதுகா' என்று சங்க காலத்திலும், வேதபுரம் என்று பிற்கால சோழர் காலத்திலும், 'பொலேசெரே' என்று டேனிஷ்காரர்கள் காலத்திலும், 'பொத்திேஷரி' என்று பிரெஞ்சுக்காரர்கள் காலத்திலும் அழைக்கப்பட்ட ஊர், புதுச்சேரி. ஆங்கிலேயர்கள், அதை பாண்டிச்சேரி என்றனர்.
'அண்ணாவின் தம்பி' என்ற நுாலிலிருந்து: அப்போதைய, தமிழக நிதி அமைச்சராக இருந்த பக்தவத்சலம், 'பேயை விரட்டுவதைப் போல், திராவிட நாட்டை விரட்ட வேண்டும்...' என்று, சட்டசபையில் பேசினார்.
உடனே, கருணாநிதி குறுக்கிட்டு, 'சென்னையில் பேய் விரட்டுவதாக கூறி, ஒரு பெண்ணை கட்டி வைத்து அடித்த பூசாரி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளது, அரசுக்கு தெரியுமா?' என்று கேட்டார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, குழந்தையம்மாள், 'தமிழர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், மண்ணுக்காக, பொன்னுக்காக, பெண்ணுக்காக என்று, சிறு சிறு விஷயங்களுக்காக கூட சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களது ஆட்சி மறுபடியும் வரவேண்டுமென்று, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். நாகரிகமான இக்காலத்தில், அப்படிப்பட்ட ஆட்சி வரலாமா?' என்று குறிப்பிட்டார்.
அடுத்த நாள் பேசிய கருணாநிதி, ஒரு புத்தகத்தை காட்டி, 'இதிலே, பொற்கை பாண்டியன் கதை இருக்கிறது. தவறாக கதவை தட்டிவிட்ட பொற்கை பாண்டியன், தன் கையையே வெட்டி, நீதி காத்தான் என்று எழுதப்பட்டுள்ளது.
'மற்றொரு பக்கத்தில், சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்கள், அந்நாட்டை சீரோடும், சிறப்போடும் ஆண்டனர் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கத்தில், பேகன் என்ற வள்ளல், மயிலுக்கு ஆடை கொடுத்தான். அவன் சிற்றரசன் மட்டுமல்ல, கல்வி - கேள்வி உள்ளவன் என்பது மட்டுமல்ல, வள்ளலாகவும் இருந்தான், என்று எழுதப்பட்டிருக்கிறது.
'இந்த புத்தகத்தை எழுதியவர் யார் என்று கேட்டால், நேற்று, இந்த சபையில், சேர, சோழ, பாண்டியர்களை பழித்துப் பேசிய குழந்தையம்மாள் தான். புத்தகத்தின் பெயர்: திராவிட மணிமலர் வாசகம்...' என்று, தாக்கியவருக்கு, அவரின் சொற்களாலேயே பதிலடி கொடுத்தார்.
ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, சத்தியமூர்த்தி மற்றும் காமராஜர் இவர்களுக்கும், அலகாபாத், ஆமதாபாத், பாட்னா, கோல்கட்டா, சேலம், சென்னை மற்றும் விருதுநகர் இவற்றுக்கும் என்ன சம்பந்தம்?
இவர்கள் பிறந்த ஊர்களா... இல்லை; இவர்கள், நகரசபை தலைவர்களாக பதவியேற்ற நகரங்கள் இவை!
'தி மிஸ்டரி ஆப் சப் - கான்ஷியஸ் மைண்ட்' என்ற நுாலிலிருந்து:
ஆழ்மனம் என்பதை, ஆங்கிலத்தில், 'சப் - கான்ஷியஸ் மைண்ட்' என்பர். மெழுகு வார்பு போன்றது மனித மூளை; நம் நினைவுகள், இந்த மெழுகு உருண்டையில் அடுக்கடுக்காக பதிகின்றன.
சில சமயங்களில், எவ்வளவு நேரம் யோசித்தாலும், ஒரு நபரின் பெயரோ, பாடலின் மெட்டோ, கதையின் தலைப்போ ஞாபகத்திற்கு வராது. ஆனால், அதை பற்றி நாம் சிந்திக்காமல் இருக்கும்போது, திடீரென, நினைவுக்கு வரும். இந்த வினோத சக்திக்கு பெயர் தான், ஆழ்மனம்.
இந்த ஆழ்மனம், நாம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது கூட விழித்திருக்கும்.
பிடிவாதமுள்ள ஒரு குழந்தையை போன்றது ஆழ்மனம். 'சொல்லுடா கண்ணா...' என்று கெஞ்சினால், 'மாட்டேன் போ...' என்று, 'பிகு' செய்யும்; 'சொல்லாவிட்டால் போயேன்... யாருக்கு வேண்டும்...' என்று நாம் அலட்சியப்படுத்தி நகர்ந்தால், வலிய வந்து நம் கால்களை கட்டி, சொல்லிவிட்டுப் போகும்.
ஏராளமான விஷயங்கள் மூளையின் மெழுகு பரப்பில் பதிந்திருப்பதால், சட்டென்று சிலவற்றை மேலே எடுத்துப் போட சோம்பல்படும். மூளைக்கு, 'டென்ஷன்' குறைவாக உள்ள நேரத்தில், இந்த ஆழ்மனம் உதவிக்கு வந்து, மறந்துபோன சங்கதியை மின்னல் வேகத்தில் நினைவுபடுத்தி, போய் விடும்!
நடுத்தெருநாராயணன்