PUBLISHED ON : நவ 04, 2018

அன்புள்ள அம்மா —
என் வயது: 30, கணவர் வயது: 35. எங்களது காதல் திருமணம். 5 - 3 வயதுள்ள, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நான், பி.ஏ., வரை படித்துள்ளேன். என் கணவர், பி.எஸ்சி., தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இரண்டு ஆண்டுக்கு முன் வரை, என் கணவர், எங்கள் மீது பாசமாக தான் இருந்தார்; எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால், இப்போதெல்லாம் எங்கள் மீது எரிந்து விழுகிறார். எங்கள் தேவைகளை பார்த்து பார்த்து செய்தவர், இப்போது, ஏதாவது கேட்டால், வாங்கி கொடுக்க மறுக்கிறார்; கேவலமாக பேசுகிறார்.
இதற்கெல்லாம் காரணம் தெரியாமல் தவித்தேன். அவரது அலுவலக நண்பரிடம் விசாரித்ததில், கணவரை இழந்த பெண் ஒருவருடன் நெருங்கி பழகுவதாக தெரிவித்தார்.
முதலில், இதை நம்பவே முடியவில்லை. அக்கம்பக்கத்தினரும், ஒரு பெண்ணுடன் பார்த்ததாக கூறவே, அவரிடமே விசாரித்தேன். எது கேட்டாலும், பதில் சொல்லாமல் தவிர்த்த அவர், இறுதியில், ஒரு பெண்ணுடன் பழகுவதை ஒப்புக்கொண்டார்.
சமீப காலமாக, மது பழக்கத்துக்கும் அடிமையாகி விட்டார். காதல் திருமணம் என்பதால், இருவருக்கும், பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆதரவு இல்லை.
இப்பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை.
சின்ன குழந்தைகளுடன் அல்லாடுகிறேன்; எனக்கு நல்ல வழி காட்டுங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
பெண்களை பொறுத்தவரை திருமணம் என்பது முன்னெப்போதையும் விட, மிகப்பெரிய சவாலாய் விஸ்வரூபித்துள்ளது. கணவர், திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடுகிறார், குடிக்கிறார். ஆனால், உன்னை தற்கொலைக்கு துாண்டவில்லை. அவரது செயலை, உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு அனுமதிக்கிறது.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
* கணவருடன் நைச்சியமாக பேசி, அவரின் திருமண பந்தம் மீறிய உறவை கை கழுவ சொல். குடும்ப செலவுக்குரிய பணத்தை கண்டிப்பாக கேட்டு வாங்கு
* அவருடன் இருந்தபடியே, உன் படிப்புக்கேற்ற வேலையை தேடு. கணவரின் உதவி இல்லாமல், நீயும், உன் மகள்களும், பொருளாதார ரீதியாய் தனித்து நிற்கும் காலத்திற்கு காத்திரு. தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், வேலை வாய்ப்பை தரும் படிப்பை படி
* உன் பெற்றோரிடம் சமாதான கொடி காட்டு. புகுந்த வீட்டு பெரியவர்களுடன் பேச முயற்சி செய். இருதரப்பு பெரியவர்கள் கண்டித்தால், உன் கணவர் திருந்த வாய்ப்புள்ளது
* பொருளாதார சுதந்திரம் அடைந்த பின், கணவரை விவாகரத்து செய். தகுந்த வரன் கிடைத்தால், மறுமணம் செய்து கொள்ளலாம். உன்னை மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பவர், இரு பெண் குழந்தைகளை ஆதரிப்பாரா என்பது பெரிய கேள்வி. அம்மாவின் சம்மதத்துடன், குழந்தைகளை, அவரது அரவணைப்பில் விடலாம்
* உனக்கென தனியே ஒரு வங்கி கணக்கு துவக்கி, உன் சம்பாத்தியத்தை அதில் சேமி. குடும்ப செலவுக்கு ஒரு பகுதி கொடு
* கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பாதுகாப்பாக, உன் கண்காணிப்பில் வை
* இரு சக்கர வாகனம் ஓட்ட கற்று, ஓட்டுனர் உரிமம் பெறு.
கணவனின் தலையில் ஏறி நிற்காமலும், காலில் விழுந்து கிடக்காமலும் சமமாய் கைகுலுக்கி கொள்ளும், வாழ்க்கை பங்குதாரராக இருங்கள். திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னை வந்தால், அழுது புலம்பாமல், கம்பீரமாக முடிவெடுக்கும் துணிச்சலை பெறுங்கள்.
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, திருமணம் என்கிற பந்தத்தை பெண்கள், ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தாய்மையின் பெண்மையை கைவிடாது துாக்கி பிடிக்க வேண்டும்.
ஆயிரம் பின்னடைவுகள் வந்தாலும், போராடி வெற்றி பெறு மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
